சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நலிந்த முற்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு விவகாரம்.. 16 கட்சிகள் எதிர்ப்பு, 5 கட்சிகள் ஆதரவு

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் மத்திய அரசின் நலிந்த முற்பட்ட வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டு சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த 5 கட்சிகள் ஆதரவும், 16 கட்சிகள் எதிர்ப்பும் தெரிவித்துள்ளன.

பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள முன்னேறிய வகுப்பினருக்கு, 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தை பொருத்த வரை கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், 69% இடஒதுக்கீடு பின்பற்றப்பட்டு வருகிறது.

10% reservation for advanced classes. 16 parties opposed, 5 parties supported

இதனிடையே மருத்துவக் கல்லூரிகளில் முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டு திட்டத்தை, தமிழக அரசு செயல்படுத்தினால் மருத்துவப் படிப்பில் கூடுதலாக 25 சதவீத இடங்களை தமிழகத்திற்கு ஒதுக்கி தருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது. திமுகவின் கோரிக்கையை ஏற்று இன்று அனைத்து கட்சி கூட்டம் துணை முதல்வர் ஓபிஎஸ் தலைமையில் நடைபெற்றது இதில் திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள், பாஜக, பாமக, தேமுதிக, முஸ்லீம் லீக் புதிய தமிழகம் உட்பட 21 கட்சிகள் பங்கேற்றன.

இக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின் 10 சதவீத இடஒதுக்கீட்டு திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். புதிய சட்டம் இடஒதுக்கீட்டு கொள்கையை நீர்த்து போக செய்து விடும். எனவே மத்திய அரசின் புதிய சட்டத்தை தமிழக அரசு அனுமதிகக் கூடாது என வலியுறுத்தினார்.

ஆனால் இதற்கு பதிலளித்து பேசிய ஓபிஎஸ், மத்திய அரசின் புதிய இடஒதுக்கீட்டு சட்டத்தை செயல்படுத்தினால், கூடுதலாக 850 மருத்துவ பட்டப்படிப்பு இடங்கள் தமிழகத்திற்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றார்.

பின்னர் பேசிய பாஜக மாநில தலைவர் தமிழிசை மாநிலத்தில் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் 69 சதவீத இடஒதுக்கீட்டிற்கு பங்கம் வராமல், 10 சதவீத ஒதுக்கீட்டை செயல்படுத்தினால் ஏன் ஏற்க கூடாது. 10 சதவீத இடஒதுக்கீடு என்பது ஏற்றத்திற்கான திட்டமே அன்றி, ஏமாற்றத்திற்கான திட்டம் அல்ல என ஆதரித்து பேசினார்.

புதிய இடஒதுக்கீட்டை திமுக எதிர்த்த நிலையில், அக்கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, 69% இடஒதுக்கீட்டிற்கு பாதிப்பு ஏற்படாமல் 10% இடஒதுக்கீடு வழங்குவதை தமிழக காங்கிரஸ் ஆதரிப்பதாக கூறினார்.

அதே போல மார்க்சிஸ்ட் கட்சியும் ஏற்கனவே அமலில் உள்ள 69% இடஒதுக்கீட்டுக்கு பாதிப்பில்லாமல், பொருளாதாரத்தில் நலிவுற்ற பொதுப்பிரிவினருக்கு இடஒதுக்கீட்டினை கொண்டு வரலாம் என கருத்து கூறியது.

பின்னர் பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பொருளாதாரத்தில் நலிவுற்றோருக்கு 10 % இடஒதுக்கீடு என்பது சமூக நீதிக்கு எதிரானது என்றார். இக்கூட்டத்தில் பேசிய திராவிடர் கழக தலைவர் வீரமணி, பொருளாதாரத்தில் நலிவடைந்த முன்னேறிய வகுப்பினருக்கு வேறு வகையில் உதவி செய்யலாம் ஆனால் 10 % இடஒதுக்கீடு தர கூடாது என வலியுறுத்தினார்.

கூட்டத்தில் பேசிய திருமாவளவன் 10% இடஒதுக்கீட்டால் சமூகநீதிக்கு ஆபத்து, எனவே தான் மத்திய அரசின் திட்டத்தை எதிர்ப்பதாக கூறினார். மேலும் பேசிய திருமா, பொருளாதார ரீதியான இடஒதுக்கீடு வந்தால் சமூகநீதியிலான இடஒதுக்கீடு அழிக்கப்படும் என குறிப்பிட்டார்.

புதிய தமிழகம் கட்சியை சேர்ந்த கிருஷ்ணசாமி மத்திய அரசின் புதிய இடஒதுக்கீட்டு கொள்கையை ஆதரிப்பதாக கூறினார்.

இவ்வாறாக இன்றைய அனைத்து கட்சி கூட்டத்தில் நலிந்த முற்பட்ட வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்க மொத்தம் 16 கட்சிகள் எதிர்ப்பும், 5 கட்சிகள் மட்டுமே ஆதரவும் தெரிவித்துள்ளன.

English summary
At an all-party meeting in Chennai, 5 parties supported the implementation of the Central Government's 10 percent reservation legislation for the weaker sections of Tamil Nadu and 16 parties opposed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X