1500 கோடி சொத்து.. தபால் ஓட்டில் கவிழ்ந்த மாமியார்! மிரட்டிய ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் ட்விஸ்ட்
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாற்றில் 2026 தேர்தல் பல அதிரடி திருப்பங்களுக்கும், ட்விஸ்ட்களுக்கும் பெயர்போன ஒன்றாக மாறி வருகிறது.. குறிப்பாக, ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனத்தையும் ஈர்த்த 2 முக்கிய வேட்பாளர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மாமியார் மற்றும் மருமகன் என்பதுதான் இன்றைய ஹாட் டாபிக்.. பெரும் தொழிலதிபர் சாண்டியாகோ மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ் லால்குடியிலும், அவருடைய மருமகன் ஆதவ் அர்ஜுனா வில்லிவாக்கத்திலும் களம் கண்ட நிலையில், இன்று வெளியாகத் தொடங்கியுள்ள தேர்தல் முடிவுகளின் ஆரம்பகட்ட நிலவரமே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தின் லால்குடி தொகுதியில் சுமார் 1,049 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன், இந்தத் தேர்தலின் ஆகச்சிறந்த பணக்கார வேட்பாளராக அதிமுக சார்பில் லீமா ரோஸ் நிறுத்தப்பட்டார்..

லீமா ரோஸ் லால்குடி
சொந்த நிதியில் ஏழை மாணவர்களுக்குக் கல்வி உதவி என்ற வாக்குறுதியோடு அவர் வீதி வீதியாக பிரச்சாரம் செய்தபோதும், இன்று காலை தபால் வாக்குகள் எண்ணிக்கையிலேயே அவர் பின்னடைவை சந்தித்துள்ளது அதிமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
கடந்த 2006 முதல் திமுகவின் கோட்டையாக திகழும் லால்குடியில், "மண்ணின் மைந்தன்" என்ற அஸ்திரத்தை ஏவிய திமுகவின் பாரிவள்ளல், ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளார்.. அமலாக்கத்துறை வழக்குகள் மற்றும் "வெளி ஊர்க்காரர்" என்ற முத்திரை லீமா ரோஸிற்கு பெரும் பின்னடைவாக அமைந்திருப்பதை இந்த ஆரம்பகட்ட சரிவு காட்டுகிறது.
ஆதவ் அர்ஜூனா வில்லிவாக்கம்
இன்னொருபக்கம், சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் சுமார் 534.9 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் நட்சத்திர வேட்பாளராக களம் இறங்கிய மருமகன் ஆதவ் அர்ஜுனா, தனது அதிரடி அரசியலால் முதல் சுற்றிலேயே முன்னிலை பெற்றுள்ளார்.
திமுகவின் கோட்டையாக கருதப்படும் வில்லிவாக்கத்தில், ஆளுங்கட்சியின் செல்வாக்கு மற்றும் முன்னாள் எம்.பி எஸ்.ஆர்.விஜயகுமாரின் சவால்களை தாண்டி ஆதவ் அர்ஜுனா பெற்றுள்ள இந்த முன்னிலை அரசியல் நோக்கர்களை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.. வீடு வீடாக சென்று அவர் மேற்கொண்ட தீவிரப் பிரச்சாரமும், ஆளுங்கட்சிக்கு எதிராக அவர் முன்வைத்த துணிச்சலான புகார்களும் தற்போது வாக்குகளாக மாறத் தொடங்கியுள்ளன.
மாமியார் - மருமகன்
இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இந்த மாமியார் மற்றும் மருமகன் ஆகிய இருவரின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு மட்டும் சுமார் 1,500 கோடி ரூபாயைத் தாண்டுகிறது.
இவ்வளவு பிரம்மாண்டமான பணபலத்துடன் களம் இறங்கிய இவர்களில், அனுபவம் வாய்ந்த மாமியார் லீமா ரோஸ் தபால் வாக்கிலேயே பின்னடைவைச் சந்திக்க, அரசியலுக்குப் புதியவரான மருமகன் ஆதவ் அர்ஜுனா முதல் சுற்றிலேயே முன்னிலை பெற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெவ்வேறு கட்சிகளில் களம் காண்பது ஒன்றும் புதிதல்ல என்றாலும், சுமார் 1,500 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் மாமியாரும் மருமகனும் நேருக்கு நேர் மோதுவது போன்ற ஒரு பிம்பம் தமிழக அரசியலில் இதுவே முதல்முறையாகும்.
இவர்கள் இருவருமே அரசியலில் வேறு வேறு துருவங்களாக பிரிந்து நின்றாலும், இவர்களின் வெற்றி தோல்வி என்பது மார்ட்டின் குடும்பத்தின் அரசியல் செல்வாக்கை நிர்ணயிக்கும் முக்கிய காரணியாகப் பார்க்கப்படுகிறது..
பணக்கார வேட்பாளர்
ஒருவேளை வாக்கு எண்ணிக்கையின் இறுதி முடிவில், லீமா ரோஸ் தோல்வியடைந்தால், அது அதிமுகவிற்கு மட்டுமல்லாது, மார்ட்டின் குடும்பத்தின் பாரம்பரியமான செல்வாக்கிற்கும் ஒரு சவாலாகவே கருதப்படும். காரணம், பல வருஷமாகவே சமூகப் பணிகளில் ஈடுபட்டு வந்தாலும், நேரடி அரசியலில் பணக்கார வேட்பாளர் என்ற முத்திரை லீமா ரோஸிற்கு பலவீனமாக மாறிவிட்டது என்றே பொருள் கொள்ளப்படும்.
அதே நேரத்தில், அரசியலில் ஒரு புது ரத்தமாகப் பார்க்கப்படும் மருமகன் ஆதவ் அர்ஜுனா, மும்முனை போட்டியில் முன்னிலை பெற்றுள்ளது இளைய தலைமுறை வாக்காளர்கள் மத்தியில் அவருக்கு இருக்கும் வரவேற்பை உறுதிப்படுத்திவிடும்.. அதாவது மருமகன் வெற்றி பெற்று மாமியார் தோல்வியடைந்தால், அது அக்குடும்பத்தின் அரசியல் வாரிசு யார் என்ற விவாதத்தையும் கிளப்ப வாய்ப்புள்ளது.
பணபலம் மட்டுமே வெற்றியை தருமா
இங்கு இன்னொரு விஷயத்தையும் நாம் பார்க்க வேண்டும்.. மார்ட்டின் குடும்பத்தின் இந்த அரசியல் வியூகம் என்பது வெறும் வெற்றியை மட்டும் குறிவைத்தது அல்ல, தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் வளர்ந்து வரும் சக்தியான தவெக என இரண்டிலும் கால் பதிப்பதன் மூலம், எந்தப் பக்கம் காற்று வீசினாலும் தங்கள் குடும்பத்தின் அதிகாரம் குறையாமல் பார்த்துக் கொள்வதே இவர்களின் திட்டம் என அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.
பணபலம் மட்டுமே வெற்றியைத் தீர்மானிக்காது என்ற அரசியல் பாடத்தை லால்குடி உணர்த்துமா? மாமியாரின் அனுபவம் தோற்று மருமகனின் அதிரடி வெல்லுமா? என்பது அடுத்தடுத்த சுற்று முடிவுகளில் முழுமையாகத் தெரிந்துவிடும்..!!












Click it and Unblock the Notifications