மகன் மீது போலியாக போக்சோ வழக்கு.. கொள்ளுப்பேத்தி மூலமாக நாடகம்.. ஹைகோர்ட்டில் மூதாட்டி 'பரபர' மனு
சென்னை: சொத்து தகராறு காரணமாக தன் மகன் மீது கொள்ளுப்பேத்தி மூலம் போலியான போக்சோ புகார் கொடுக்கப்பட்டிருப்பதாக கூறி, 75 வயது மூதாட்டி ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
18 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோரை தண்டிப்பதற்காக 2012-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டதே போக்சோ சட்டம். குற்றத்தின் தன்மையை பொறுத்து மரண தண்டனை வரை கொடுப்பதற்கு இந்தச் சட்டத்தில் இடம் உள்ளது.
இதனிடையே, நல்ல நோக்கத்துக்காக இந்த சட்டம் கொண்டு வந்தாலும் சில நேரங்களில் தவறாகவும் போக்சோ சட்டம் பயன்படுத்தப்படுவதாக நாடு முழுவதும் புகார்கள் வருகின்றன.

தவறாக பிரயோகிக்கப்படும் போக்சோ?
உதாரணமாக, இரு நபர்களுக்கு இடையே வேறு ஏதோ விஷயத்தில் தகராறு ஏற்பட்டிருக்கும். அப்படியிருக்கும் போது, தங்கள் வீட்டில் உள்ள சிறுமியிடம் அந்த நபர் தவறாக நடந்துகொண்டதாக கூறி போக்சோ சட்டத்தின் கீழ் சில நேரங்களில் போலியாக புகார் தரும் போக்கு அதிகரித்திருக்கிறது. அதேபோல, இருபாலரும் ஒப்புக்கொண்டு செய்துகொள்ளும் காதல் திருமணத்தில் கூட போக்சோ சட்டம் தவறாக கையாளப்படுவதாக அண்மையில் கர்நாடகா உயர் நீதிமன்றம் கூட கருத்து தெரிவித்திருந்தது. அதாவது, காதல் திருமணம் செய்து கொள்ளும் தம்பதியரில், பெண்ணுக்கு 18 வயதுக்கு கீழே இருந்தால் அந்த மணமகனை போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பது அதிகரித்து வருவதாக கர்நாடகா உயர்நீதிமன்றம் கவலை தெரிவித்தது.

மூதாட்டி மனு
மேற்குறிப்பிட்டதை போலவே, தனது மகன் மீது போலியாக போக்சோ வழக்கு பதியப்பட்டிருப்பதாக மூதாட்டி ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். நீலகிரி மாவட்டம் உதகையை சேர்ந்த ரத்தினம் (75) என்ற மூதாட்டி தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: எனக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். அதில் மூத்த மகன் இறந்துவிட்டதால் அவரின் மனைவி வேறொரு திருமணம் செய்துகொண்டார்.

மகன் மீது போலி போக்சோ
இந்நிலையில், சொத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால், மருமகள் குடும்பத்திற்கும் எனக்கும் எந்தவித பேச்சுவார்த்தையும் இல்லை. இந்த சூழலில், எனது மருமகளின் மகள் வழி கொள்ளு பேத்தியை வைத்து, பெண் வழக்கறிஞர் ஒருவரின் தூண்டுதலின் பேரில், நீலகிரி மகளிர் காவல் நிலையத்தில், போலியான போக்சோ வழக்கை 56 வயதான என் இரண்டாவது மகன் மீது தொடரப்பட்டுள்ளது. இதில் எனது மகன் கைது செய்யப்பட்டு 38 நாட்கள் சிறையிலும் அடைக்கப்பட்டார்.

"போக்சோவை ரத்து செய்ய வேண்டும்"
பாலியல் வழக்குகள் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு விதிமுறைகள் வகுத்துள்ள நிலையில் மருத்துவர்கள் தங்களது அறிக்கையில் எவ்வித பாலியல் சம்பவமும் நடைபெறவில்லை என அறிக்கை தந்த பின்பும், பழிவாங்கும் நோக்கத்தில் என் மகன் மீது போக்ஸோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிவில் பிரச்சனையில், பழிவாங்கும் நோக்கோடு என் மகன் மீது போலியான போக்சோ வழக்கு பதியப்பட்டதை ரத்து செய்ய வேண்டும். மேலும், அந்த வழக்கை முதல்வரின் தனிப்பிரிவின் சிறப்பு அதிகாரி விசாரிக்க உத்தரவிட வேண்டும் என தனது மனுவில் ரத்தினம் கோரியுள்ளார்.












Click it and Unblock the Notifications