கோயில் திருவிழாவில் சோகம்! வெடித்து சிதறிய பட்டாசுகள்! பயந்து ஓடிய பக்தர்கள்.. சென்னை அருகே பரபரப்பு
சென்னை: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்தபோது ஏற்பட்ட விபத்தில் 10க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இவர்களுக்கு சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரையடுத்த ராமரெட்டி பாளையத்தில் பெருமாள் கோயில் ஒன்று அமைந்திருக்கிறது. இந்த கோயிலில் 5ம் வார சனிக்கிழமை திருவிழா நேற்றிரவு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சாமி ஊர்வலம் சுற்றுப்புற கிராமங்களுக்கு சென்றிருக்கிறது. அப்போது பக்தர்கள் பட்டாசுகளை வெடித்திருக்கின்றனர். இப்படி வெடிக்கப்பட்ட பட்டாசுகளிலிருந்து பறந்த தீப்பொறி ஒன்று குவித்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் மீது விழுந்திருக்கிறது. ஊர்வலம் வந்த பக்தர்களோ, சாமி தரிசனத்திற்காக காத்திருந்த பக்தர்களோ இதை கவனிக்கவில்லை. இதற்கிடையில் குவித்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் மளமளவென வெடித்து சிதற தொடங்கின.

என்ன நடக்கிறது என்பதை அறிவதற்கு முன்னர் நாலாபுறமும் இருந்த மக்கள் மீது பட்டாசு விழுந்து வெடிக்க தொடங்கியது. சம்பவத்தை பார்த்த சிலர் உடனடியாக 108 ஆம்புலன்ஸை அழைத்துள்ளனர். இந்த விபத்தில் 10க்கும் அதிகமானோருக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் அருகில் இருந்த மீஞ்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும் தீ காயம் தீவிரமாக இருந்ததால் அவர்கள் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சாமி ஊர்வலத்தில் பட்டாசு விபத்து ஏற்பட்டு 10 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் மீஞ்சூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications