“தப்பிச்சுட்டோம்”.. போர்க்களமான சூடான்! உயிருக்கு போராடிய 247 தமிழர்கள் - மீட்க உதவிய தமிழக அரசு
சென்னை: சூடானில் ராணுவத்திற்கும் துணை ராணுவ படையினருக்கும் இடையே வெடித்த மோதலில் பலர் கொல்லப்பட்டு வரும் நிலையில், அங்கு சிக்கித் தவித்த தமிழர்கள் 247 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்து இருக்கிறது.
சூடானில் கடந்த மாதம் ராணுவத்துக்கும் துணை ராணுவத்துக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்த உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அதிபர் மாளிகை, விமான நிலையம், மருத்துவமனைகளை துணை ராணுவம் கைப்பற்றியதாக கூறப்பட்டது.
இந்த போரின் காரணமாக அங்கு வசித்து வந்த தமிழர்கள் உட்பட இந்தியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். உணவு, குடிநீர், மருத்துவ வசதி இல்லாமல் தவித்த மக்களை மீட்க இந்திய அரசு ஆபரேசன் காவேரி திட்டத்தை செயல்படுத்தியது. இந்த நிலையில் அங்கு தவிக்கும் தமிழர்களை மீட்க தமிழ்நாடு அரசும் உதவும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 247 தமிழர்கள் மீட்கப்பட்டு இருக்கிறார்கள்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது, "சூடான் நாட்டில் நடைபெற்று வரும் இராணுவம் மற்றும் உள்நாட்டு படைப் பிரிவினர்களுக்கு இடையேயான மோதல்களினால் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக, அங்கு வசித்த தமிழ் மக்கள் உட்பட ஏராளமான இந்தியர்கள் பாதுகாப்பற்ற நிலையில் சிக்கித் தவித்தனர். அவர்களை மீட்க கோரி அங்குள்ள தமிழர்கள் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள அவர்களது குடும்பத்தினரிடமிருந்து தமிழ்நாடு அரசிற்கு தொடர் கோரிக்கைகள் வரப்பெற்றன.
அதனைத் தொடர்ந்து. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி, மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு செஞ்சி K.S.மஸ்தான் அவர்களின் ஒருங்கிணைப்பில் அயலகத் தமிழர் நலத்துறையின் மூலம் சூடானில் உள்ள தமிழர்களுடன் அலைபேசி வாயிலாக தொடர்பு ஏற்படுத்தப்பட்டு, தனியாக Whatsapp குழுக்கள் உருவாக்கப்பட்டு அவர்களுக்கு உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு. நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தது.
இந்நேரத்தில் மீட்பு பணியை துரிதப்படுத்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாண்புமிகு ஒன்றிய பிரதமர் அவர்களிடம், சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் "ஆப்ரேசன் காவிரி" என்ற திட்டத்திற்கு தமிழ் நாடு அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்று கடிதம் மூலம் தெரிவித்திருந்தார்.

அதன் தொடர்ச்சியாக சூடானில் சிக்கியிருந்த இந்தியர்களை மீட்டு, சவுதி அரேபியாவில் உள்ள ஜெத்தாவிற்கு அழைத்து வரப்பட்டு அங்கிருந்து விமானம் மூலம் புதுடெல்லி, மும்பை, பெங்களுரூ. கொச்சின் மற்றும் அகமதாபாத் விமான நிலையங்களுக்கு அழைத்து வரக்கூடிய பணிகள் ஒன்றிய அரசுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது. அவ்வாறு வரும் தமிழர்களுக்கு உதவிடும் வகையில் புதுடெல்லி மற்றும் மும்பை விமான நிலையங்கள் மற்றும் சென்னை, அயலகத் தமிழர் நலத்துறையில் தமிழ்நாடு அரசின் சார்பில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டன.
தமிழ்நாடு அரசின் தொடர் நடவடிக்கை மற்றும் ஒன்றிய அரசின் உதவியுடன் விமான புதுடில்லி மும்பை, கொச்சி, அகமதாபாத் மற்றும் பெங்களூரு நிலையங்களில் கடந்த 05.05.2023 வரை வந்தடைந்த 31 மாவட்டங்களைச் சேர்ந்த 247 தமிழர்கள் மாநில அரசின் சார்பாக விமானங்கள் மூலமாக சென்னை, கோயம்புத்தூர், திருச்சி மற்றும் மதுரை ஆகிய விமான நிலையங்களுக்கு அழைத்துவரப்பட்டனர். அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் இதர தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு மாநில அரசின் சார்பாக வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு பாதுகாப்பாக அவர்களது. சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications