"மாறும் கேம்?".. மம்தா அப்படி சொன்னதுமே.. பூஜையறைக்கு சென்ற "துர்கா".. 3வது அணியா? பளீர் குபேந்திரன்
3வது அணி அமைய வாய்ப்புள்ளதா என்பது குறித்து மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் கூறியுள்ளார்
சென்னை: இன்றுவரை காங்கிரசுடன், முதல்வர் ஸ்டாலின் இணக்கமான போக்கையே கொண்டிருக்கிறார் என்றாலும் அரசியலில் எதுவும் மாறலாம்.. ஒருவேளை, நாளை காங்கிரஸைவிட்டு திமுக விலகுகிறது என்றால், அங்கே பாஜக இருக்கிறது என்றே அர்த்தம்.. அதேபோல, 3வது அணி என்று ஒன்று அமைந்துவிட்டால், அது பாஜகவுக்கு சாதகமாக அமையும் என்று மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் தன் கணிப்புகளை கூறியுள்ளார்.
முதல்வர் ஸ்டாலினை, மம்தா பானர்ஜி சந்தித்து விட்டு போனதன் அரசியல் அதிர்வுகள் இன்னும் அடங்கவில்லை.. இது தொடர்பாக சில யூகங்களும், சந்தேகங்களும் களத்தில் வட்டமடித்து கொண்டிருக்கின்றன.
அவர்கள் இருவரும் அரசியல் பேசவில்லை என்று ஒரு தரப்பும், 3வது அணி குறித்த பேச்சு அடிபட்டது என்று இன்னொரு தரப்பும் சொல்லி வருகிறார்கள்.. இந்நிலையில், நம் ஒன் இந்தியா தமிழுக்கு, மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் ஸ்பெஷல் பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அந்த பேட்டியில் அவர் சொன்ன கருத்துக்கள்தான் இவை:

துர்கா ஸ்டாலின்
"15 நிமிடங்கள்தான் முதல்வர் ஸ்டாலின், வீட்டில் மம்தா இருந்தார்.. அதில், பெரும்பாலான நிமிடம், ஸ்டாலின் மனைவியிடம்தான் பேசியிருக்கிறார்.. "எங்கள் மாநிலத்தில் துர்கா என்ற வழிபாட்டு விழா மிகவும் பிரசித்தி பெற்றது, அது உங்களின் பெயர் ஒற்றுமையிலும் உள்ளது" என்று மம்தா சொல்லப்போக, அதைக்கேட்டு துர்கா நெகிழ்ந்து போயுள்ளார்.. உடனே அழைத்து சென்று தன்னுடைய பூஜையறையை காட்டுகிறார்.. இதுதான் நமக்கு வெளியே வந்த தகவல்.. அங்கே அரசியல் எதுவும் பேசப்படவில்லை.. ஆனாலும், நம் மக்களாகவே அரசியலுடன் தொடர்புபடுத்தி பேசிவருகிறார்கள்..

காலை வெட்டுவேன்
பாஜகவை கடுமையாக எதிர்க்கும் மனநிலைமையில் இருந்து மேற்கு வங்க முதல்வர் விலகிவிட்டார்.. அப்படி விலகி பல நாட்களாகிறது.. பாஜக காலை வைத்தால், காலை வெட்டுவேன், அடித்து விரட்டுவேன் என்று கோபாவேசமாக அன்று பேசிய மம்தாவும், பாஜகவில் இருந்து கவர்னராக சென்றிருக்கக்கூடிய, இல.கணேசன் அண்ணனின் 80வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்று, சண்டை மேளத்தில் கலந்து, மேளம் அடித்துகொண்டு இருந்த மம்தாவும் ஒன்றல்ல..

கேம் சேஞ்ச்
ஒரு மாநில முதல்வர், அம்மாநில ஆளுநரின் குடும்ப விழாவுக்கு சென்றதாக மட்டுமே இதை எடுத்துக் கொள்ள முடியாது.. நேற்றுவரை ஜெகதீப்பிடம் இந்தம்மா காட்டிய ஆவேசமும், அவர் இந்தம்மா மீது காட்டிய ஆவேசமும் எங்கே போனது? இல.கணேசன் குடும்பத்தில் மட்டும் எப்படி அது மாறியது? அதனால் மம்தா மாறிவிட்டார்.. பாஜகவிடம் சரண்டராகிவிட்டார்.. ஜெகதீப் அங்கே ஆளுநராக இருந்தபோது, இவர்கள் இருவருக்குமான உறவு விரிசலை இந்த நாடே பார்த்தது.. அவர் அங்கிருந்து மாறியதுமே, சட்டசபையில் மோடி நல்லவர் என்கிறார் மம்தா.. ஆர்எஸ்எஸ்ஸில் இருப்பவர்கள் எல்லாருமே கெட்டவர்கள் இல்லை, மோடிக்கு தெரியாமல் சில அதிகாரிகள் வரம்புமீறி செயல்படுகிறார்கள்.. இதையெல்லாம் பேசியது மம்தா..

சுவேந்து அதிகாரி
சுவேந்து அதிகாரி அங்கே சென்றபிறகு மம்தா பேசிய பேச்சும், ஒரு தோல்விக்கு பிறகு வெற்றி பெற்று பேசுகிற மம்தாவும் ஒன்றல்ல.. அரசியல் சலசலப்புக்காக மட்டுமே முதல்வர் ஸ்டாலினை சந்தித்துள்ளார்.. ஆனால், அன்று பாஜகவை எதிர்த்த வேகத்திலேயே இன்றும் இருந்திருந்தால், இல.கணேசன் வீட்டிற்கு வந்திருப்பாரா? சட்டமன்றத்தில் மோடி நல்லவர் என்று சொல்லக்கூடிய அளவுக்கு இவருக்கு நெருக்கடி ஏன் வந்தது? சொந்த அமைச்சர் சட்டர்ஜியிடம் சோதனை, தன்னுடைய அண்ணன் மகன் சுற்றியிருக்கிற விஷயங்கள், தன்னுடைய அதிகாரத்தின் மீதான நெருக்கடிகள் வருவதால், மம்தா அடிபணிகிறார்..

டோட்டல் காலி
அடுத்த 4 வருடத்துக்கு தாம் ஒரு முதலமைச்சர், ஆட்சியை நடத்த முடியாத அளவுக்கு பாஜக நெருக்கடி தருவதால், வேறு வழியில்லாமல் இப்படி பயந்து பாஜகவுடன் செல்கிறார்.. ஒரு அரசியல்வாதி ஒரே நிலைப்பாட்டில் தொடர்ந்து இருப்பார் என்பதற்கான எந்தவிதமான நிலைப்பாடும் இல்லை.. பாஜகவுக்கு ஒரே தேவை காங்கிரஸை காலி செய்ய வேண்டும்.. அவ்வளவுதான்.. காங்கிரசும் தலைதூக்க கூடாது, கம்யூனிஸ்ட்டும் தலைதூக்க கூடாது.. ஒருவேளை 3வது அணி அமைந்தால், அதில் ஸ்டாலின் இடம்பெற வாய்ப்பு இல்லை.. காரணம், அவர் காங்கிரசுடன் இணக்கத்தில்தான் உள்ளார்..

3வது அணி
கேசிஆருக்கு என்ன பிரச்சனை என்றால், காங்கிரஸ் அவர்களுக்கு வரக்கூடாது என்பதுதான்.. இதேதான் ஜெகன்மோகன் ரெட்டிக்கும், இதேதான் மம்தாவுக்கும் பிரச்சனை.. ஆனால் காங்கிரஸ் எந்த காலத்திலும் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்காது.. அதனால் ஸ்டாலினுக்கு அந்த கவலை இல்லை.. ஒருவேளை, நாளை காங்கிரஸைவிட்டு திமுக விலகுகிறது என்றால், அங்கே பாஜக பிரதானமாக இருக்கிறது என்றே அர்த்தம்.. இந்த நிமிடம்வரை காங்கிரஸுடன் திமுக ஒற்றுமையாகவே உள்ளது என்றாலும், 3வது அணி என்று ஒன்று அமைந்துவிட்டால், அது பாஜகவுக்கு நிச்சயம் சாதகமாக அமையும்" என்றார்.












Click it and Unblock the Notifications