"4 ராஜாக்களின்" சதுரங்க வேட்டை.. 4 முனைப்போட்டிக்கு தயாரான தமிழ்நாடு.. திராவிடத்தை வெல்கிறதா "காவி"
சென்னை: கூட்டணி பேச்சுவார்த்தைகள், சீட் பேரங்கள் அனைத்தும் முடிந்த நிலையில், 4 முனைப்போட்டிக்கு தயாராகி உள்ளது தமிழ்நாடு.. இதையடுத்து அரசியல் கட்சிகள், வாக்கு சேகரிப்பில் தீவிர கவனத்தை செலுத்த துவங்கி உள்ளன.
எம்பி தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி, ஜுன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளிலும் ஏப்ரல் 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற போகிறது.. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜுன் 4ம் தேதி எண்ணப்பட்டுஅன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

முடிவாகவில்லை: 2 நாட்களுக்கு முன்பு, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் தேர்தல் களம் பரபரப்படைந்துவிட்டது. காரணம், எந்த கட்சியிலுமே கூட்டணி முடிவாகவில்லை.. சீட் பேரம், கூட்டணி பேச்சுவார்த்தைகள் இழுபறியில் இருந்தால், திடீரென தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது, மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுவதால், அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டணியை முடிவு செய்வதில் அவசரம் காட்ட தொடங்கின.. திமுக கூட்டணியில் யார் யாருக்கு எத்தனை இடம் என்பது இறுதியானாலும், தொகுதி எது என்பது இழுபறியாக இருந்தது... குறிப்பாக, காங்கிரஸ் கட்சியில் தொகுதிகள் குறித்து சில முடிவுகள் மாற்றப்பட்டு, உறுதிசெய்யப்பட்டது. இன்றைய தினம் திமுகவின் வேட்பாளர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டு விட்டது.
புதுமுகங்கள்: இளைஞர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்படும் என்று, முதல்வர் ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினும் தொடர்ந்து சொல்லி வந்தநிலையில், 11 புதுமுகங்களுக்கு தற்போது வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அதிமுக கூட்டணியை பொறுத்தவரை, மெகா கூட்டணி என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பாகவே நீடித்து வந்தது.. புதிய தமிழகம், புரட்சி பாரதம் ஆகிய கட்சிகள் மட்டுமே இணைவதாக உறுதியாகியிருந்தது.
பாமக இழுபறி: ஆனால், பாமகவும், தேமுதிகவும் நீண்ட இழுபறியை தந்துவிட்டார்கள். பலகட்ட பேச்சுவார்த்தைகள் மறைமுகமாகவே இவர்களிடம் நடத்தப்பட்டு வந்தன. இறுதியில் தேமுதிக கூட்டணியில் ஐக்கியமாகி உள்ளது. 5 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. அத்துடன், அதிமுகவின் முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை இன்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
பாஜக கூட்டணியை பொறுத்தவரை, பாமக, ஓபிஎஸ், அமமுக, தமாகா, புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், கொங்குநாடு முன்னேற்றக் கழகம் போன்ற கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதில், பாமக காரணமாகவே, கூட்டணி இறுதி செய்யப்படாமல் இழுபறி நீடித்தது..
அதிமுகவிலேயே பாமக கூட்டணி வைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் பாஜகவுடன் கூட்டணி, அதிமுகவுக்கு ஷாக் தந்துள்ளது பாமக.
சீமான் ரெடி: நாம் தமிழர் கட்சி, இந்த முறையும் தனித்தே களம் காண்கிறது.. தனித்து போட்டியிடுவதாக சீமான் அதிரடியாக அறிவித்து, வேட்பாளர்களையும் அறிவித்து விட்டார்... சின்னம் பிரச்சனை திடீரென கட்சிக்கு டென்ஷனை தந்தாலும், சின்னம் இல்லாவிட்டால் என்ன? எங்கள் அண்ணன் சீமான்தான் எங்கள் சின்னம் என்று சொல்லிக்கொண்டு, நாம் தமிழர் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட துவங்கி விட்டார்கள்.
மொத்தத்தில், 4 முனைப்போட்டிக்கு தயாராகி விட்டது தமிழ்நாடு.. தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே இருக்கின்றன.. இந்த குறுகிய காலத்திற்குள் பிரச்சாரத்தையும் முடிக்க வேண்டிய கட்டாயம் அனைத்து கட்சிகளுக்குமே ஏற்பட்டுள்ளது. நடத்தை விதிகளும் அமலில் உள்ளதால், அனலடிக்கும் பிரச்சாரத்தை உடனடியாக ஆரம்பித்துவிட்டார்கள் தமிழகத்தின் தலைவர்கள்..
4 முனைப்போட்டி: நடக்க போகும் தேர்தலில் திராவிட கட்சிகளுக்கு போட்டியாக பாஜக கூட்டணி, கடும் போட்டியை ஏற்படுத்த வாய்ப்புள்ளதால், இந்த முறை தேர்தல் மிகுந்த ஆர்வத்தை இப்போதே கிளப்பி விட்டுள்ளது. இந்த 4 முனைப்போட்டியில் வெற்றி பெற போவது யார்?? என்ற எதிர்பார்ப்பில் தமிழக மக்கள் காத்துள்ளனர்... பொறுத்திருந்து பார்ப்போம்!!












Click it and Unblock the Notifications