பவர் பத்திரத்தால் 3 கோடி காலி.. சென்னையில் வில்லங்க சான்றிதழ் போட்டு பார்த்ததால் தெரிய வந்த உண்மை
சென்னை: சென்னை கொளத்தூரைச் சேர்ந்த சுரேஷ் குமார் என்பவர், சோழவரம் பகுதியில் வாங்கிய 58 சென்ட் நிலத்தை, சிலர் போலி ஆவணங்கள் தயாரித்து மீண்டும் விற்பனை செய்து மோசடி செய்துள்ளனர். சுரேஷ்குமார் ஈசி போட்டு பார்த்த போது தான் அவரது நிலத்தை போலியாக பவர் பத்திரம் கொடுத்து நிலத்தை விற்பனை செய்திருக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது. இதில் ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். நிலம் வாங்கியவர்கள் ஏமாறாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
அண்மையில் ஆவடி பகுதியில் நடந்த ஒரு நில மோசடி சம்பவம் பலரையும் திடுக்கிட வைத்துள்ளது.. ஏற்கனவே விற்கப்பட்ட ஒரு நிலத்திற்கு, அதன் பழைய உரிமையாளரின் வாரிசுகளே போலி ஆவணங்களைத் தயாரித்து, மீண்டும் ஒருவருக்கு விற்று 3 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளனர். பாதிக்கப்பட்டவர் வில்லங்கச் சான்று (ஈசி) போட்டுப் பார்த்தபோதுதான், தனது நிலம் கைமாறியிருப்பது தெரிந்து அதிர்ந்து போயுள்ளார்.

சென்னை கொளத்தூரைச் சேர்ந்த சுரேஷ் குமார் என்பவர் சோழவரம் பகுதியில் வாங்கிய 58 சென்ட் நிலத்தை, போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்த ஐந்து பேரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். அந்த நிலத்தின் முந்தைய உரிமையாளரான ஆண்டாளம்மாளின் வாரிசுகள், ஏற்கனவே விற்கப்பட்ட நிலத்திற்குப் போலி ஆவணங்களைத் தயார் செய்து ராஜன் என்பவருக்கு மீண்டும் விற்பனை செய்துள்ளனர்.
சுரேஷ் குமார் வில்லங்கச் சான்று எடுத்துப் பார்த்தபோது தனது நிலம் வேறொருவர் பெயருக்கு மாறியிருப்பது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், லோகநாதன், புண்ணியகோட்டி, ஞானசேகரன், டில்லி பாபு மற்றும் ராஜன் ஆகியோரைக் கைது செய்தனர். இது போன்ற மோசடிகளில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள பின்வரும் விஷயங்களில் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
முதலாவதாக, ஒரு நிலத்தை வாங்கும் முன் அதன் 'தாய் பத்திரம்' மற்றும் கடந்த 30 ஆண்டுகளுக்கான வில்லங்கச் சான்றை ஆன்லைனில் மட்டும் பார்க்காமல், சார் பதிவாளர் அலுவலகம் மூலம் சரிபார்ப்பது அவசியம். நிலத்தின் உரிமையாளர் உயிருடன் இல்லையென்றால், அவரின் வாரிசுச் சான்றிதழ் மற்றும் அனைத்து வாரிசுகளும் அந்த விற்பனைக்குச் சம்மதிக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இந்த ஆவடி சம்பவத்தில் வாரிசுகளே மோசடி செய்திருப்பதால், பட்டா மற்றும் சிட்டா அடங்கல் போன்ற வருவாய்த் துறை ஆவணங்கள் தற்போதைய நிலையில் யார் பெயரில் உள்ளது என்பதை வட்டாட்சியர் அலுவலகம் மூலம் உறுதி செய்வது மிக முக்கியம் ஆகும்.
உங்களுக்கு பவர் பத்திரம் மூலம் நிலம் விற்கப்பட்டால், அந்த அதிகாரம் கொடுத்தவர் உயிருடன் இருக்கிறாரா என்பதையும், அந்த அதிகாரம் ரத்து செய்யப்படாமல் இருக்கிறதா என்பதையும் நேரடியாகச் சென்று விசாரியுங்கள். நிலத்தை வாங்கிய பிறகும் அலட்சியமாக இருக்காமல், அவ்வப்போது வில்லங்கச் சான்று எடுத்துப் பார்ப்பது உங்கள் உரிமையை உறுதிப்படுத்த உதவும். ஒரு நிலத்தின் விலை சந்தை விலையை விடக் குறைவாகக் கிடைக்கிறது என்றால், அங்கே ஏதோ ஒரு சிக்கல் இருக்க வாய்ப்புண்டு என்பதை மறந்துவிட வேண்டாம்.
இன்னொரு முக்கியமான விஷயம், பவர் பத்திரத்தில் நிலத்தை விற்பனை செய்ய அவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதா என்பதைப் படிக்க வேண்டும். சில நேரங்களில் நிலத்தைப் பராமரிக்க மட்டுமே அதிகாரம் கொடுத்திருப்பார்கள், ஆனால் அதை வைத்து விற்பனை செய்ய முயல்வார்கள். மேலும், பணப் பரிமாற்றத்தை ஏஜென்ட் பெயரில் செய்யாமல், நிலத்தின் உண்மையான உரிமையாளர் பெயரில் காசோலையாகவோ அல்லது வங்கிப் பரிமாற்றமாகவோ செய்வது எப்போதும் பாதுகாப்பானது. பவர் பத்திரத்தை மட்டும் நம்பாமல், அசல் ஆவணங்களை நேரில் கண்டு சரிபார்த்த பின்னரே முன்பணம் கொடுங்கள். அப்படி செய்தால் ஓரளவு பிரச்சனை இருக்காது.












Click it and Unblock the Notifications