நடுங்கிப்போன சென்னை.. நலம் விசாரிக்க சென்ற வாலிபர் படுகொலை.. சத்தம்போட்டு பேசியதால் உயிரே போச்சு
சென்னை: சென்னை ஆவடியில் சத்தம் போட்டு பேசியது தொடர்பாக இருதரப்பினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் 24 வயது இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை ஆவடி போலீஸ் கமிஷனரேட் எல்லைக்குட்பட்ட பகுதியில் திருமுல்லைவாயல் உள்ளது. இந்த திருமுல்லைவாயலில் உள்ள நியூ அண்ணாநகரில் உள்ள நண்பரின் வீட்டுக்கு திருவேற்காடு பகுதியை சேர்ந்த கணேசன் (வயது 24), வினோத் (24), கார்த்திகேயன் (19) உள்பட 3 பேர் நேற்று இரவு சென்றனர்.

நண்பரின் தாய் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில் அவரை பார்த்து 3 பேரும் நலம் விசாரித்தனர். அதன்பிறகு அவர்கள் அனைவரும் வீட்டுக்கு வெளியே இரவு சுமார் 11 மணியளவில் நின்று பேசி கொண்டிருந்தனர். அவர்கள் 3 பேரும் சத்தமாக பேசியதாக கூறப்படுகிறது.
இந்த வேளையில் பக்கத்து வீட்டில் வசிக்கும் சதாசிவம் (31) என்பவர், ‛‛இரவு நேரம் என்பதால் சத்தம் போட்டு பேசாதீர்கள்'' என அறிவுரை வழங்கி உள்ளார். ஆனால் அவர்கள் கேட்கவில்லை என்று சொல்லப்படுகிறது. அதோடு 3 பேரும் கத்தியை எடுத்து சதாசிவத்தை மிரட்டி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பயந்துபோன சதாசிவம் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை அழைத்தார்.
சதாசிவத்துக்கு ஆதரவாக ஆட்கள் வந்ததை பார்த்தவுடன் கணேசன் உள்பட 3 பேரும் பைக்கில் அங்கிருந்து சென்றனர். ஆனாலும் சதாசிவம் தரப்பு விடவில்லை. அவர்களை விரட்டி சென்று மடக்கி பிடித்து தாக்கி உள்ளனர். இதில் கணேசன் படுகாயமடைந்து இறந்துள்ளனர். அதேபோல் கார்த்திகேயன் காயமடைந்து உயிருக்கு போராடி உள்ளார். வினோத் எஸ்கேப் ஆனார்.
இதையடுத்து சதாசிவம் மற்றும் அவரது கூட்டாளிகளும் அங்கிருந்து தலைமறைவாகினர். இதுபற்றி தகவல் அறிந்தவுடன் திருமுல்லைவாயல் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கணேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயமடைந்த கார்த்திகேயனும் மருத்துவ சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த வழக்கு தொடர்பாக போலீசார் 6 பேரை அடுத்த 6 மணிநேரத்துக்குள் போலீசார் கைது செய்துள்ளனர். அதன்படி சதாசிவம், அவரது அண்ணன் அன்பழகன் (37), தந்தை பாலகிருஷ்ணன் (55), உறவினர்கள் செல்வம் (40), வேலு (36), பிரிட்டோ என்ற பீட்டர் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் 6 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications