“தமிழர்கள் ஒவ்வொருவர் தலையிலும் ரூ.1.27 லட்சம் கடன்.. மாத வட்டி 8000”- திமுக அரசை விமர்சித்த தமிழிசை
சென்னை: "தமிழர்கள் ஒவ்வொருவர் தலையிலும் ரூ.1.27 லட்சம் கடன், ஆண்டுக்கு ரூ.65 ஆயிரம் கோடி ரூபாயை தமிழ்நாடு அரசு வட்டியாக மட்டும் செலுத்துகிறது. பெண்களுக்கு மாதம் ரூ.1,000 கொடுத்துவிட்டு, ஒரு குடும்பம் மீது 5 லட்சம் ரூபாய் கடனை ஏற்றியுள்ளனர்." என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் தகவல் பகுப்பாய்வு குழுத் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி, "அனைத்து மாநிலங்களை விடவும் அதிக கடன் நிலுவையில் உள்ள மாநிலம் தமிழ்நாடு. 2010-ஆம் ஆண்டில், உத்தர பிரதேசம் தமிழகத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக கடனுடன் இருந்தது. இப்போது, உ.பியை விட தமிழகத்துக்கு அதிக கடன் உள்ளது. வட்டிச் சுமையின் சதவீதத்தில், பஞ்சாப் மற்றும் ஹரியானாவுக்கு பிறகு தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது. தமிழகத்தின் கடன் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது" என்று தெரிவித்தார். இது அரசியல் அரச்ங்கில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழக அரசு ரூ.9 லட்சம் கோடி கடனில் உள்ளது. தமிழர்கள் ஒவ்வொருவர் தலையிலும் ரூ.1 லட்சத்து 27 ஆயிரம் கடன் உள்ளது. இதற்கு ரூ.65 ஆயிரம் கோடி வட்டி கட்டுகிறோம். ஒரு குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் கடன் உள்ளது. மாதம் ரூ.1000 கொடுத்து விட்டு, அவர்களது குடும்பத்தின் மீது ரூ.5 லட்சம் கடன் வைத்தது தான் இவர்கள் படைத்த சாதனை. காங்கிரஸ் கட்சியினரே பொறுக்க முடியாமல் இது குறித்து பேசத் தொடங்கி விட்டனர்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், அரசு மருத்துவமனைகள் குறித்த கேள்விக்கு பதில் அளித்த தமிழிசை சௌந்தரராஜன், "தனியார் மருத்துவமனைகளில் கிடைக்க வேண்டிய வசதிகள், அரசு மருத்துவமனைகளிலும் கிடைக்க வேண்டும். திராவிட மாடல் என்று கூறுவதை விட்டு விட்டு அரசு மருத்துவமனைகளை மேம்படுத்த வேண்டும். மக்களின் உயிருடன் விளையாடக் கூடாது" என்றார்.
மேலும் பேசிய தமிழிசை, "தவெக தலைவர் விஜய் தனியாக வருவது சரியா? அணியாக வருவது சரியா? என கேட்கிறார்கள். அணியாக வந்தால் தமிழக மக்களால் அணைத்து கொள்ளப்படுவீர்கள். தனியாக வந்தால் தனிமைப்படுத்தப்படுவீர்கள். தமிழக மக்களின் நலனுக்காக முடிவெடுக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம். பாஜக தவெக உடன் பேச்சுவார்த்தை எதுவும் நடத்தவில்லை. நாங்கள் பலமாக உள்ளோம். விஜய் பலவீனம் ஆகிவிடக் கூடாது என்பதற்காக சமுதாய அக்கறையில் கருத்து தெரிவிக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications