அடுத்த வாரம் இலங்கை செல்லும் மோடி.. இன்றும் தமிழக மீனவர்கள் மேலும் 11 பேர் சிறைபிடிப்பு கொடூரம்!
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 5-ந் தேதி இலங்கை பயணம் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழ்நாட்டு மீனவர்கள் மேலும் 11 பேரை இலங்கை கடற்படை இன்று கைது செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 11 மீனவர்கள், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை இன்று கைது செய்துள்ளது.
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்து வருகிறது. கடந்த சில மாதங்களாக இந்த கைது நடவடிக்கை தீவிரம் அடைந்துள்ளது.

தமிழக மீனவர்களை விடுதலை செய்யக் கோரி ராமேஸ்வரம் உள்ளிட்ட இடங்களில் மீனவர்கள் தொடர் வேலை நிறுத்தம் உள்ளிட்டப் போராட்டங்களை நடத்தினர். ராமேஸ்வரத்தில் மீனவர்கள் போராட்டம் நடத்திய போது ஆளுநர் ஆர்.என்.ரவி. நேரில் சந்தித்து சந்தித்து கோரிக்கை மனுவையும் பெற்றிருந்தார்.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினும் மத்திய அரசுக்கு பல்வேறு கடிதங்களை எழுதினார். தமிழக எம்பிக்களும் ராமேஸ்வரம் மீனவர்கள் விடுதலைக்காக நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் குரல் கொடுத்தும் வருகின்றனர்.
நாடாளுமன்ற ராஜ்யசபாவில், தமிழ்நாட்டு மீனவர்கள் என்ன அனாதைகளா? இந்திய கடற்படை என்னதான் செய்கிறது? இலங்கை கடற்படையால் 800 மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட போதும் ஒரு துப்பாக்கிக் குண்டை கூட இலங்கை கடற்படைக்கு எதிராக இந்திய கடற்படை ஏன் பயன்படுத்தவில்லை? தமிழக மீனவர்களும்தானே இந்திய அரசுக்கு வரி செலுத்துகின்றனர் என ஆவேசமாக கேள்வி எழுப்பி இருந்தார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.
இதனிடையே தமிழக மீனவர்கள் குழு ஒன்று இலங்கைக்கு புறப்பட்டுச் சென்றுள்ளது. அந்நாட்டு அரசுடன் தமிழக மீனவர்கள் குழு பேச்சுவார்த்தை நடத்துகிறது.
மேலும் பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 5-ந் தேதி இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார். பிரதமர் மோடி தமது இலங்கை பயணத்தின் போது தமிழ்நாட்டு மீனவர்கள் விடுதலை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவார் என்கிற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
இந்த நிலையில் இன்று ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. தமிழரின் பாரம்பரிய மீன்பிடி பகுதியில் மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றம்சாட்டி இலங்கை கடற்படை கைது செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications