சென்னையின் மிகப்பெரிய சிக்கல்.. மெட்ரோ பணிகளால் மழைநீர் வடிகால் அடைப்பு! களமிறங்கும் எக்ஸ்பர்ட் டீம்
சென்னை: சென்னையில் மெட்ரோ ரயில் பணிகளால் மழைநீர் வடிகால் வழித்தடங்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கனமழை பெய்தால் சென்னையில் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை தவிர்க்க, பருவமழை நெருங்கும் சூழலில், இதுகுறித்து ஆய்வு செய்து தீர்வு காண ஐஐடி பேராசிரியர் உள்ளிட்ட 5 பேர் கொண்ட வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகரில் ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, மெட்ரோ ரயில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சென்னை விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரை, பரங்கிமலை முதல் சென்னை சென்ட்ரல் வரை என 2 வழித்தடங்களில் 54 கி.மீ தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன.

சென்னை மெட்ரோ: இந்த ரயில்களில் தினமும் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் பயணம் செய்து வருகின்றனர். மெட்ரோ ரயில்களுக்கு நாளுக்கு நாள் வரவேற்பு அதிகரித்து வருகிறது. தற்போது சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அதைத்தொடர்ந்து, மேலும் மெட்ரோ ரயில் திட்டத்தை விரிவாக்கும் செய்வதற்கன பணிகள் நடந்து வருகின்றன.
மாதவரம் - சிறுசேரி, மாதவரம் - சோழிங்கநல்லூர், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி ஆகிய 3 வழித்தடங்களை அமைக்க 116 கி.மீ நீளத்துக்கு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளால் சென்னை மாநகராட்சியின் மழைநீர் வடிகால் கட்டமைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
சென்னை சந்திக்கும் முக்கிய பிரச்சனை: சென்னையில் சில மணி நேரங்களில் 5 செ.மீ அளவுக்கு மழை பெய்தாலே பல இடங்களில் மழைநீர் தேங்கும். இந்நிலையில், மெட்ரோ ரயில் பணிகளால் பல இடங்களில் மழைநீர் வழிந்தோடுவது தடைபடும் நிலையில், பாதிப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது எனக் கூறப்படுகிறது.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வரும் பகுதியில் மழைநீர் வடிகால் கால்வாய்கள் வருகிறது என்றால், மாற்று வழியில் வடிகால் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த பருவமழைக் காலம் போல, இந்த முறை நடக்கக்கூடாது என தமிழக முதல்வரும், அதிகாரிகளும் தீவிரம் காட்டி வருகின்றனர்.
வல்லுநர் குழு களத்தில் இறங்குகிறது: இதை கருத்தில் கொண்டு மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வரும் பகுதியில் அறிவியல் முறையில் மழைநீரை வெளியேற்றும் திட்டத்தை உருவாக்க சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் 5 பேர் கொண்ட வல்லுநர் குழுவை நியமித்துள்ளார்.
இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் கூறுகையில், "மெட்ரோ ரயில் நிறுவனம் பல்வேறு சாலைகளில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்தப் பணிகளால் பலவேறு இடங்களில் மழைநீர் வடிகால்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளன. இதனால் கனமழை பெய்யும்போது வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது.
இதுவரை எத்தனை இடங்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளன என்பது குறித்து இன்னும் கணக்கிடவில்லை. மெட்ரோ ரயில் நிறுவனமும், வெள்ளம் ஏற்படுவதை தடுக்க மோட்டார் மூலம் நீரை வெளியேற்றுவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
விரைவில் ஆய்வு: வடகிழக்கு பருவமழை வேறு நெருங்கி வருகிறது. இதை கருத்தில் கொண்டு தொழில்நுட்ப ஆய்வுக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதில் வருவாய் நிர்வாக ஆணையரக கலந்தாலோசகர் காந்திமதிநாதன், ஐஐடி பேராசிரியர் பாலாஜி நரசிம்மன், மாநகராட்சி தலைமை பொறியாளர் ராஜேந்திரன், மெட்ரோ ரயில் நிறுவன தலைமை பொதுமேலாளர் லிவிங்ஸ்டன், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு கழக தலைமை பொறியாளர் பழனிவேல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த எக்ஸ்பர்ட் டீம் ஒரு வாரத்துக்குள் தங்கள் ஆய்வை தொடங்க உள்ளது. இந்த வல்லுநர் குழு அளிக்கும் பரிந்துரைகளை மெட்ரோ ரயில் நிர்வாகம் செயல்படுத்தி, வெள்ள நீரை விரைவாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications