தேவாலய திருவிழாவில் பறிபோன உயிர்கள்..4 பேருக்கு எமனாக மாறிய ஏணி! இரவோடு இரவாக முதல்வர் போட்ட உத்தரவு
சென்னை: கன்னியாகுமரி மாவட்டம் இனயம் புத்தன்துறை மீனவ கிராமத்தில் தேவாலய திருவிழாவை முன்னிட்டு அலங்காரம் செய்தபோது மின்சாரம் தாக்கியதில் நான்கு பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதி உதவி அறிவித்துள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே இனயம் புத்தன்துறை மீனவ கிராமத்தில் கடந்த 15 நாட்களாக தேவாலயத் திருவிழா நடைபெற்று வருகிறது. இன்று இரவு தேர் பவனி நடைபெற இருந்த நிலையில் அலங்காரம் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது.

இதை அடுத்து அங்கு உள்ள பெரிய இரும்பு ஏணியை நான்கு பேர் நகர்த்தி சென்றதாக கூறப்படுகிறது. அப்போது கோவிலுக்கு அருகே சென்ற உயரழுத்த மின் கம்பியில் இரும்பு ஏணி உரசியது. அப்போது எதிர்பாராத விதமாக உயரழுத்த மின்சாரம் ஏணி வழியாக பாய்ந்த நிலையில் அதனை நகர்த்திச் சென்ற நான்கு பேர் படுகாயம் அடைந்தனர்.
இதை அடுத்து மின்சாரம் தாக்கப்பட்ட நான்கு பேரையும் அருகில் இருந்தோர் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் வரும் வழியிலேயே மூன்று பேர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். ஒருவர் உயிருக்கு போராடிய நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்த போதும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதை எடுத்து மின்சாரம் தாக்கி பலியானவர்களின் எண்ணிக்கை நான்காக அதிகரித்தது. இதனால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசார் நடத்திய விசாரணையில் மின்சாரம் தாக்கி பலியானது அதே கிராமத்தைச் சேர்ந்த விஜயன், சோபன், மனுஷ், ஜெஸ்டிஸ் ஆகியோர் என்பது தெரியவந்தது. இந்நிலையில், இனயம் புத்தன்துறை மீனவ கிராமத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்,"கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் வட்டம், இனயம் புத்தன்துறை மீனவ கிராமத்தில் புனித அந்தோணியார் தேவாலய வருடாந்திர திருவிழா நடந்துவரும் நிலையில் இன்று (1-3-2025) மாலையில் நடைபெற்ற தேர் பவனியில் அலங்காரம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வைக்கப்பட்டிருந்த இரும்பு ஏணியை சாலையின் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்ற முயன்றபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி, இனயம் புத்தன்துறையைச் சேர்ந்த திருவாளர்கள் விஜயன் (வயது 52) த/பெ. தனிஸ்லாஸ், சோபன் (வயது 45) த/பெ. பெர்னின், மனு (வயது 42) த/பெ. ஒஸ்மான் மற்றும் ஜெஸ்டிஸ் த/பெ. விக்டர் (வயது 35) ஆகிய நான்கு நபர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன். இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த நான்கு நபர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதுடன் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஐந்து இலட்சம் ரூபாய் வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்." என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications