ராகுல் செருப்புக்கு ரூ.10 லட்சம் விலை; விற்க மறுத்த தொழிலாளி! உபி வைரல் மேன்
சுல்தான்பூர்: ராகுல் காந்தி தைத்துப் பழகிய செருப்புக்கு ரூ.10 லட்சம் தருவதாக விலை பேசிய பணக்காரரிடம் அந்தச் செருப்பை விற்க முடியாது என்று கூறியுள்ளார் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஏழைத் தொழிலாளி ஒருவர்.
உத்தரப் பிரதேச மாநிலம் சுல்தான்பூரில் சாலையோரமாகச் செருப்பு தைக்கும் கடை வைத்திருக்கும் ராம் சேத்துடன் இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக வந்து செல்ஃபி எடுத்துக் கொள்கிறார்கள். இவர் கடை வைத்திருக்கும் சாலை வழியே போகும் அரசு அதிகாரிகள் வாகனத்தை நிறுத்தி, அந்தத் தொழிலாளியைப் பார்த்து ''ஏதேனும் உதவி தேவையா? நன்றாக இருக்கிறீர்களா?" என்று நலம் விசாரிக்கிறார்கள். வழிப்போக்கர்கள் பலர் அவரைப் பார்த்து அன்பாகப் புன்னகைக்கிறார்கள்.

இந்த மாற்றம் எல்லாம் சில நாட்களாகத்தான். இதுவரை யாராவது நம் கடைக்கு வருவார்களா? இரண்டு செருப்பு தைக்க வேலை வருமா? என்று சோகத்தில் மூழ்கிக் கிடந்த இந்தத் தொழிலாளி ராம் இன்று உபி பத்திரிகைகளில் தலைப்பு செய்தியாகி இருக்கிறார். அதற்குக் காரணம், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திதான்.
ஒரு அவதூறு வழக்கு விசாரணைக்காக சுல்தான்பூர் சென்றார் ராகுல் காந்தி. அப்போது அவர் பயணித்த சாலையோரம் ராம் சேத் என்ற செருப்பு தைக்கும் தொழிலாளியின் கடையைப் பார்த்தார். உடனே பாதுகாப்பு அதிகாரிகளை வாகனத்தை நிறுத்த சொல்லி, இறங்கி வந்த ராகுல் தனது ஷூவை தைத்துக் கொடுக்க முடியுமா? என்று கேட்டார். ராகுலைப் பார்த்ததும் அந்தத் தொழிலாளிக்கு இது கனவா? நிஜமா? என்றே புரியவில்லை.

அசந்து போன அவர் உடனே ஷுவை தைத்துக் கொடுத்தார். அவர் தைப்பதைப் பார்த்த ராகுல் தானும் தைத்துப் பழக வேண்டும் என்று கூறி தனக்கும் கற்றுத் தரச் சொன்னார். அதன்படி ராகுல் ஒரு ஷூவை எடுத்துத் தைத்துப் பழகினார். இந்தக் காட்சிகள் சமூக ஊடகமான எக்ஸ் தளத்தில் வைரலாகின. அடுத்த நிமிடம் உபியில் எங்கோ ஒரு மூலையில் முடங்கிக் கிடந்த இந்தச் செருப்பு தைக்கும் தொழிலாளியின் முகம் பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக வெளியாகியது. அதன்பின்னர் இந்தத் தொழிலாளியை பார்த்து செல்ஃபி எடுக்கப் பலர் குவியத் தொடங்கிவிட்டனர்.
இந்தத் தொழிலாளியுடன் அமர்ந்து உரையாடிய ராகுலும், அவரது வருமானம் எவ்வளவு? குடும்பத்தில் எத்தனைப் பேர்? என்ன செய்கிறார்கள்? போன்ற அடிப்படை கேள்விகளை எழுப்பினார். தனது ஷூவை சரி செய்து கொடுத்தற்காகப் பணத்தைக் கொடுத்தார். ராகுல் காந்தி வந்து சென்றது பற்றிப் பேசிய இந்தத் தொழிலாளி, "மக்கள் தங்கள் பைக்குகள், கார்களை நிறுத்திவிட்டு என்னைக் கூப்பிடுகிறார்கள். என்னுடன் போட்டோ எடுத்துக் கொள்கிறார்கள். ராகுல் எனக்கு மிகுந்த மரியாதையை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்" என்று ராம் சேத்.

ராகுல் காந்தியுடனான உரையாடல் பற்றிய கேள்விக்கு ராம் சேத்,"ஷூ எப்படி ஒட்டப்படுகிறது என அவர் என்னிடம் கேட்டார். நான் அவருக்கு அதை ஒட்டுவது எப்படி என்று செய்து காட்டினேன். அதைப் பார்த்து அவர் செய்தார்" என்று கூறியுள்ளார்.
நிருபர் ஒருவரின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் போது, "ராகுல் காந்தி எனது பார்ட்னர். நாங்கள் பார்ட்னர்ஷிப்பில் கடை நடத்துகிறோம்" என்று செருப்புத் தொழிலாளி கிண்டலாகப் பதிலளித்தார். ராம் சேத், அந்த ஷூ யாருடையதோ அந்த நபர் கேட்டால் கூட திருப்பத் தரமாட்டேன் என்றார். அதற்குப் பதிலாகத் தான் செருப்பின் விலை என்னவோ அதைக் கொடுத்துவிடுவேன் என்கிறார்.
ராகுல் காந்தியுடனான உரையாடல் பற்றிய கேள்விக்கு ராம் சேத்,"ஷூ எப்படி ஒட்டப்படுகிறது என அவர் என்னிடம் கேட்டார். நான் அவருக்கு அதை ஒட்டுவது எப்படி என்று செய்து காட்டினேன். அதைப் பார்த்து அவர் அதைச் செய்தார்" என்று கூறியுள்ளார்.

ராம் சேத் கடைக்கு மின்வசதி இல்லை. சாலையோரம் ஒரு தற்காலிக பெட்டியை அடித்து அதற்குள் கடையை நடத்தி வருகிறார். ராகுல் காந்தியுடனான இவரது புகைப்படம் சமூக ஊடகங்களில் பரவியதிலிருந்து அதிகாரிகள் அவரது குடிசையைச் சுற்றி வரத் தொடங்கியுள்ளனர். "அரசு அதிகாரிகள் இப்போது வந்து எனக்கு என்ன பிரச்சனை இருக்கிறது என்று என்னிடம் கேட்கிறார்கள். அவர்கள் யாரும் இதற்கு முன்பு வந்ததே இல்லை" என்கிறார்.
இப்போது அவருக்குச் செருப்பு தைக்கும் எந்திரம் கிடைத்துள்ளது. ஆனால், அதை மின்சாரம் இல்லாத இந்தக் கடையில் பயன்படுத்த முடியாது. இருட்டில் தையல் இயந்திரத்தை எப்படிப் பயன்படுத்துவீர்கள் என்று பிடிஐ செய்தியாளர் கேட்டதற்கு, "எனது மகனின் வீட்டில் மின்சாரம் இருக்கிறது. நான் அந்த இயந்திரத்தை அங்கே வைத்து தையல் வேலை செய்வேன்"என்று கூறியுள்ளார்.
செருப்புத் தொழிலாளியின் மகன் ரகுராம், எதிர்க்கட்சித் தலைவர் ராகுலைச் சந்தித்ததில் மகிழ்ச்சி என்று ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். "ராகுல் எங்களை மரியாதையுடனும் கண்ணியத்துடனும் நடத்தினார். நீங்கள் ஏன் இந்தத் தொழிலைச் செய்யவில்லை என்று கேட்டார். அதற்கு நான், "செருப்பு வேலை செய்யும் போது மக்கள் என்னை மதிக்கவில்லை என்று சொன்னேன். அதனால் நான் தொழிலை விட்டுவிட்டேன். நான் இப்போது கூலி வேலை செய்கிறேன் எனப் பதிலளித்தேன்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications