இதுதான் பாய்ண்ட்.. பிரிவு 51ல் விலக்கு அளிக்க வேண்டிய அவசியம் என்ன? நெட்டிசன் எழுப்பிய முக்கிய கேள்வி
சென்னை: வாரத்தின் மொத்த வேலை நேரத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்றுதான் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தொழிற்சாலை சட்டத்தின் பிரிவு 51 இல் இருந்து விலக்களிக்கலாம் என்று அந்த மசோதா கூறுகிறது. இப்படி விலக்களித்தால் வாரத்தின் மொத்த வேலை நேரத்தையும் அதிகரிக்க வழி செய்யாதா? என்று நெட்டிசன் ஒருவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
12 மணி நேர வேலை மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. திமுக ஆதரவாளர்கள், திமுக கூட்டணி கட்சிகளே இந்த விவகாரத்தை கடுமையாக எதிர்க்கின்றன. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையான நிலையில், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அமைச்சர் தங்கம் தென்னரசு கூறும் போது, இப்போது கொண்டு வந்திருக்கக்கூடிய இந்த 25 (ஏ) சட்டத்திருத்தம் என்பது பொதுவாக இன்றைக்கு இருக்கக்கூடிய உலகளாவிய சூழ்நிலையில் புதிய முதலீடுகள் தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் வருகிறபோது மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழ்நாட்டுக்கு வரக்கூடிய நிறுவனங்கள் இங்கே நம்முடைய வேலை நேரங்களில் ஒரு நெகிழ்வுத்தன்மை இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றன.
இந்த நெகிழ்வுத்தன்மையின் மூலமாக புதிய வேலைவாய்ப்புகள் உருவாக, குறிப்பாக, பெண்களுக்கு வேலைவாய்ப்பு அதிகமாக உருவாக்கக்கூடிய ஒரு வாய்ப்பு இருக்கிறது. தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சொன்னதைப்போல, எல்லா நிறுவனங்களுக்கும் இது பொருத்தமானது அல்ல என நான் தெளிவுபடுத்துகிறேன்.

குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு மட்டுமே இந்த விதிகள் பொருத்தமாக அமையக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. உதாரணத்துக்கு, மின்னணுவியல் துறை நிறுவனங்கள் போன்றவை. அங்கு 4 நாட்கள் வேலை செய்துவிட்டு 3 நாட்கள் ஓய்வெடுத்துக்கொள்ளலாம் அல்லது வேறு பணிகளை அவர்கள் பார்க்கலாம் என்றார்.
இதனிடையே அமைச்சர் தங்கம் தென்னரசின் விளக்கத்தை ஏற்காத திமுக ஆதரவாளர்கள் பலர் பல்வேறு கேள்விகளை எழுப்பி, 12 மணி நேர வேலை மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி உள்ளனர். பூதம் என்பவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், வாரத்தின் மொத்த வேலை நேரத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்றுதான் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தொழிற்சாலை சட்டத்தின் பிரிவு 51இல் இருந்து விலக்களிக்கலாம் என்று அந்த மசோதா கூறுகிறது.

இப்படி விலக்களித்தால் வாரத்தின் மொத்த வேலை நேரத்தையும் அதிகரிக்க வழி செய்யாதா? என்று கேள்வி எழுப்பி உள்ளார். தொழிற்சாலை சட்டத்தின் பிரிவு 51 ஒரு வாரத்தில் அதிக பட்சமாக எத்தனை மணி நேரம் வேலை செய்யலாம் என்ற விதியை கூறுகிறது. இந்த பிரிவில் இருந்து விலக்களிக்க வேண்டிய அவசியம் என்ன?.

இறுதி முடிவு தொழிலாளர் கையில்தானே! என்ன பிரச்சனை என்கிறார்கள். 12 மணி நேர வேலைக்கு ஒப்புக்கொள்ளாத தொழிலாளர்களுக்கு அந்த நிறுவனம் பணி உயர்வோ சம்பள உயர்வோ வழங்காது. அல்லது வேறு காரணங்களை சொல்லி பணி நீக்கம் செய்யும். ஆகவே அதை ஒப்புக்கொள்ளும் நிலைக்கு தொழிலாளர்கள் தள்ளப்படுவார்கள்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications