"1000 ரூபாய்" வரப்போகுதாமே.. புதுமைப்பெண் திட்டம்.. நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.. எப்படின்னு பாருங்க
நாளை முதல் புதுமை பெண் திட்டத்தில் உதவித்தொகை பெற கல்லூரி மாணவிகள் விண்ணப்பிக்கலாம்
சென்னை: தமிழக அரசின் புதுமை பெண் திட்டத்தில் (Puthumai Pen Thittam) உதவித்தொகை பெற முதலாம் ஆண்டு மாணவிகள், நாளை முதல் நவம்பர் 11 ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுமைப் பெண் திட்டத்தில் உதவித்தொகை பெற முதலாம் ஆண்டு மாணவிகளும் ஏற்கனவே விண்ணப்பிக்கத் தவறிய மாணவிகளும் நாளை முதல் விண்ணப்பிக்கலாம். நவம்பர் 1-ஆம் தேதி முதல் நவம்பர் 11-ஆம் தேதி வரை இதற்கு விண்ணப்பிக்க முடியும்.
தமிழக அரசு சார்பில் பெண் குழந்தைகள் கல்வி கற்பதை ஊக்குவிக்க அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக எத்தனையோ, பல கல்வி உதவி திட்டங்களையும் அறிவித்து நடைமுறைப்படுத்தி உள்ளது.

சபாஷ் திட்டம்
அதில் ஒன்றுதான், புதுமைப்பெண் திட்டம் என்று பெயர் வைக்கப்பட்டது.. கல்லூரி படிக்கும் மாணவிகளுக்கு மாதாமாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம்தான் இது... ஆசிரியர் தினமான செப்டம்பர் 5ம் தேதி தொடங்கி இந்த திட்டம் வைக்கப்பட்டது. சென்னையில் நடைபெற்ற விழாவில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்றார். இதனைத் தொடர்ந்து மாணவிகளின் வங்கிக் கணக்கில் மாதம் ரூ.1000 செலுத்தப்பட்டு வருகிறது. இப்போது வரை கல்லூரிகளில் 2, 3, மற்றும் 4ஆம் ஆண்டில் பயிலும் 1.13 லட்சம் மாணவிகள் இத்திட்டத்தில் உதவித்தொகையை பெற்று பயன் அடைந்துள்ளனர்.

நாளை முதல் அப்ளை
இதன் தொடர்ச்சியாக, புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறுவதற்கு, முதலாம் ஆண்டு கல்லூரி மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கல்லூரியில் முதலாம் ஆண்டு சேர்ந்துள்ள மாணவிகள் உதவித்தொகை பெற நவம்பர் 1ம் தேதி முதல் அதாவது நாளை முதல், 11ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும். http://www.pudhumaipenn.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அப்ளிகேஷன்கள்
இந்த வெப்சைட்டில் மாணவிகள், அனைவரும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் வாயிலாக நவம்பர் 1ம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை பதிவு செய்யலாம். அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகள் மட்டுமே இந்த திட்டத்திற்கு தகுதியானவர்கள்.. மாணவிகள் தங்கள் கல்வி நிறுவனங்கள் மூலமாக மட்டுமே விண்ணப்பம் செய்ய வேண்டும்... நேரடியாக விண்ணப்பிக்கக் கூடாது. இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகுதி வரம்பு குறித்து அனைத்து மாணவிகளுக்கும் கல்வி பயிலும் நிறுவனங்களில் நவம்பர் 11 ம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறும்.

ஆதார் அட்டைகள்
மாணவிகள் தவறாமல் அவர்களுடைய ஆதார் அட்டை மற்றும் (கல்வி மேலாண்மை தகவல் திட்ட எண்ணுக்காக) எமிஸ், மாற்றுச் சான்றிதழ் ஆகியவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், இப்போது 2,3 மற்றும் 4ம் ஆண்டுகளில் படிக்கும் மாணவிகள், முதற்கட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தவறியவர்கள், தற்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் பூர்த்தி செய்யும் முறையில் மாணவிகளுக்கு சந்தேகங்கள் ஏதும் இருப்பின், சமூக நல இயக்குநராக அலுவலகத்தில் மாநில அளவில் செயல்படும் உதவி மையத்தினை திங்கள் முதல் வெள்ளிவரை, காலை 10 மணி முதல் 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.

லாஸ்ட் டேட்
தொலைபேசி எண்கள்: 9150056809,9150056805, 9150056801 மற்றும் 9150056610 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேலும் [email protected] என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். மேல் படிப்பு / தொழில்நுட்ப படிப்புகளில் முதலாம் ஆண்டு பயிலும் தகுதிவாய்ந்த மாணவிகள் அனைவரும் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். இதற்கு நவம்பர் 11 கடைசித் தேதி ஆகும். மாணவிகள் 11.11.2022 க்குள் தவறாமல் விண்ணப்பிக்க வேண்டும்" என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications