புதிய கல்விக் கொள்கையை உருவாக்க தனி குழு! விஸ்வநாதன் ஆனந்த் உட்பட அந்த 13 பேர் விவரம் இதோ!
சென்னை: தமிழக அரசின் புதிய கல்விக் கொள்கையை வடிவமைக்க ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 13 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
இந்தக் குழுவில் பிரபல சதுரங்க விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்தும் இடம்பெற்றிருக்கிறார்.
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது;

சமூக நீதி
சமூக நீதிப் பாதையில் முனைப்போடு செயல்பட்டு வரும் கழக அரசு, அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு அனைத்துத் தொழிற்கல்வி இடஒதுக்கீட்டுப் பிரிவுகளிலும், 7.5 விழுக்காடு இடங்கள் முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்து, அவர்களது கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்துக் கட்டணங்களையும் அரசே ஏற்று நடைமுறைப்படுத்தி வருவதோடு, 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு அரசுத் தேர்வுகளில் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவர்களின் கல்விச் செலவையும் அரசே ஏற்று வருகிறது.

உயரிய இலக்கு
அதேபோன்று, மத்தியத் தொகுப்பிற்கு மாநிலங்கள் வழங்கும் மருத்துவக் கல்வி இடஒதுக்கீட்டில், பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை சட்டபூர்வமாக நிலைநாட்டி சமூக நீதிப் போராட்டத்திற்கு மற்றொரு மணிமகுடத்தைக் கழக அரசு சூட்டியுள்ளது. மேலும், சமத்துவ சமுதாயத்தை உருவாக்கிச் சாதிப்பதற்கான மிகவும் முக்கியமான சாதனம் கல்வி என்பதை உணர்ந்து, மாணவ மாணவியர்களுக்கு சலுகைகள் வழங்குவதிலும், உதவிகள் புரிவதிலும்; தமிழகத்தின் இளையசக்திகள் அனைத்தும் உயர்கல்வியை அடைந்தாக வேண்டும் என்பதைத் தன் உயரிய இலக்காகக் கொண்டு கலைஞர் காட்டிய வழியில் இந்த அரசு முனைப்போடு செயல்பட்டு வருகிறது.

கல்வி உரிமை
அதோடு மட்டுமல்லாமல், ஏழை எளிய நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த வசதியற்ற கிராமப்புற கடைக்கோடி மாணவர்களின் எட்டாக்கனியாக இருக்கும் மருத்துவக் கல்வி வாய்ப்புக்காக, நீட் தேர்வு முறையை விலக்கக் கோரும் சமூகநீதிப் போராட்டத்தின் தொடர்ச்சியாக, கடந்த 8-2-2022 அன்று கூட்டப்பட்ட தமிழக சட்டப் பேரவை சிறப்புக் கூட்டத்தில் நீட் விலக்கு சட்டமுன்வடிவு மீண்டும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, மேதகு குடியரசுத் தலைவர் அவர்களின் ஒப்புதலைப் பெறுவதற்கு ஏதுவாக, மாண்புமிகு ஆளுநர் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது சமூகத்தில் பின்தங்கிய மாணவச் செல்வங்களின் கல்வி உரிமையை மீட்டு, அவர்களின் வாழ்வில் ஒளியேற்றுவதற்கான தொடக்கப்புள்ளியாகும்.

அறிவியல் யுகம்
இன்றைய அறிவியல் யுகம் நொடிதோறும் வளர்ந்து கொண்டிருக்கிறது. ஒருசில ஆண்டுகளுக்கு முன் கனவில் கூட எண்ணமுடியாத சில புதுமைகள், இன்றைக்கு மலர்ந்து அறிவு மணம் பரப்புகின்றன. இன்றைய அறிவியல் நாளை பழைமை அடைவது திண்ணம். எனவே, மாணவர்கள் வருங்காலத்தின் அறிவியல் விடியலைக் காண்பதற்கேற்ப, கல்வி வளர்ச்சிக்கேற்ப புதிய பரிமாணங்களில் திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது.

குழு அமைப்பு
அந்தவகையில், கடந்த 2021-22ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் "தமிழ்நாட்டின் வரலாற்று மரபு, தற்போதைய நிலைமை, எதிர்காலக் குறிக்கோள்களுக்கு ஏற்ப, மாநிலத்திற்கெனத் தனித்துவமான மாநிலக் கல்விக் கொள்கை ஒன்றை வகுப்பதற்கு, கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்களைக் கொண்ட உயர்மட்டக் குழு ஒன்றை இந்த அரசு அமைக்கும்'' என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த அறிவிப்பைச் செயல்படுத்தும்விதமாக, தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கையை வடிவமைப்பது குறித்து ஆய்வு செய்திட, பின்வரும் சான்றோர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

யார் யாருக்கு வாய்ப்பு?
இக்குழுவின் தலைவராக மாண்பமை தில்லி உயர்நீதிமன்ற மேனாள் தலைமை நீதியரசர் திரு.த.முருகேசன் அவர்களும்;
உறுப்பினர்களாக பேராசிரியர் திரு. எல். ஜவஹர்நேசன், முன்னாள் துணைவேந்தர், சவீதா பல்கலைக்கழகம்;
திரு. இராமானுஜம், ஓய்வு பெற்ற கணினி அறிவியல் பேராசிரியர், தேசிய கணித அறிவியல் நிறுவனம்;
பேராசிரியர் திரு. சுல்தான் இஸ்மாயில், மாநிலத் திட்டக்குழு உறுப்பினர்;
பேராசிரியர் திரு. இராம சீனுவாசன், மாநிலத் திட்டக்குழு உறுப்பினர்;
முனைவர் அருணா ரத்னம், மேனாள் சிறப்புக் கல்வி அலுவலர், யூனிசெப் நிறுவனம்;
திரு.எஸ்.இராமகிருஷ்ணன், எழுத்தாளர்;
திரு விஸ்வநாதன் ஆனந்த், உலக சதுரங்க சேம்பியன்.
திரு.டி.எம்.கிருஷ்ணா, இசைக் கலைஞர்;
திரு.துளசிதாஸ், கல்வியாளர்;
முனைவர் திரு.ச.மாடசாமி, கல்வியியல் எழுத்தாளர்;
திரு.இரா.பாலு, தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கிச்சான்குப்பம், நாகப்பட்டினம் மாவட்டம்;
திருமதி.ஜெயஸ்ரீ தாமோதரன், அகரம் அறக்கட்டளை
ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இக்குழுவானது புதிய கல்விக்கொள்கையை வடிவமைத்து, ஓராண்டு காலத்திற்குள் தனது பரிந்துரையை அரசுக்கு அளிக்கும்.












Click it and Unblock the Notifications