ரூ.11.50 கோடி பறிமுதல்.. 80 கோடி வரி ஏய்ப்பு.. வருமான வரித்துறையிடம் வசமாக சிக்கிய ம.நீ.ம பொருளாளர்
சென்னை: திருப்பூர் மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொருளாளர் சந்திரசேகரன் தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற வருமான வரி சோதனையில் 11 கோடியே 50 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொருளாளர் சந்திரசேகரன் பல்வேறு மாநில அரசுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள், பேக்குகள், குழந்தைகள் நல உபகரணங்கள் உள்ளிட்டவற்றை சப்ளை செய்யும் தொழில் செய்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில்தான் சந்திரசேகருக்கு சொந்தமான இடங்கள் மற்றும் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி இருந்தனர்.

பணப் புழக்கம்
வருமான வரி சோதனைகள் முடிவடைந்துள்ள நிலையில் இன்று நேரடி வரிகளுக்கான மத்திய வாரியத்தின் கமிஷனர் சுரபி அலுவாலியா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுவதால் பணப்புழக்கத்தை கட்டுப்படுத்துவதற்கும் அவற்றை கண்காணிப்பதற்கும் வருமானவரித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

சென்னையில் 5 இடங்களில் சோதனை
இதையடுத்து சென்னையில் கடந்த 16ஆம் தேதி 5 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த 5 இடங்களும் வழக்கமான தொழில்களை தவிர்த்து பணத்தை மாற்றி கொடுக்கக்கூடிய நபர்களாகவும் செயல்பட்டவர்கள் ஆகும். அங்கு நடத்தப்பட்ட சோதனைகளில் 5.32 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

தாராபுரம் தனியார் நிறுவனம்
இதே மாதிரி 17ஆம் தேதி திருப்பூர்-தாராபுரம் மற்றும் சென்னையில் மொத்தம் 8 இடங்களில் ஒரு நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினோம். இந்த நிறுவனம் கொரோனா பாதுகாப்பு முழு உடல் கவசங்கள், பைகள், குழந்தைகள் நல உபகரணங்கள் உள்ளிட்டவற்றை பல்வேறு மாநில அரசுகளுக்கு சப்ளை செய்து வரும் ஒரு நிறுவனமாகும்.

வரி ஏய்ப்பு
இந்த சோதனையின்போது அதிகப்படியான வருமானத்தை மறைத்து வரி ஏய்ப்பு செய்து உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. கணக்கில் வராத பணத்தை பயன்படுத்தி நிலம் வாங்குவது, தொழிலை விரிவாக்கம் செய்வது போன்றவற்றில் அவர்கள் ஈடுபட்டுள்ளார்கள். கணக்கில் வராத 11 கோடியே 50 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்துள்ளோம். மொத்தம் 80 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்து உள்ளது அந்த நிறுவனம். எனவே இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தீவிர கண்காணிப்பு
கணக்கில் வராத பணத்தை பறிமுதல் செய்வதன் மூலமாக, தேர்தலுக்கு அவற்றை பயன்படுத்துவது தடுக்கப்படும். தமிழகத்தில் நியாயமான தேர்தல் நடைபெறுவதற்கு இது உதவிகரமாக இருக்கும். வருமான வரித்துறையினர் தமிழகத்தில் நடக்கும் பண பரிவர்த்தனை தொடர்பாக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இவ்வாறு சுரபி அலுவாலியா தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் நடவடிக்கை எடுப்பாரா
வரி ஏய்ப்பு மற்றும் சட்டவிரோதமாக பணம் பதுக்கியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் சிக்கி உள்ளதால் சந்திரசேகர் மீது கட்சி ரீதியாக கமல்ஹாசன் நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஊழல் மற்றும் கறுப்பு பணத்துக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகிறார் கமல்ஹாசன். அவரது கட்சியை சேர்ந்த ஒருவர், அதுவும் பொறுப்பில் உள்ளவர், வருமான வரித்துறை சோதனையில் கையும் களவுமாக சிக்கி இருப்பது மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications