60 தொகுதிகள்.. து. முதல்வர் பதவி..! தவெக பேரம்.. தர மறுத்த எடப்பாடி?.. விலகிய விஜய்
சென்னை: திடீர் என்று அதிமுகவுடன் கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை என்று தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிக்கை வெளியிடுவதற்கான தேவை ஏன் எழுந்தது? அதன் பின்னால் நடந்த சம்பவங்கள் என்ன? என்பது பற்றிய சில விவகாரங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கடந்த ஒரு மாத காலமாக அதிமுகவுடன் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி வைப்பதற்காக சில முயற்சிகளை செய்து வருகிறது என்று ஊடகங்களில் பல அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வந்தனர். அதற்கு ஏற்ற மாதிரி விஜய், திமுகவையும் அக்கட்சியின் ஊழல் சாம்ராஜ்ஜியத்தை வெளிப்படையாக விமர்சித்துப் பேசி இருந்தார். 'திராவிட மாடல்' ஆட்சியின் மீது அவர் குற்றச்சாட்டு வைத்துவிட்டு அதிமுகவைப் பற்றி ஒரு வார்த்தையும் பேசாமல் தவிர்த்து இருந்தார்.

உடனே ஊழலைப் பற்றிப் பேசும் விஜய், ஊழல் புகாரில் சிக்கி சிறைக்குச் சென்ற ஜெயலலிதாவைப் பற்றியும் அவரது ஆட்சியைப் பற்றியும் கருத்துச் சொல்லாதது விநோதமாக இருக்கிறது என்று விசிக உட்பட சில கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.
அப்போது கூட தவெக செய்தி தொடர்பாளர்கள் யாரும் அதிமுகவுடன் கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை என்று மறுத்துப் பேசவில்லை. மாறாக ஆளும் கட்சியாக திமுக இருப்பதால் விஜய் விமர்சித்தார் என்றும் எதிர்க்கட்சியாக உள்ள அதிமுகவை விமர்சிக்க வேண்டிய தேவை தற்போதைக்கு இல்லை என்றும் ஒரு வாதத்தை முன்வைத்து வந்தனர்.
இந்நிலையில்தான் திடீரென்று தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், அதிமுகவுடன் கூட்டணி என்று ஆதாரமற்ற தகவலைச் சிலர் பரப்பி வருவதாகவும் அதில் உண்மை இல்லை என்றும் நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். பெரும்பான்மையுடன் நல்லரசை அமைப்போம் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
கிட்டத்தட்ட 25 நாட்கள் வரை மெளனமாக இருந்துவிட்டு, இப்போது மறுக்க வேண்டிய தேவை என்ன என்று சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதிமுகவுடனான கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை என தவெக அறிவிக்க வேண்டிய நிலை ஏன் வந்தது? அதன் பின்னால் நடந்தது என்ன? அதைப் பற்றி மூத்த பத்திரிகையாளர் துரை கருணா சில விளக்கங்களை அளித்துள்ளார். துரை கருணா பேசுகையில், "ஏறத்தாழ 54 வருஷமாக எம்.ஜி.ஆருடன் நேரடியாகப் பழகி இருக்கிறேன். அவர் 1972 அக்டோபர் மாதம் அதிமுகவை தொடங்கிய பின்னர் அதிக நெருக்கமாக இருந்திருக்கிறேன்.
ஆகவே, எம்.ஜி.ஆர் பாணி அரசியல் என்பது இன்றும் தமிழ்நாட்டில் செல்லுபடியாகக் கூடிய ஒன்றாகவே இருக்கிறது. ஆனால், அவரது அரசியல் பாணியைப் பின்பற்றுவது மிகக் கடினமானது. விஜயகாந்த் அரசியலுக்கு வந்த போது அவரை கருப்பு எம்.ஜி.ஆர் என்றே சொன்னார்கள். அவரும் தன் பிறந்தநாளை வறுமை ஒழிப்பு தினமாகக் கொண்டாடினார். எம்.ஜி.ஆர் அளவுக்கு இல்லை என்றாலும் அவர் வழியில் மக்களுக்கு உதவுவோம் என்றார்.
அரசியல் கட்சி தொடங்க இருப்பதாகப் பேச்சுக்கள் அடிப்பட்ட காலத்தில் ரஜினி ஒரு கல்லூரி விழாவில் கலந்து கொண்டு எம்.ஜி.ஆர். சிலையை திறந்துவைத்தார். அப்போதுகூட அவர் அளவுக்கு யாராலும் வர முடியாது என்று ரஜினி பேசினார். இப்போது அதே மாதிரி எம்.ஜி.ஆர். பாணியை விஜய் பின்பற்றுகிறார் என்று சொல்கிறார்கள். ஆனால், அது முடியாத காரியம் என்பதுதான் உண்மை.
தமிழ்நாட்டில் 68 ஆயிரம் பூத்துகள் இருக்கின்றன. ஒரு பூத் கமிட்டிக்கு 15 பேரை திமுக நியமித்துவிட்டது. அதிமுக அதே அளவுக்காக நபர்களை நியமித்து உள்ளது. தமிழகத்தில் 12ஆயிரத்து 600 வருவாய் கிராமங்கள் உள்ளன. இவற்றுக்கு உட்பட்டு 1 லட்சத்து 25 ஆயிரம் கிளைகள் உள்ளன. மேலும் பேரூர், ஒன்றியம், நகரம் என உள்ளன. இந்தக் கட்டமைப்பை ஒரு கட்சி வலுவாக உருவாக்க வேண்டும்.
இந்தப் பகுதிகள் முழுக்க விஜய் தன் கட்சியின் நிர்வாகிகளை நியமித்துவிட்டாரா என தெரியவில்லை. 75 லட்சம் உறுப்பினர்கள் இதுவரை சேர்ந்துள்ளதாக நேற்று ஒரு செய்தி படித்தேன். அவர்கள் அனைவரும் ரசிகர் மன்றத்திலிருந்து கட்சி உறுப்பினராக மாறியுள்ளனர். விரை 1 கோடியை எட்டி விடுவோம் என்று நிர்வாகிகள் விளக்கம் அளித்துள்ளனர். 6.5 கோடி வாக்காளர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர். அப்படி எனில் ஆறில் ஒரு பங்கு வாக்காளர்கள் தவெக கொண்டுள்ளது. உறுதியாக 10% வாக்குகள் கட்சிக்குக் கிடைக்கலாம்.
ஆனால், இதை வைத்து ஆட்சியை அமைத்துவிட முடியாது. ஒரு கட்சி ஆட்சிக்கு வர 35% க்கும் அதிகமான வாக்குகள் தேவை. எனவே தொடர்ந்து விஜய் 10 ஆண்டுகள் கட்சிப் பணியை இடைவெளி இல்லாமல் நடத்த வேண்டும். அதைச் செய்தால் 2036இல் அவர் ஆட்சி அதிகாரத்தை நோக்கி நகர முடியும். அவர் திமுகதான் எதிரி என்பதை உறுதி செய்துவிட்டார்.
இப்போதைக்கு திமுகவை வலிமையாக எதிர்க்கும் கட்சியாக அதிமுக இருக்கிறது. பாஜகவும் திமுக எதிர்ப்பை முன்வைக்கிறது. மூன்றாவதாகத்தான் விஜய் வருகிறார். ஆக, எடுத்தவுடன் விஜய் ஆட்சி கனவு காண்பது நடக்காத காரியம். திமுக 12 கட்சிகளின் கூட்டணி பலத்துடன் உள்ளது. அதை உடைக்க வேண்டும் எனில் அதிமுக உதவி எந்தக் கட்சிக்கும் தேவையாக உள்ளது. அதிமுக, பாமக, பாஜக, தேமுதிக, தமாகா, தவெக, புதிய தமிழகம், நீதிக்கட்சி, ஐஜேகே, அமமுக எனப் பல கட்சிகள் ஒன்றிணைந்தால் திமுகவை வீழ்த்த முடியும். வெறுமனே விஜய்யால் மட்டும் வீழ்த்த முடியாது.
அதிமுக தரப்பு விஜய்க்கு 40 தொகுதிகள் வரை கொடுக்க முன்வந்ததாக ஒரு பேச்சு அடிப்பட்டு வந்தது. ஆனால், தவெக 60 தொகுதிகளை எதிர்பார்ப்பதாகச் சொல்கிறார்கள். கூடவே துணை முதல்வர் பதவியும் கேட்பதாகக் கூறப்பட்டது. அதே கோரிக்கையை பாமகவும் வைப்பதாக ஒரு பக்கம் பேச்சு அடிப்பட்டது. இந்த 2 கட்சிக்கு 80 தொகுதிகளை எடப்பாடி ஒதுக்கச் சம்மதிப்பாரா? இரண்டு து. முதல்வர்களை தரச் சம்மதிப்பாரா? அங்கேதான் குழப்பம் உருவாகி இருக்கிறது" என்கிறார்.












Click it and Unblock the Notifications