இனி காஞ்சி,செங்கல்பட்டில் சென்னை வசதி.. உருவாகும் 2 சாட்டிலைட் நகரங்கள்! இணைக்கப்படும் 65 கிராமங்கள்
சென்னை: சென்னை அருகே 2 சாட்டிலைட் நகரங்களை உருவாக்க பெருநகர வளர்ச்சிக் குழுமம் முடிவு செய்துள்ள நிலையில் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த 65 கிராமங்களை அதில் சேர்க்க திட்டமிடப்பட்டு இருக்கிறது.
Recommended Video
சென்னையின் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டப்படுத்த மாநகரின் புறநகர் பகுதிகளில் 5 சாட்டிலைட் நகரங்கள் அமைக்கப்படும் என ஆளும் திமுக அரசு வாக்குறுதி அளித்து இருந்தது.
இந்த நிலையில் தற்போது அதற்கான முதற்கட்ட பணிகளை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் தொடங்கியுள்ளது. அதன்படி சென்னையை ஒட்டிய காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் 2 சாட்டிலைட் கிராமங்கள் அமைக்கப்பட திட்டமிடப்பட்டு இருக்கிறது.

65 கிராமங்கள்
காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டுவில் சென்னையின் 2 சாட்டிலைட் நகரங்களை அமைப்பது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கையை சென்னை பெருநகர வளர்ச்சிக்குழு அதிகாரிகள் வகுத்து வருகின்றனர். அதன் சாட்டிலைட் சிட்டியில் இணைக்க செங்கல்பட்டில் 48 கிராமங்களும் காஞ்சிபுரத்தில் 17 கிராமங்களும் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.

வளர்ச்சி
தேர்வு செய்யப்பட்ட இந்த 65 கிராமங்கள் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்து இருக்கிறது. இந்த நெடுஞ்சாலையை ஒட்டி தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், குடியிருப்புகள் பெருகி வருவதால் அதன் வளர்ச்சியை மேலும் அதிகரிக்க இப்பகுதிகளை சி.எம்.டி.ஏ தேர்வு செய்து உள்ளது.

செங்கல்பட்டு ஏன்?
காஞ்சிபுரத்தில் இருந்து கடந்த 2019 ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்ட செங்கல்பட்டுவில் சாட்டிலைட் நகரத்தை உருவாக்குவதற்கு தேவையான சமூக, பொருளாதார காரணிகள் இருப்பதாக கூறப்படுகிறது. சென்னையின் பெருநகரத்தின் பரப்பளவை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்ற திட்டத்தின் ஒருபகுதியாக இது பார்க்கப்படுகிறது.

காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்டமும் செங்கல்பட்டைபோல் அதிக தொழிற்சாலைகளை உள்ளடக்கியதாகும். அதேநேரம் அதிக போக்குவரத்து நெரிசலுக்கு இலக்காகும் பகுதி காஞ்சிபுரம். இங்குள்ள புராதான வரலாற்று சின்னங்கள் சிதையாமல், அதை பாதுகாத்து நகரங்களை மேம்படுத்த சிஎம்டிஏ முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் 3 நகரங்கள்
இது மட்டும் அல்லாமல் அடுத்தக்கட்டமாக திருவள்ளூர் நகரம், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மீஞ்சூர், திருமழிசை ஆகியவற்றையும் சாட்டிலைட் நகரங்களாக்க சிஎம்டிஏ திட்டமிட்டு இருக்கிறது. இதில் திருமழிசைக்காக ரூ.1,000 கோடி நிதியை மத்திய அரசு 2021-2022 நிதியாண்டு முதல் 2025-2026 நிதியாண்டு காலக்கட்டத்திற்குள் வழங்க 15 வது நிதியாணையத்தின் கீழ் தெரிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications