கோடிகளை குவிக்க போகும் தமிழ்நாடு மின்சார வாரியம்.. 10000 கோடி ரூபாயில் புதிய திட்டம்
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள மின்பாதையில் இழப்புகள் சுமார் 11.6 சதவீதம் என்கிற அளவில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த இழப்பை குறைத்தால் பல ஆயிரம் கோடி ரூபாய் லாபம் கிடைக்கும் என கூறப்படுகிறது. எனவே மின்பாதையில் மின்சார இழப்பை தடுப்பதற்காக குறைந்த அழுத்த மின்பாதையை, உயர் அழுத்த மின்பாதையாக மாற்ற தமிழ்நாடு மின்சார வாரியம் திட்டமிட்டுள்ளது. ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பில் இந்த பணி நடக்க போகிறதாம்.
தமிழ்நாட்டில் மின்சார பணிகளை மேற்கொள்ளும் அரசின் பொதுத்துறை நிறுவனமான மின்வாரியம், தமிழக மின் வாரியம், மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், மின் தொடரமைப்பு கழகம் ஆகிய நிறுவனங்களாக செயல்படுகிறது. மின் பகிர்மான கழகத்திற்கு கட்டணம் வாயிலாக, கடந்த ஆண்டு நிலவரப்படி ஆண்டுக்கு சராசரியாக 65 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. அதை விட செலவு அதிகம் இருப்பதால், நஷ்டம் ஏற்படுகிறது.

இதனால் நிதி நெருக்கடியை சமாளிக்க, பல்வேறு நிறுவனங்களிடம் கடன் வாங்கி சமாளிக்கப்படுகிறது. மின்சார வாரியம் லாபகரமாக மாற்ற வேண்டும் என்றால் தற்போதைய நிலையில் மின்பாதையில் ஏற்படும் இழப்புகளை தடுக்க வேண்டும். அதேபோல் மின் திருட்டுகளை தடுக்க வேண்டும். தேவையற்ற நிதிசுமைகளை குறைக்க வேண்டும். அதற்கான பணிகளை மின்சார வாரியம் மேற்கொண்டு வருகிறது.
தற்போதைய நிலையில் தமிழ்நாட்டில் உள்ள மின்பாதையில் மொத்த தொழில்நுட்பம் மற்றும் வணிக இழப்புகள் சுமார் 11.6 சதவீதம் என்று கூறப்படுகிறது. இது நாட்டிலேயே மிகக் குறைவு என்றாலும், இழப்புகளை 10 சதவீதத்திற்கும் கீழ் குறைக்க தமிழக அரசு விரும்புகிறது. தொழில்நுட்பம் மற்றும் வணிக இழப்புகளில் ஒவ்வொரு சதவீதம் புள்ளி குறைப்பும் ரூ.800 கோடி லாபம் கிடைக்கும் என கூறப்படுகிறது.
எனவே தமிழ்நாட்டில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் இடத்தில் இருந்து வினியோகிக்கப்படும் இடங்களுக்கு மின்சாரத்தை கொண்டு செல்லப்படும் மின்பாதையில் ஏற்படும் இழப்பை குறைக்க, ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பில் குறைந்த அழுத்த மின்பாதையை (எல்.டி.), உயர் அழுத்த மின்பாதையாக (எச்.டி.) மாற்ற மின்வாரியம் முடிவு செய்துள்ளது.
தமிழ்நாட்டில் உயர் அழுத்த மின் பாதை எதற்கு பயன்படுகிறது: 11 கிலோ வாட் மற்றும் அதற்கு மேல் நீண்ட தூரம் அதிகமான அளவில் மின்சாரத்தை வினியோகத்திற்காக கொண்டு செல்ல உயர் அழுத்த மின் பாதை பயன்படுத்தப்படுத்தப்படுகிறது. ஆனால் குறைந்த அழுத்த பாதையானது (220 வோல்ட்) வீடுகளுக்கு மின்சாரம் வழங்குவது போன்ற குறைந்த தூரங்களுக்கு மின்சாரத்தை கொண்டு செல்ல பயன்படுகிறது. குறைந்த அழுத்த மின்பாதையைவிட உயர் அழுத்த மின்பாதையில் அதிக மின்னழுத்தம் இருப்பதால், குறைந்த அளவே மின்சார இழப்பு ஏற்படும்.
குறைந்த அழுத்த மின்பாதைகளை உயர் அழுத்த பாதையாக மாற்றுவது என்பது, சாத்தியமான இடங்களில் தொழில்நுட்பம் மற்றும் வணிக இழப்புகளைக் குறைப்பதற்கு ஒரு சிறந்த வழி என்று தமிழ்நாடு மின்சார வாரியம் நினைக்கிறது. இந்தப்பணி கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தற்போது 500 கிலோ மீட்டர் தூரத்திற்கு குறைந்த மின்அழுத்த மின்பாதை, உயர் அழுத்த மின்பாதையாக மாற்றப்பட்டு உள்ளது. அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் சுமார் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் குறைந்த அழுத்த மின்பாதை, உயர் அழுத்த மின்பாதையாக மாற்றுவதற்கு சுமார் ரூ.10 ஆயிரம் கோடி செலவாகும் என்று கூறப்படுகிறது. இந்த திட்டத்தை செயல்படுத்த மின்சார வாரியம் திட்டமிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications