2021 vs 2026 தேர்தல்! எவ்வளவு வித்தியாசம்..? ராகுல் காந்தி பழைய ஃபார்மில் இருக்கிறாரா இல்லையா?
சென்னை: கடந்த 2021 சட்டமன்றத் தேர்தல் பரப்புரையுடன் ராகுல் காந்தியின் பிரச்சாரத்தை இந்த 2026 ஆம் ஆண்டு தேர்தலுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில், சில காலதாமதங்களைக் காங்கிரஸ் கட்சியின் தலைமை திட்டமிட்டுச் செய்து வருகிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
2026 தேர்தல் களத்தில் திமுக, அதிமுக இடையே அனல் பறக்கும் பிரச்சாரம் நடக்கும் என எதிர்பார்த்தால், அது அப்படியே திசை மாறி தனிமனித தாக்குதலாக உருமாற்றும் பெற்றுள்ளது. தேர்தல் பிரச்சாரத்தின் முதல் அலையே இப்படி மாறியிருக்கிறது என்றால், இன்னும் இரண்டாம் அலை, மூன்றாம் அலை, இறுதிக் கட்ட பிரச்சாரம் என அடுத்தடுத்த நகர்வுகளில் எந்தளவுக்கு வசைமொழிகளை வாக்காளர்கள் கேட்கப்போகிறார்களோ தெரியவில்லை.

களத்தில் அ.இ.அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக இதைச் சட்டமன்றத் தேர்தலைப்போல அணுகவில்லை. ஏதோ நாடாளுமன்றத் தேர்தலைப் போலவே அணுகி வருகிறது. அப்படித்தான் அக்கட்சியின் செயல்பாடுகள் நமக்கு உணர்த்துகின்றன. ஆகவேதான் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும், பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டிற்கு மூன்று முறை வந்து பிரச்சாரத்தைத் துரிதப்படுத்தி இருக்கிறார். தேர்தல் களத்தில் முதல்வர் ஸ்டாலின், நேரடியாக பாஜக மீது மட்டுமே தாக்குதல் நடத்தி வந்தார்.
'இது டெல்லிக்கும் தமிழ்நாட்டிற்கும் நடக்கக்கூடிய தேர்தல்' என அவர் ஒரு வியூகத்தைக் கட்டமைத்து பரப்புரை செய்தார். ஆரம்பத்தில் எடப்பாடி பழனிசாமியை விமர்சிக்கும் போதுகூட, அது நேரடியாக டெல்லி பாஜகவையும் பிரதமர் மோடியையும் குறிவைத்தே விமர்சித்து வந்தார்.
திமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் பரப்புரை காணொளிகளில் கூட, 'மேல இருக்கின்றவர் கிட்டக் கேட்டுச் சொல்கிறேன்' என எடப்பாடி அனைத்து முடிவுகளையும் மத்திய அரசிடம் கேட்டே எடுப்பதாகவும், சுதந்திரமாக அவர் முடிவுகளை எடுக்கக் கூடியவர் இல்லை என்பதையும் வலுவாக மக்களிடம் எடுத்துக் கூறிவருகிறது.
பொதுவாக நாடாளுமன்றத்திற்குத் தரும் அதே முக்கியத்துவத்தை மாநிலத் தேர்தலுக்கும் பாஜக கொடுத்து வருகிறது. ஒடிசா தொடங்கி பீகார், ஆந்திரா எனப் பல மாநில சட்டமன்றத் தேர்தல்களைச் சுட்டிக்காட்ட முடியும். இந்தியாவில் பாஜக புகமுடியாத மாநிலமாகக் கேரளாவும் தமிழ்நாடும் இருக்கிறது.
ஒருமுறை ராகுல் காந்திகூட, "பாஜக தென்மாநிலங்களில் வெற்றிபெற்றுக் காட்ட முடியுமா? அது பெரியார் மண்" என்று குறிப்பிட்டார். காங்கிரஸ் மற்றும் திமுக இடையேயான உறவு பலமாக இருந்த காலம்.
இந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் இதுவரை காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி பங்கேற்றும் கூட்டணி மேடை ஒன்றை திமுக போடவே இல்லை. தேர்தலுக்கு முன்னதாகவே பல கட்ட மாநாடுகளை நடத்தி தொண்டர்களை அணி திரட்டிய திமுக, இதுவரை தேசிய தலைவர்களை அழைத்து தன் வலிமையை வாக்காளர் மத்தியில் நிரூபிக்கவில்லை.
இதுவே மு.கருணாநிதியின் தலைமையின் கீழ் திமுக இயங்கிய காலத்தில், அனைத்துக் கூட்டணிக் கட்சித் தலைவர்களின் மாநாட்டை நடத்தி, தங்களின் அணி ஒற்றுமையைக் கண்கூடாகக் காட்டி இருப்பார். இந்த முறை அதில் ஏதோ தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதா, 'லேடியா மோடியா?' எனப் பேசியதைப் போல், 'டெல்லியா? தமிழ்நாடா?' என ஸ்டாலின் பேசி வருகிறார்.
அவரது உழைப்பை மட்டுமே கூட்டணிக் கட்சிகள் நம்பியுள்ளன. மூன்று மாதங்களில் 3 முறை தமிழகம் வந்த பிரதமர் மோடி வரும் ஏப்ரல் 15 ஆம் தேதி மீண்டும் வந்து தேஜ கூட்டணிக்கு வாக்குக் கேட்க இருக்கிறார். நாகர்கோவிலில் அதற்கான ஏற்பாடுகள் திட்டமிட்டுப்பட்டு வருகின்றன.
ஆனால், திமுக அணியில் உள்ள காங்கிரஸ் களத்தில் இருக்கிறதா என்றே தெரியவில்லை. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து ராகுல் காந்தி ஒருமுறை கூட வருகை தந்து கூட்டணிக் கட்சிகளின் ஒற்றுமையை நிலைநாட்டிக் காட்டவில்லை. அது ஒரு பின்னடைவு என்றே அரசியல் வியூகர்கள் கருதுகின்றனர்.
பலரும் கடந்த 2021 சட்டமன்றத் தேர்தல் களத்தில் ராகுல்காந்தியின் செயல்பாட்டுடன் இந்த அமைதி மனநிலையை ஒப்பிட்டுப் பார்க்கின்றனர். ஒருவேளை ராகுலின் வேகம், மோடியை விடக் குறைந்துபோய் உள்ளதோ எனச் சந்தேகிக்கின்றனர்.
கடந்த முறை 2021இல் ஜனவரி மாதம் அதிகாரப்பூர்வ பிரச்சாரத்தைக் கோவையில் 23 அன்று ராகுல் மூன்று நாள் தொடங்கியிருந்தார். அதற்கு முன்னதாகவே ஜனவரி 14 அன்று ஜல்லிக்கட்டு நிகழ்வைப் பார்க்க மதுரை வந்தார். அது ஸ்டாலினுக்கும் ராகுலுக்குமான நட்பைக் காட்சிப்படுத்த உதவியது. தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பும் பின்புமாகக் கிட்டத்தட்ட 5 முறை தமிழ்நாட்டிற்கு வந்தார்.
முதற்கட்டமாகக் கொங்கு மண்டலமான கோவை, திருப்பூர், ஈரோடு எனப் பகுதிகளைக் கவர் செய்த அவர், 50க்கும் மேலான ரோடு ஷோ கூட்டங்களில் பேசினார். தமிழ் அடையாளத்தைக் கலாச்சாரத்தைச் சொந்தம் கொண்டாடியும் உயர்த்தியும் பேசினார்.
இந்த முறை ஏப்ரல் 9 ஆம் தேதிவரை அவரது பிரச்சார அட்டவணை என்ன என்பதே உறுதியாகவில்லை. மாறாகக் கேரளாவில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் பொதுக் கூட்டங்களில் பங்கேற்று, கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு எதிராக தன் கோபத்தை வெளிப்படுத்தி வருகிறார். அடுத்து அவரது கவனம் புதுச்சேரியின் மீது உள்ளது. மூன்று நாட்கள் முன்னதாக லாஸ்பேட்டை பொதுக்கூட்ட மேடையில் பங்கேற்றார்.
ஆயினும் அவர் தமிழ்நாட்டைத் தொங்கலில் விட்டுள்ளார். ராகுலின் பிரச்சார அட்டவணைகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்து வருகின்றர். புதுவை வந்தவர், அடியொட்டியே தன் முதல் கட்ட பிரச்சாரத்திற்கு ஒரு பிள்ளையார் சுழி போட்டிருக்கலாமே எனக் கூறுகின்றனர் உடன்பிறப்புகள்.
புதுச்சேரி என்பது தமிழ்நாட்டு அரசியலுடன் பின்னிப் பிணைந்தது. அங்கேயே கூட அவர் தமிழக அரசியல் நிலைப்பாட்டைச் சுட்டிக்காட்டிப் பேசியிருக்கலாம். அவர் ஸ்டாலின் ஆட்சி மற்றும் கூட்டணி பற்றி வாய்திறக்கவே இல்லை. மு.க.ஸ்டாலின் பெயரைக் கூட அவர் உச்சரிக்கவில்லை. இது திட்டமிட்டதா? தற்செயலா? அரசியலில் எதுவுமே தற்செயல் அல்ல. எல்லாம் திட்டமிட்டதுதான் என்கிறார்கள் உடன்பிறப்புகள்.
இன்னும் சொல்லப் போனால் புதுச்சேரியில் ஸ்டாலினும் ராகுலும் ஒரே சமயத்தில் தங்களின் பரப்புரையைச் செய்துள்ளனர். அவர்கள் சரியாகத் திட்டமிட்டிருந்தால், கூட்டணி மேடையில் இருவரும் ஒன்றாகக் காட்சியளித்திருக்க முடியும். அது ஏன் நடக்கவில்லை? அந்தப் புறக்கணிப்பு ஏன்? எனச் சிலர் கேட்கிறார்கள். காலை பிரச்சாரத்திலிருந்த ராகுல், மாலை புதுவை வந்த ஸ்டாலினை ஒரு ஹோட்டலில் கூட சந்தித்து உரையாடி இருக்கமுடியும். அதுவும் நடக்கவில்லை. அதற்கான முயற்சியே எடுக்கப்படவில்லை என்கிறார்கள் உடன்பிறப்புக்கள்.
ஆனால், இந்தச் சந்தேகங்களில் எதுவும் உண்மையில்லை என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி மறுத்துள்ளார். ஒரு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் 10 ஆம் தேதிக்குப் பிறகு தமிழகம் வருவார் என்கிறார். அப்படி எனில் இன்னும் 2 நாட்களில் அவர், ஸ்டாலினுடன் ஒன்றாக மேடையில் பிரச்சாரம் செய்வாரா? அங்கேயும் 'அதிகாரப் பகிர்வு' என்ற தலைவலி வெடிக்குமா?
எழுதியவர்: கடற்கரய்
-
சின்ன தோசை தந்த திமுக.. அப்செட்டில் ராகுல் காந்தி? பிரவீன் சக்கரவர்த்தி இப்படியெல்லாம் பேசறாரே -
62 தொகுதிகளில் சர்ஜிக்கல் திமுகவின் மெகா ஆபரேஷன்.. அதிமுகவுக்கு எதிராக ரகசியமாக இறங்கிய 2 டீம்? -
எடப்பாடி பழனிசாமிக்கு கொலைவெறி அடங்கவில்லை.. 1979ல் நடந்த சம்பவம்.. ஆர்.எஸ்.பாரதி ஆவேசம்! -
என்.ஆர்.காங்கிரஸின் அசுர வளர்ச்சி + பாஜக ஆதரவு! புதுவையில் வாழ்வா சாவா போராட்டத்தில் காங்கிரஸ்! -
திமுகவுக்கு ‘குட்பை'.. விஜயின் முன்னாள் மேனேஜர் திடீர் விலகல்.. ஸ்டாலினுக்கு கடிதம்.. என்ன காரணம்? -
ஹரி நாடார், ராக்கெட் ராஜா வேட்புமனு நிராகரிப்பு.. மனோஜ் பாண்டியனுக்கு சாதகமாக மாறிய ஆலங்குளம் தொகுதி -
எடப்பாடி பழனிசாமியின் முன்னாள் தனிச் செயலர்.. இப்போது புதிய தலைமைச் செயலாளர்.. தேர்தல் ஆணையம் அதிரடி -
திமுகவுக்கு திரும்பிய தென்னாற்காடு ‘தலை’.. 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வந்த செஞ்சி ராமச்சந்திரன்! -
செல்வந்தர் அதிமுக வேட்பாளர் ₹1000 கோடி.. தமிழக அமைச்சர்களின் மனைவியர் பெயரில் சொத்து மதிப்பு பாருங்க -
தோல்வி பயம்.. அண்ணாமலை தேர்தலில் போட்டியிடாததற்கு காரணம் அதுதான்.. விளாசிய கனிமொழி! -
"ஏன் இவ்வளவு நாள் திமுக உடன் கூட்டணி அமையலனு நான் ஃபீல் பண்றேன்.." பிரேமலதா விஜயகாந்த் வருத்தம்! -
அடுத்தடுத்து வெளியான 4 சர்வே.. எல்லாம் சொல்லும் ஒரே விஷயம்.. நாம் தமிழர் கட்சிக்கு பெரிய சிக்கல்! -
234ஐ விடுங்க.. தமிழ்நாடு தேர்தல் முடிவை தீர்மானிக்க போகும்.. அந்த 131 தொகுதிகள்.. எப்படி தெரியுமா? -
சோழிங்கநல்லூர் திமுக வேட்பாளருக்கு 100 கிலோ ஆப்பிள் மாலை.. அடுத்த ஐந்து நிமிடத்தில் ட்விஸ்ட் -
வளைகுடா போரால் கேரளாவில் தோற்கும் காங்கிரஸ்? இது என்ன புதுசா இருக்கு.. ராகுல் பாவம் தான்













Click it and Unblock the Notifications