ஈரோட்டில் ஆற்றில் மூழ்கி 3 இளைஞர்கள் பலி.. தலா ரூ.2 லட்சம் நிதி உதவி அறிவித்த முதல்வர் ஸ்டாலின்
சென்னை: ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகேட் தீர்த்தம் எடுப்பதற்காக சென்ற 3 இளைஞர்கள் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். இந்த நிலையில், உயிரிழந்த இளைஞர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை அறிவித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டம் கொடுமுடி காசிபாளையத்தில் ஓடும் காவிரி ஆற்றில் தண்ணீர் ஓட்டம் தற்போது அதிகமாக இருக்கிறது. இன்று ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு ஆற்றங்கரைகளில் மக்கள் பூஜைகளை செய்து புது திருமாங்கல்யத்தை மாற்றுகிறார்கள். இதே போல் விளைச்சல் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக காவிரி அன்னையை வழிபட்டு பலர் பயிர் வைக்கும் பணிகளையும் செய்தனர்.

இந்த நிலையில் காசிபாளையத்தில் கொந்தாளம் புதூர் மதுரை வீரன் கோயிலுக்கு தீர்த்தம் எடுப்பதற்காக கொந்தாளம்புதூரை சேர்ந்த ஜெகதீஷ் (18), சவுத்ரி (14), குப்புராஜ் (17) ஆகியோர் வந்திருந்தனர். அப்போது எதிர்பாரதவிதமாக 3 பேரும் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டு ஆற்றில் மூழ்கி பலியாகினர். இந்த நிலையில், ஆற்றில் மூழ்கி உயிரிழந்த உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் நிதி உதவி அளித்து முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஈரோடு மாவட்டம், கொடுமுடி வட்டம், வெங்கம்பூர்-அ கிராமம் வழியாக செல்லும் காவிரி ஆற்றில் இன்று (3-8-2023) காலை கோவில் திருவிழாவிற்காக தீர்த்தம் எடுக்கச் சென்ற, கொடுமுடி, தட்டாம்பாளையம், கொண்டலாம்புதூர் பகுதியைச் சேர்ந்த குப்புராஜ், த/பெ.கோபி (வயது19). ஜெகதீஸ்வரன். த/பெ.சிவகுமார் (வயது 18) மற்றும் சௌத்ரி, த/பெ.கோபி (வயது 14) ஆகிய மூவரும் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
உயிரிழந்த இளைஞர்களின் பெற்றோர்களுக்கும் அவர்களது நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications