சல்லி சல்லியா போகுதே என்டிஏ ஆசை.. டிடிவி தினகரன், அன்புமணி கறாரால் அதிரும் பாஜக! அமித்ஷா முடிவு என்ன
சென்னை: அரசியலில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தைகள் மற்றும் தொகுதி பங்கீடு விவகாரங்கள் பெரும் இழுபறியை சந்தித்து வருகின்றன. குறிப்பாக, அதிமுக மற்றும் பாஜக தலைமையிலான கூட்டணியில் இடங்களைப் பகிர்ந்து கொள்வதில் நிலவும் முரண்பாடுகளைத் தீர்க்க, அக்கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் டெல்லியை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார்.. அதிமுக 170 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்ற இலக்கை முன்வைத்துள்ள நிலையில், பாஜக தரப்பில் குறைந்தது 30 தொகுதிகள் கோரப்படுவதாக தெரிகிறது..

இதற்கு நடுவில் பாமக போன்ற கூட்டணிக் கட்சிகளின் எதிர்பார்ப்புகளும் எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு புதிய நெருக்கடியை உருவாக்கியுள்ளன. குறிப்பாக, கூட்டணியிலுள்ள சிறிய கட்சிகள் எந்த சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற மோதல் வலுத்துள்ளதாக தெரிகிறது..
டிடிவி தினகரன் டெல்லி
அதாவது பாஜக தனது தாமரைச் சின்னத்தில் சிறிய கட்சிகளைப் போட்டியிட வைக்க முயல, எடப்பாடி பழனிசாமி அவர்கள் இரட்டை இலைச் சின்னத்திலேயே நிற்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக உள்ளாராம்.
இப்படிப்பட்ட சூழலில், இன்றைய தினம் என்டிஏ கூட்டணியில் இடம் பெற்றுள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் இன்று டெல்லி செல்கிறார்.. இதுதான் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பிரிக்கும் வாக்குகள்
டிடிவி தினகரனைப் பொறுத்தவரை, தென் தமிழகத்தில் தங்களுக்கு இருக்கும் செல்வாக்கை முன்னிறுத்தி கணிசமான தொகுதிகளை பெற அவர் திட்டமிட்டுள்ளார். கடந்த தேர்தல்களில் அமமுக பிரித்த வாக்குகள் அதிமுகவின் வெற்றி வாய்ப்பைப் பாதித்ததை டெல்லி தலைமை நன்கு உணர்ந்துள்ளது.
அதனால்தான் இந்த முறை ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை உள்ளடக்கிய ஒரு பலமான கூட்டணியை உருவாக்க பாஜக மேலிடம் விரும்புகிறது. ஆனால், எடப்பாடி பழனிசாமி இவர்களை கூட்டணிக்குள் சேர்ப்பதற்குத் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறார். இந்த சிக்கலான சூழலில், நேரடியாக பாஜக மேலிடத்தை சந்திப்பதன் மூலம் தனக்கான இடத்தையும், தனது ஆதரவாளர்களுக்கான முக்கியத்துவத்தையும் உறுதி செய்யவே தினகரன் முயல்வதாக தெரிகிறது.
அமமுக டிடிவி தினகரன்
ஆனால், அரசியல் ரீதியாக பார்த்தால், தினகரனின் இந்த பயணம் வெறும் தொகுதி பங்கீட்டிற்கானதாக மட்டுமே தெரியவில்லை.. அது அதிமுகவின் ஒட்டுமொத்த அதிகாரப் போட்டியில் தனது இருப்ப தக்கவைத்துக் கொள்வதற்கான ஒரு போராட்டமாகவும் பார்க்கப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமிக்கும் பாஜகவிற்கும் இடையே நிலவும் இழுபறியைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள டிடிவி தினகரன் திட்டமிட முயலலாம் என்றும், ஒருவேளை எடப்பாடி பழனிசாமி பாஜகவின் நிபந்தனைகளுக்கு உடன்பட மறுத்தால், தினகரன் மற்றும் ஓபிஎஸ் ஆகியோரை மையமாக வைத்து ஒரு மாற்று வியூகத்தை பாஜக வகுக்கக்கூடும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து சொல்கிறார்கள்.
பாமக அன்புமணி டெல்லி பயணம்
அதேபோல பாமக தலைவர் அன்புமணியும் இன்று டெல்லி சென்றுள்ளார்.. அமித்ஷாவை சந்தித்து தொகுதி இழுபறி தொடர்பாக பேச உள்ளார்.. பாமக ஏற்கனவே என்.டி.ஏ கூட்டணியில் இணைந்திருந்தாலும், அதன் உள் அரசியல் மற்றும் தலைமை நிலைப்பாடுகள் இன்னும் தெளிவாக ஒரே கோட்டில் வராத நிலை இருப்பதாகவும் கூறப்படுகிறது.. பாமகக்கு சுமார் 20 முதல் 25 சீட்கள் வரை வழங்கப்படலாம் என்று சொல்லப்படும் நிலையில், 23 வரை பேசப்படலாம் என்கிறார்கள்.
இதே நேரத்தில், அதிமுக - பாஜக இடையேயும் தொகுதி ஒதுக்கீடு குறித்து கருத்து வேறுபாடுகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.. எனினும் வெளிப்படையாக தலைவர்கள் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை என்று கூறினாலும், தொடர்ச்சியான டெல்லி பயணங்கள் மற்றும் ஆலோசனைகள் கூட்டணிக்குள் உள்ள நெருக்கடியை சுட்டிக்காட்டுகின்றன என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்..
அதிமுக, அமமுக, பாமக என சில கட்சிகளின் அதிகார மையம் இப்போதெல்லாம் டெல்லியையே சுற்றி சுற்றி சுழன்று கொண்டிருக்கிறது. எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதம், பாஜகவின் வாக்கு வங்கி கணக்குகள் மற்றும் டிடிவி தினகரனின் அரசியல் எதிர்காலம், அன்புமணியின் திடமான திட்டம், இவையெல்லாம் ஒரே புள்ளியில் இணையும் இடமாக இந்த டெல்லி சந்திப்புகள் அமையும் என்றே தெரிகிறது.. பொறுத்திருந்து பார்ப்போம்...!!












Click it and Unblock the Notifications