படப்பை குணாவிற்கு உதவியதாக 3 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்.. டிஜிபி அதிரடி உத்தரவு!
சென்னை: பிரபல ரவுடி படப்பை குணாவிற்கு உதவியதாக 3 ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அதிரடியாக உத்தரவிட்டுள்ளார் தலைமறைவாக உள்ள குணாவை கைது செய்ய தமிழக போலீசார் தீவிரமாக உள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி படப்பை குணா என்கிற என்.குணசேகரன். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் கட்டப்பஞ்சாயத்து, அடிதடி, சிறு குறு தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களை மிரட்டுவது, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக இவர் மீது கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல் என 42 வழக்குகள் அவருக்கு எதிராக நிலுவையில் உள்ளன.

படப்பை குணா
படப்பை குணாவை கைது செய்ய போலீசார் முடிவெடுத்தனர். இதனை அறிந்து படப்பை குணா தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். படப்பை குணாவை என்கவுண்ட்டர் செய்யும் முடிவில் போலீசார் இருப்பதாக கூறப்படுகிறது.

3 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்
குணா தலைமறைவாக இருப்பதால் அவரது மனைவி எல்லம்மாளை கடந்த 9 -ம் தேதி அதிகாலை கூடுதல் எஸ்பி வெள்ளதுரை தலைமையிலான தனிப்படையினர் கைது செய்தனர். படப்பை குணா தவறு செய்ய, தலைமறைவாக ஒரு சில போலீசாரே உடைந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் படப்பை குணாவிற்கு உதவியதாக 3 ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

3 பேர் இவர்கள்தான்
காஞ்சிபுரம் மாவட்ட அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் மகேஸ்வரி தெற்கு மண்டலத்துக்கு மாற்றம் செய்யப்பட்டார். ஸ்ரீபெரும்புதூர் காவல் ஆய்வாளர் ராஜாங்கம், மணிமங்கலம் காவல் ஆய்வாளர் பாலாஜி ஆகியோரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

படப்பை குணாவின் மனைவி
இதற்கிடையே சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த படப்பை குணாவின் மனைவி எல்லம்மாள் ''வழக்குகளில் சரணடைய தனது கணவர் தயாராக உள்ள நிலையில், புறநகர் பகுதியில் நியமிக்கப்பட்டுள்ள காவல் அதிகாரியால் என்கவுண்டர் செய்யப்படலாம்'' என்று கூறினார். ஆனால் இதனை காவல்துறை மறுத்ததால் எல்லம்மாளின் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications