மாவு பாக்கெட் கெட்டு போகுது… இட்லி, தோசை மாவுக்கு ஜிஎஸ்டி விலக்கு தருமா மத்திய அரசு?
சென்னை: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் சமீபத்தில் டெல்லியில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. அதிலி, ஜிஎஸ்டி வரி விதிப்பில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. ரொட்டி, சப்பாத்தி, பரோட்டா போனற் உணவுகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டாலும், இட்லி, தோசை போன்ற உணவுகளுக்கு விலக்கு அளிக்கவில்லை. எனவே, இதுகுறித்த கோரிக்கையை உணவுப்பொருள் வியாபாரிகள் விடுக்க துவங்கியிருக்கிறார்கள்.
இந்தியாவை பொறுத்தவரை கடந்த 7 வருடங்களாக ஜிஎஸ்டி வரி விதிப்பு நடைமுறையில் இருந்து வருகிறது.. 5, 12, 18, 28 என்று சதவீத அடிப்படையில் பொருட்கள் மீது ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு வந்த நிலையில், சமீபத்தில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.

இட்லி மாவுக்கு ஜிஎஸ்டி வரி
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் ஜிஎஸ்டியில் 12 மற்றும் 28 சதவீத வரி விதிப்பு முறை கைவிடப்பட்டது. அத்துடன் பல்வேறு பொருட்களின் மீதான ஜிஎஸ்டி வரி விகிதங்களிலும் மாற்றம் செய்யப்பட்டன. குறிப்பாக சில உணவு பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.
அதாவது, சாதாரண ரொட்டி, சப்பாத்தி, ரெடிமேட் சப்பாத்தி, பரோட்டா, பன்னீர், யுஎச்டி பால், பீட்சா, பிரட் போன்றவற்றின் மீதான ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்தில் இருந்து பூஜ்ஜியமாக்கப்பட்டது. ஆனால், இட்லி, தோசை, புட்டு, இடியாப்பம் போன்றவைகளின் ஜிஎஸ்டி வரி மட்டும் நீக்கப்படவில்லை. மேலும், இட்லி, தோசை, புட்டு, இடியாப்பம் போன்றவற்றின் 5 சதவீத ஜிஎஸ்டி வரி தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டது.
18 சதவீதம் வரி
அதேபோல பாக்கெட் மாவு விற்பனைக்கான ஜிஎஸ்டி 18 சதவீதம் என அறிவிக்கப்பட்டது.. இந்த அறிவிப்பானது, தென்னிந்தியாவில் மிகப்பெரிய குழப்பத்தையும், அதிருப்தியையும் தந்துவிட்டது.
அப்படியானால் தென்இந்தியாவில் முக்கிய உணவுப்பொருட்களுக்கு மட்டும் ஜிஎஸ்டி வரியா? பாக்கெட் மாவுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரிவிதித்தால், விற்பனையாளர்களுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக மாறுமே? என்றெல்லாம் புலம்பல்கள் வெடித்தன.
இட்லி தோசைக்கு மட்டும் வரி
இந்நிலையில், உணவுப்பொருள் வியாபாரிகள் இட்லி மாவுக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்கள். இது தொடர்பாக வணிக வரித்துறை கமிஷனரிடம் வணிகர்கள் மனு தந்துள்ளனர்.
தங்களது கோரிக்கைகள் குறித்து அச்சங்கத்தின் கவுரவ ஆலோசகர் ஜெயப்பிரகாசம் செய்தியாளர்களிடம் பேசும்போது, "சரக்கு மற்றும் சேவை வரியான, ஜிஎஸ்டி மறுசீரமைப்பால், 90 சதவீதப் பொருட்களுக்கு, வரிச்சலுகை மற்றும் வரி குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இன்னும் 10 சதவீத பொருட்களுக்கு, வரி குறைப்பும், சலுகையும் வழங்கப்படவில்லை.
காகிதத்துக்கு வரி
இட்லி மாவுக்கு, 5 சதவீதம் ஜிஎஸ்டி அப்படியே உள்ளது. இட்லி மாவு ஒரு நாளில் கெட்டுப்போய் விடும். அதேபோல காகிதத்திற்கு 18 சதவீதம், காகிதத்தில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களுக்கு, 5 சதவீதம் ஜிஎஸ்டி உள்ளது.. எனவே, இட்லி மாவுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்கப்படுவதுடன், காகிதத்திற்கு, 5 சதவீதமாக ஜிஎஸ்டி குறைக்கப்பட வேண்டும்.
இதேபோல பல்வேறு பொருட்களுக்கு, வரி குறைப்பு, வரிச்சலுகை வழங்க, ஜிஎஸ்டி கவுன்சிலில் வலியுறுத்தி, நடவடிக்கை எடுக்குமாறு வணிக வரித்துறை கமிஷனரிடம் மனு அளித்துள்ளோம்.. தாங்கள் தந்த புகாரின் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் கமிஷனர் உறுதி அளித்துள்ளார்" என்றார்.












Click it and Unblock the Notifications