நடுங்கிய சென்னை.. கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தி எஸ்கேப்பான 14 வயது சிறுவன்! விரட்டி பிடித்த போலீஸ்
சென்னை: சென்னையில் 14 வயது சிறுவன் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் தப்ப முயன்ற நிலையில் ஒரு கிலோமீட்டர் தூரம் துரத்தி போலீசார் மடக்கி பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்தில் 5க்கும் அதிகமான இருசக்கர வாகனங்கள் சேதமடைந்த நிலையில் 3 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சிறுவனிடம் போலீசார் விசாரணை தொடங்கிய நிலையில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை ஜாம் பஜாரில் பாரதி சாலை அமைந்துள்ளது. மாலை வேளையில் எப்போதும் பாரதி சாலையில் மக்கள் கூட்டம் அலைமோதும். இந்நிலையில் தான் இன்று மாலை சுமார் 6 மணியளவில் பாரதி சாலையில் கார் ஒன்று தறிகெட்டு ஓடியது. கார் தாறுமாறாக ஓடிய நிலையில் பொதுமக்கள் அச்சமடைந்து ஒதுங்கினர்.

இந்த வேளையில் கார் அங்கிருந்த இருசக்கர வாகனங்கள் மீது மோதியபடி சென்றது. கார் மோதியதில் மொத்தம் 5க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன. மேலும் 3 பேர் காயமடைந்தனர். இப்படி விபத்தை ஏற்படுத்தினாலும் கூட அந்த காரை அதன் டிரைவர் நிறுத்தவில்லை. தொடர்ந்து கார் ஓடிக்கொண்டே இருந்தது.
இதனை அந்த பகுதியில் கண்காணிப்பு பணியில் இருந்த போலீசார் கவனித்தனர். உடனடியாக விபத்தை ஏற்படுத்திய காரை பின்தொடர்ந்து சென்ற போலீசார் ஒரு கிலோமீட்டருக்கு துரத்தி சென்று மடக்கினர். அப்போது காரில் 2 பேர் இருந்தனர். அவர்களை பிடித்து விசாரித்தபோதுதான் திடுக்கிடும் தகவல் வெளியானது.
அதாவது கார் ஓட்டியவர் யாரென்றால் சிறுவன். 14 வயது மட்டுமே நிரம்பிய நிலையில் 9 ம் வகுப்பு படிக்கும் அந்த சிறுவன் தனது பள்ளி நண்பருடன் காரை ஓட்டி வந்ததும், கார் சிறுவனின் கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனங்கள் மீது மோதியதும் தெரியவந்தது. அதுமட்டுமின்றி அந்த சிறுவன் ஓட்டி வந்த கார் அவரது பெரியப்பாவுக்கு சொந்தமானது என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து காரை பறிமுதல் செய்த போலீசார், கார் ஓட்டிய சிறுவன் மற்றும் அவருடன் இருந்த நண்பரை பிடித்து விசாரித்து வருகின்றனர். சம்பவம் தொடர்பாக சிறுவனின் குடும்பத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி சென்னை அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.
நம் நாட்டை பொறுத்தவரை டிரைவிங் லைசென்ஸ் இன்றி வாகனங்கள் ஓட்டுவது சட்டப்படி குற்றம். மேலும் 18 வயது நிரம்பினால் தான் டிரைவிங் லைசென்ஸ் பெற முடியும். இத்தகைய சூழலில் தான் லைசென்ஸ் இன்றி இந்த சிறுவன் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தி உள்ளார். இதனால் சிறுவனுக்கு கார் கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை பாய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications