நீடிக்கும் கனமழை..நிரம்பும் ஏரிகள்..செம்பரம்பாக்கம், பூண்டி, புழலில் இருந்து உபரி நீர் திறப்பு
சென்னை: சென்னைக்கு குடிநீர் தரும் ஏரிகள் மளமளவென நிரம்பி வருவதால் செம்பரம்பாக்கம், பூண்டி, புழல் ஏரிகளில் இருந்து விநாடிக்கு 100 கனஅடி நீர் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. ஆற்றில் தண்ணீர் அதிக அளவில் வர வாய்ப்பு உள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாண்டாஸ் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் அதிகாலை முதலே கனமழை மற்றும் அதிக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் உள்ள ஏரி, குளம், ஆறு போன்ற இடங்களில் தண்ணீரின் அளவு அதிகரித்து காணப்படுகிறது.

மாண்டஸ் புயல் அடுத்த 3 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னைக்கு தென் கிழக்கே 270 கி.மீ., காரைக்காலில் இருந்து கிழக்கு தென் கிழக்கே 200 கி.மீ. தொலைவில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது. மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் மாண்டஸ் புயல் நகர்ந்து வருகிறது.
அடுத்து 3 மணி நேரத்தில் தீவிர புயல் என்ற நிலையில் இருந்து புயலாக மாண்டஸ் வலுவிழக்கக்கூடும் தொடர்ந்து வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து, புதுச்சேரி - ஸ்ரீஹரிகோட்டா இடையே மகாபலிபுரத்தையொட்டி கரையை கடக்கும். இன்று இரவு முதல் நாளை அதிகாலை வரை புயல் கரையை கடக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
இதனிடையே சென்னையின் குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி 25.51 சதுர கி.மீ. பரப்பளவில் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டத்தில் அமைந்துள்ளது. ஏரியின் நீர்மட்ட மொத்த உயரம் 24 அடியாகும். இதன் முழு கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடியாகும்.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல், பூண்டி ஏரிகள் அதன் முழு கொள்ளளவை தாண்டி வருகிறது. இதனால் ஏரிகளில் தண்ணீர் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் இன்று கனமழை நீடிக்கும் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் முதற்கட்டமாக 100 கன அடிநீர் உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. மழை நின்றதால் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது மழை பெய்ய தொடங்கியதால் மீண்டும் உபரி நீர் திறக்கப்படுகிறது என்று மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.
செம்பரம்பாக்கத்தில் இருந்து உபரிநீா் திறக்கப்பட்டுள்ளதால் ஆற்றங்கரையோரங்களில் உள்ள திருமுடிவாக்கம், வழுதலம்பேடு, நந்தம்பாக்கம், சிறுகளத்தூா் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications