20% தலித் வாக்கு வங்கி.. டார்கெட் செய்யப்படும் விசிக? திருமாவுக்கு குவியும் ஆஃபர்கள்?
சென்னை: விசிகவை தங்கள் பக்கம் இழுப்பதற்காக அதிமுக, பாஜக, நாதக, பாமக எனப் பல கட்சிகள் போட்டிப்போடுவது ஏன்? முன்பைவிட திருமாவளவனைப் பலரும் முக்கியத்துவம் கொடுத்துப் பேசுவது ஏன்? இந்த அரசியல் மாற்றம் எதனால்?
விஜய் கட்சித் தொடங்கிய பிறகு தமிழ் நாட்டில் இருக்கும் இரண்டாம் கட்சிகளுக்கு ஒரு சிறப்பான முக்கியத்துவம் கிடைத்திருக்கிறது என்றே பலரும் சொல்கிறார்கள். அதை உணர்ந்துதான் திமுக கூட்டணியில் இருக்கும் விசிக சமீப காலமாகக் குரலை உயர்ந்த ஆரம்பித்திருக்கிறது. விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பிறகு விசிக தலைவர் திருமாவளவனை அழைத்து பிறந்தநாள் வாழ்த்து சொல்கிறார். கட்சியில் அம்பேத்கர் அடையாளமாகப் பார்க்கப்படும் யானை சின்னத்தை இணைக்கிறார். மாநாட்டுப் பந்தலில் அம்பேத்கர் கட்அவுட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

கிட்டத்தட்ட 20% மேல் உள்ள தலித் மக்களின் வாக்குகள் பல கட்சிகளில் சிதறிக் கிடக்கிறது. அதிமுக, திமுக, விசிக, பிஎஸ்பி, புரட்சி பாரதம், ஆதித் தமிழர் பேரவை எனக் கட்சி அடையாளங்களைத் தாண்டி இயக்குநர் பா.ரஞ்சித் தன் பங்கிற்கு ஒரு அமைப்புரீதியான தலித் சக்திகளை தன்பக்கம் இழுத்து வருகிறார். ரஞ்சித்தின் குரல் ஆரம்பக் காலத்திலிருந்தே திமுகவுக்கு எதிராகவே ஒலித்து வருகிறது. அதனால், அவரை உடன்பிறப்புகள் 'நீல சங்கி' என எளிமையாக அடையாளம் கண்டு புறக்கணிக்கின்றனர்.
இந்தியா முழுமைக்குமே தலித் மக்களின் எழுச்சி அதிகம் இருக்கும் காலம் இது. தேசிய கட்சியான காங்கிரஸ் தலைமைப் பதவிக்கு தலித் பிரதிநிதியை முன்னிலைப்படுத்தியது. தமிழ்நாட்டில் பாஜக எல்.முருகனை மாநிலத் தலைவராக்கி பட்டியலின பிரதிநிதித்துவ அடையாளத்தைத் தூக்கிப் பிடிப்பதாகத் தோற்றத்தை உருவாக்குகிறது. திரெளபதி முர்முவை பாஜக ஜனாதிபதியாக்கி ஒரு அரசியல் ஆதாயத்தைப் பெறுகிறது. கே.ஆர்.நாராயணன் காலத்திலேயே பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். அவருக்கு ஜெகசீவன்ராம் துணைப் பிரதமர் நாற்காலியில் அமர்ந்து ஆட்சி செய்திருக்கிறார்.
அதாவது 1990களின் தொடக்கக் காலத்தில் தேர்தல் பாதையைப் புறக்கணித்த விசிக, இன்று மகாராஷ்டிரா, ஆந்திரா என அண்டை மாநிலங்களில் களம் இறங்கித் தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு ஒரு தேசிய அடையாளத்தைப் பெற முயன்று வருகிறது. 1949களில் தொடங்கப்பட்ட அதிமுக வடமாநிலங்களில் தனது கட்சியை வளர்க்கும் வேலைகளில் ஒருபோதும் இறங்கியதே இல்லை. இன்று பாஜகவை எதிர்த்து தேசிய அளவில் தேர்தல் அரசியல் செய்யும் தலித் தலைவர்களில் திருமாவளவன் முக்கிய இடத்தில் இருக்கிறார்.
ஆகவே, அவரை அதிமுக தன்பக்கம் இழுக்கப் பல காய்களை நகர்த்துகிறது. திமுக கூட்டணியில் சலசலப்பு உருவாகிவிட்டது என்று எடப்பாடி பழனிசாமி பேசுவதற்குப் பின்னால் விசிக மற்றும் திமுக இடையே கருத்து மோதல்தான் இருக்கிறது என்பதை உலகம் அறியும். அதேநேரம் பாஜக தங்களை இழுக்கப் பல முயற்சிகளைச் செய்ததாக விசிக எம்.எல்.ஏ. ஆளூர் ஷாநவாஸ் கூறியிருக்கிறார். திருமாவளவன் அணி மாறினால் மத்திய அமைச்சர் பதவியே கிடைக்கும் என்கிறார்.
வேறு மாநிலங்களில் போட்டியிடத் தொடங்கி இருக்கும் விசிகவுக்கு ஒருவேளை திருமா மத்திய அமைச்சரானால் தமிழ்நாடு கடந்து கட்சியை வலுப்படுத்தப் பல வாய்ப்புகள் காத்திருக்கின்றன. அதுவும் சக்திமிக்க பதவியைப் பெற்றால், அவர் வரும் 5 ஆண்டுகளில் இந்திய முழுக்க பயணித்து ராம்விலாஸ் பாஸ்வான் இடத்தையோ அல்லது மாயாவதியைப் போன்ற ஒரு தோற்றத்தையோ கட்ட அமைக்க முடியும்.
ஆனால், அது சாதாரணமான வேலையில்லை. தமிழ்நாட்டில் திருமாவளவன் ஆற்றல் மிக்க பேச்சாளர். அதேவேளையில் அவருக்கு இந்தி தெரியாது. வடமாநிலங்களைப் பொறுத்தவரை அடித்தட்டு மக்களிடம் நேரடியாகப் போய்ச் சேர இந்தி அவசியம். அதுவும் மக்களை மயக்கும் விதத்தில் சரளமாக இந்தியைப் பேச வேண்டும். தமிழ்நாட்டில் அரசியல் செய்ய இந்தி தேவையே இல்லை. அந்த மொழியைப் பற்றி ஒன்று தெரியாமல் 'இந்தி தெரியாது போடா' என்று டி ஷர்ட் போட்டாலே வெற்றி வாய்ப்பை பெற்று விடலாம்.
ஆக, திருமாவின் விசிக பழைய நிலைமையில் இல்லை. அந்தக் கட்சி இரண்டு மிகப்பெரிய மாநாடுகளை நடத்திக் கட்டி இருக்கிறது. துணை முதல்வர் பதவியைக் கேட்டு விவாதிக்கும் அளவுக்கு வேகம் பெற்றுள்ளது. அவர்கள் அதிகாரத்தில் பங்கு எனப் பல ஆண்டுகளாகப் பேசிவந்தாலும், அதைக் கூர்மையாக்கும் வேலைகள் வேகமாக இப்போதுதான் நடக்கிறது.
விசிகவை பொறுத்தவரைப் பல கதவுகள் திறந்துள்ளன. அவர் விஜய் அரசியல் பிரவேசத்தை எதிர்க்கவில்லை. விஜயகாந்த் கட்சி தொடங்கிய போது கடுமையாக எதிர்த்த திருமா, பின்னர் அவரை முதல் வேட்பாளராக முன்மொழிய வேண்டிய காலம் ஏற்பட்டபோது பல அரசியல் பாடங்களை கற்றதால், விஜய் விசயத்தை எச்சரிக்கையாக நடந்து கொள்கிறார். விஜய் 10% வாக்குகளைப் பெறுவார் என்கிறார். அவருடன் கூட்டணி இல்லை என அவர் சொல்லவில்லை. விஜய் முதலில் அவரது பலத்தை நிரூபிக்கட்டும் என்கிறார். அவர் பலத்தை நிரூபிப்பதற்கு முன்பே 10% வாக்கு பெறுவார் என கணிக்க முடிந்த அவர், ஏன் கூட்டணி பற்றி வெளிப்படையாகப் பேசவில்லை என்பதற்கு விடையை தனியாகச் சொல்லவேண்டியதில்லை.
வரும் 2026 தேர்தலில் பிற கட்சிகளைவிட விசிகவுக்கு ஒரு முக்கியத்துவம் கிடைக்கக்கூடும். அதை உணர்ந்துதான் 'தலித் முதல்வர்' என்று திருமாவின் கொள்கையை ஆதரிப்பதாக அன்புமணியே இறங்கிவருகிறார். இந்த இரு கட்சிகள் ஒன்றிணைந்தால், அது ஆளும் கட்சியான திமுகவுக்கு மிகப்பெரிய அடியாகும். ஒருவேளை அதிமுக அணியில் இரு கட்சிகளும் இடம்பெற்று 'தலித் ஒருவருக்குத் துணை முதல்வர்' என்ற ஒரு முழுக்கதை ஏற்றுக் கொண்டால், அது திமுகவுக்குப் பெரிய சரிவாகும்.
ஒருவேளை விசிக, பாமக, தவெக, நாதக என அணி மாறினால் அது அதிமுகவுக்கு மிகப்பெரிய அடியாகும். ஏனெனில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக வன்னியர் மண்டலங்களில்தான் கடந்த மக்களவைத் தேர்தலில் பலம் பெற்றுள்ளது. ஒருவேளை இந்த நகர்வு ஏற்பட்டால் அது எடப்பாடியைப் பாதிக்கும். ஆக, எப்படிப் பார்த்தாலும் விசிக ஒரு தீர்மானிக்கும் சக்தியாக வரும் காலங்களில் இருக்கப் போகிறது என்றே பலரும் கணித்துக் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications