கதிர் ஆனந்த்திடம் 300 கேள்விகள்.. 10 மணி நேரம்.. சென்னை அமலாக்கத்துறை ஆபிஸில் நடந்தது என்ன?
சென்னை: சமீபத்தில் நடந்த ரெய்டுக்கு பிறகு புதிதாக அனுப்பப்பட்ட சம்மனுக்கு கதிர் ஆனந்த் எம்பி அமலாக்கத்துறையின் சென்னை அலுவலகத்தில் இன்று நேரில் ஆஜராகி உள்ளார். ரெய்டின் போது கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் கதிர் ஆனந்த்திடம் 300-க்கும் மேற்பட்ட கேள்விகளை தயாரித்து வைத்திருந்தனர். சுமார் 10 மணி நேரம் விசாரணை நடைபெற்றதை அடுத்து, அவர் அமலாக்கத்துறை அலுவலகத்தில் இருந்து புறப்பட்டார். முன்னதாக என்ன நடந்தது என்று பார்ப்போம்.
கடந்த 2019 ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வேலூர் தொகுதியில் போட்டியிட்டார். அப்போது அவர், வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க முயன்றதாக புகார் எழுந்தது. அதன்பேரில் துரைமுருகனின் வீடு, கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரி போன்ற இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு திடீரென சோதனை நடத்தினார்கள்.

துரைமுருகனுக்கு நெருக்கமானவராக கருதப்படும் திமுகவைச் சேர்ந்த நிர்வாகியான பூஞ்சோலை சீனிவாசனின் வீடு மற்றும் அவரது உறவினருக்குச் சொந்தமான சிமெண்ட் குடோன் உள்ளிட்ட 6 இடங்களிலும் அப்போது சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.11 கோடியே 51 லட்சம் பணம் சிக்கியதாக வருமான வரித்துறை கூறியிருந்தது. இதையடுத்து 2019ம் ஆண்டு வேலூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. பின்னர் மீண்டும் நடத்தப்பட்ட தேர்தலில் கதிர் ஆனந்த் வெற்றி பெற்று எம்.பி. ஆனார்.
இந்த நிலையில் கதிர் ஆனந்த், பூஞ்சோலை சீனிவாசன் உள்ளிட்டோர் மீது காட்பாடி காவல் நிலையத்தில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்தது. இதையொட்டி சமீபத்தில் கதிர் ஆனந்துக்கு சொந்தமான என்ஜினியரிங் கல்லூரி, பூஞ்சோலை சீனிவாசன் மற்றும் அவரது உறவினர்கள் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 2 நாட்கள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
இந்த சோதனையில் சுமார் ரூ.14 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்களும், ரூ.75 லட்சம் ரொக்க பணமும் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக கதிர் ஆனந்த் எம்.பி.யை விசாரணைக்கு இன்று ஆஜராக வேண்டும் என்று ஏற்கனவே அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. அதனடிப்படையில் அவர், இன்று சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். அங்கு என்ன நடந்தது என்பது குறித்து நமக்கு கிடைக்க தகவல்களை பார்ப்போம்.
அமலாக்கத் துறையின் சம்மனுக்கு ஆஜராகாமல் தொடர்ந்து தவிர்த்து வந்தாராம் கதிர் ஆனந்த். இந்த நிலையில் சமீபத்தில் நடந்த ரெய்டுக்கு பிறகு புதிதாக அனுப்பப்பட்ட சம்மனுக்கு அமலாக்கத்துறையின் சென்னை அலுவலகத்தில் இன்று நேரில் ஆஜராகினார். ரெய்டின் போது கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் கதிர் ஆனந்த்திடம் 300-க்கும் மேற்பட்ட கேள்விகளை தயாரித்து வைத்திருந்தனர்.
அந்த கேள்விகள் அனைத்தும் இன்று கதிர் ஆனந்திடம் கேட்கப்பட்டிருக்கிறது. இதில் சுமார் 100 கேள்விகளுக்கு பதிலளித்தார் என்றும், பெரும்பாலான கேள்விகளுக்கு நினைவில்லை, தெரியவில்லை, வழக்கறிஞரிடம் கேட்க வேண்டும், கல்லூரி நிர்வாகிகளுக்குத்தான் தெரியும் என்றும் கதிர் ஆனந்த் சொல்லியிருப்பதாக தகவல் வருகிறது. அமலாக்கதுறை அலுவலகத்திலிருந்து பல மணிநேரமாக அவர் வராததால், கைது செய்யப்படுவாரோ என்ற அச்சம் துரைமுருகன் மற்றும் அவரது குடும்ப வட்டாரங்களில் பரவியது. ஆனால் கதிர் ஆனந்திடம் 10 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. அதன்பின்னர் அவர் சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு சென்றார்.
முன்னதாக நேற்று சீனியர் வழக்கறிஞர்களிடம் அமலாக்கத்துறையின் சம்மனுக்கு துரையும் கதிரும் நீண்ட நேரம் விவாதித்தனர். ஆஜரானால் மட்டுமே இதிலிருந்து விடுபட முடியும் என்று வழக்கறிஞர்கள் வலியுறுத்தினர். ஆனால், ஆஜாராகாமல் இருக்க சட்ட ரீதியிலான வழியைச் சொல்லுங்கள் என்றே பல முறை கேட்டிருக்கிறார் கதிர் ஆனந்த். ஆனால், அப்படி எந்த சட்ட பாயிண்டும் கிடைக்கவில்லை, ஆஜராகுங்கள். அதன் பிறகு வருவதை சட்ட ரீதியாக எதிர்கொள்ளலாம். ஆஜராகாமல் இருப்பதுதான் சிக்கலை அதிகரிக்கச் செய்யும் என்று வழக்கறிஞர்கள் தெரிவித்து விட்டனர். இதனையடுத்தே, வேறு வழியில்லாமல் இன்று நேரில் ஆஜரானார் கதிர் என்கிறார்கள் திமுக மேலிட தொடர்பாளர்கள்.












Click it and Unblock the Notifications