திமுக சட்டவிதிகளில் மாற்றம்! 7 ஆக உயர்கிறதா து.பொ.செ. பதவி? கொங்குவில் செந்தில் பாலாஜிக்கு வாய்ப்பு?
சென்னை: திமுக தலைமை பதவிகளில் ஒன்றான துணை பொதுச் செயலாளர்களின் எண்ணிக்கையை 5 லிருந்து 7 ஆக உயர்த்தும் வகையில் கட்சியின் சட்ட விதிகளில் திருத்தங்கள் கொண்டு வரப்பட வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.
சென்னையில் இன்று நடைபெறும் திமுக பொதுக் குழுவில் கட்சியின் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் தணிக்கை குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்வானவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறார்கள்.
இந்த பொதுக் குழுவில் காலியாக உள்ள துணை பொதுச் செயலாளர் பதவி யாருக்கு என்பது குறித்து அறிவிக்கப்படுகிறது. ஏற்கெனவே இந்த பதவியிலிருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர். அவர் அப்பதவியிலிருந்து விலகியதுடன் அதே மண்டலத்தை சேர்ந்த ஒருவருக்கு அந்த பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

கனிமொழி
ஆனால் அந்த பதவி கனிமொழிக்கு கிடைக்கும் பட்சத்தில் கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர்களையும் நாயுடுவையும் திருப்திப்படுத்த திமுக சட்டவிதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என தெரிகிறது. அவ்வாறு திருத்தம் மேற்கொள்ளப்பட்டால், ஏற்கெனவே திமுகவில் 5 பொதுச் செயலாளர்கள் இருக்கும் நிலையில் தற்போது கூடுதலாக இரு இடங்கள் உருவாக்கப்பட்டு மொத்தம் 7 துணை பொதுச் செயலாளர்கள் என இருக்கும்.

கட்சி விதிகளில் மாற்றம்
பேராசிரியர் க அன்பழகனுக்கு பிறகு கட்சி விதிகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. அந்த வகையில் ஏற்கெனவே துணை பொதுச் செயலாளர்களாக உள்ள ஐ பெரியசாமி, அந்தியூர் செல்வராஜ், சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோருடன் பொன்முடி, ஆ ராசா ஆகிய இருவர் கூடுதலாக நியமிக்கப்பட்டனர். எனவே திமுக துணை பொதுச் செயலாளர்கள் 5 ஆக உயர்ந்தது.

கூடுதலாக இரு இடங்கள்
தற்போது கூடுதலாக இரு இடங்கள் உருவாக்கப்படுவதால் அதற்கான அறிவிப்பு இன்று வெளியாகும் என தெரிகிறது. நாயுடு சமூகத்தினரை திருப்திப்படுத்த எ.வ.வேலுவுக்கு துணை பொதுச் செயலாளர் பதவி கொடுக்கப்படலாம் என தெரிகிறது. அது போல் இன்னொரு பதவி கொங்கு மண்டலத்தை சேர்ந்த வெள்ளக்கோவில் சாமிநாதனுக்கு வழங்கப்படலாம் என தெரிகிறது.

வெள்ளக்கோவில் சாமிநாதன்
வெள்ளக்கோவில் சாமிநாதன் கையில் இருந்த திமுக இளைஞரணி செயலாளர் பதவி நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்கு பரிசாக உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது. எனவே அதை ஈடுகட்ட வெள்ளக்கோவிலுக்கு துணை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்படலாம் என தெரிகிறது. கூடுதலாக உருவாக்கப்படும் துணை பொதுச் செயலாளர் பதவிக்கான ரேஸில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெயரும் அடிபடுகிறது.

செந்தில் பாலாஜி
முதல்வர் ஸ்டாலினின் நம்பிக்கைக்குரியவர்களில் செந்தில் பாலாஜியும் ஒருவர். அவரும் கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர் என்பதால் வெள்ளக்கோவிலுக்கு பதிலாக செந்தில் பாலாஜிக்கு வழங்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. அவருக்கும் வெள்ளக்கோவில் சாமிநாதனுக்கும் அமைச்சர் பதவி இருக்கிறது என்பதால் கொங்கு மண்டல திமுக பொறுப்பாளர் என்ற முறையில் செந்தில் பாலாஜி கை காட்டும் நபருக்கு அந்த பதவி வழங்கப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.

எ.வ.வேலுவுக்கு எந்த பதவி?
ஒரு வேளை நாயுடு பிரதிநிதித்துவத்திற்கு பதிலாக வேறு யாருக்கேனும் து.பொ.செ பதவி கொடுக்கப்பட்டால் எ.வ.வேலுவுக்கு திமுகவின் துணை அமைப்பு செயலாளர் பதவி வழங்கப்படும் என தெரிகிறது. எனவே திமுக துணை பொதுச் செயலாளராக கனிமொழி குறித்த அறிவிப்பையும் அந்த பதவியின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவது குறித்த அறிவிப்பையும் எதிர்பார்த்து தொண்டர்கள் காத்து கிடக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications