டிரெயின்ல வந்திறங்குது ஆபத்து.. ஆட்டிறைச்சி பிரியரா நீங்கள்.. அப்ப கட்டாயமாக இதைப் படிங்க
சென்னை: டெல்லியில் இருந்து ரயில் மூலமாக சென்னைக்கு வந்திறங்கிய 1,556 கிலோ கெட்டுப்போன ஆட்டிறைச்சியை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து, கெட்டுப்போன இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டு வருவது அசைவப் பிரியர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான பல்வேறு அதிர்ச்சி தகவல்களை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் பயணிகளின் போக்குவரத்து தேவையைப் பூர்த்தி செய்வதில் ரயில்வே போக்குவரத்து பெரும் பங்கு வகிக்கிறது. பயணிகள் போக்குவரத்துக்கு மட்டுமின்றி சரக்கு போக்குவரத்திலும் முக்கியப் பங்காற்றி வருகிறது. மாநிலம் விட்டு மாநிலங்களுக்குப் பொருள்களை ரயில்கள் மூலமே அனுப்பி வைக்கப்படுகின்றன. உணவுப் பொருள்களும் ரயில்கள் மூலம் அனுப்பப்படுகின்றன.

வடமாநிலத்தில் இருந்து கெட்டுப்போன ஆட்டிறைச்சிகள் ரயில் மூலமாக கொண்டு வரப்பட்டு விலை குறைவாக விற்கப்பட்டு வருவதாகவும், ஹோட்டல்களில் கெட்டுப்போன உணவுகள் வழங்கப்படுவது கண்டறியப்பட்டால் ஹோட்டலுக்கு சீல் வைத்து உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
சமீபகாலமாக அசைவுப் பிரியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சமூக வலைதளங்களை தொட்டாலே இன்னைக்கு ஒருபுடி, சன்டே சமையல், இன்னைக்கு என்ன ஸ்பெஷல் என்று பல்வேறு வகையிலான அசைவ உணவுகள் சமைப்பதும், சாப்பிடுவதும் தான் டிரெண்டிங்கில் உள்ளது. ஒருபக்கம் அசைவ உணவின் மீதான ஆர்வம் அதிகரித்தாலும், பறிமுதல் செய்யப்படும் கெட்டுப்போன இறைச்சிகள் சமயத்தில் கிலியை ஏற்படுத்தி விடுகின்றன.
இந்நிலையில், டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் கொண்டு வரப்பட்ட 1,556 கிலோ கெட்டுப்போன ஆட்டிறைச்சியை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
இதுதொடர்பாக, செய்தியாளர்களிடம் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார் கூறியதாவது: சென்னை சென்ட்ரலில் இருந்து 1,556 கிலோ கெட்டுப்போன ஆட்டிறைச்சி, ஆட்டுக்கால், காளான்கள், பார்பிக்யூ பன்னீர், ஷீக் கெபாப் உள்ளிட்ட பொருள்கள் பார்சல் செய்யப்பட்டு வந்துள்ளன. முன்னதாகவே வர வேண்டிய பொருள்கள் அனைத்தும் தற்போது வந்திறங்கியுள்ளது. வந்திறங்கிய பொருள்களில் இருந்து அதீதமான துர்நாற்றம் வீசுகிறது. ஆட்டிறைச்சிகள் புழுப்பிடித்து கிடக்கின்றன.
இந்த கெட்டுப்போன உணவுப் பொருள்களை கொடுங்கையூர் கிடங்குக்கு அழிப்பதற்காக எடுத்துச் செல்லப்படுகிறது. இதனை யார் அனுப்பியது என்பது குறித்து முழுமையான விவரங்கள் தெரியவில்லை. இப்பொருள்களை யாரும் உரிமை கோரவில்லை. இந்த கெட்டுப்போன பொருள்கள் அனைத்தும் அழிக்கப்படும். ரயில்வே துறையினர் விதிமுறைப்படி முகவரியிட்டு அனுப்புவதை உறுதி செய்து அனுப்ப வேண்டும் என்று தெரிவித்துள்ளோம்.
உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில் ரயில்வே காவல் துறையினரிடம் புகார் அளிக்கப்படும். முறையான லேபிளிங் விதிமுறைப்படி பொருள்களை அனுப்ப
வேண்டும். இந்த தேதியில், இந்த நேரத்தில் ஆடுகள் வெட்டப்பட்டுள்ளன என்பதை உறுதி செய்ய வேண்டும். இதுபோன்ற தகவல்களுடன்தான் உணவுப் பொருள்களை அனுப்ப வேண்டும். இதுகுறித்து ரயில்வே பார்சல் நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தள்ளுவண்டி, ஹோட்டல்கள் போன்றவற்றுக்கு இந்த கெட்டுப்போன ஆட்டிறைச்சி உள்ளிட்ட பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. தொடர்ந்து, சாலையோர வியாபாரிகள், ஹோட்டல் உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தள்ளுவண்டி வியாபாரிகளுக்கு இந்த கெட்டுப்போன ஆட்டிறைச்சி விற்பனை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது. அதேபோல, இறைச்சிகளை எங்கு, எவ்வாறு வாங்கலாம் என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications