ண்ணோவ் வேற மாறி.. தவெக மாநாட்டுக்கு வேர்ல்டு லெவல் பாதுகாப்பு! விஜய்க்காக களமிறங்கும் துபாய் கம்பெனி
சென்னை: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் வரும் 27ஆம் தேதி நடைபெற இருக்கிறது. மாநாட்டுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளை கவனிப்பதற்காக துபாயை சேர்ந்த பிரபல நிறுவனம் பொறுப்பேற்று இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
செப்டம்பர் 23ஆம் தேதி விக்கிரவாண்டி அருகே வி-சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநில மாநாடு நடைபெற இருப்பதாகவும், இந்த கூட்டத்தில் நடிகர் விஜய் தனது கட்சியின் கொள்கை உள்ளிட்டவை குறித்து அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

இதை அடுத்து மாநாட்டை நடத்துவதற்காக தீவிர ஏற்பாடுகளை தமிழக வெற்றிக் கழகத்தினர் செய்து வந்தனர். மாநாட்டுக்கு மாநிலம் முழுவதிலும் இருந்து சுமார் 5 லட்சம் பேரை திரட்ட வேண்டும் என உச்சகட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் விக்கிரவாண்டியில் மாநாடு நடத்துவது தொடர்பாக தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு விழுப்புரம் டிஎஸ்பி பார்த்திபன் 21 கேள்விகள் கேட்டு கடிதம் எழுதினார். அதில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடத்துவதற்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் மாநாட்டுக்கு வருபவர்களுக்கு குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளதா? அவசர காலங்களில் மருத்துவ வசதி மற்றும் ஆம்புலன்ஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறதா? என கேட்கப்பட்டது.
இதனையடுத்து மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகளை தமிழக வெற்றிக் கழகத்தினர் செய்து வந்த நிலையில், தற்போது மாநாடு தள்ளிப் போயுள்ளது. மாநாட்டுக்கு அனுமதி பெறுவது உள்ளிட்ட விவகாரங்களில் செப்டம்பர் மாதம் பாதி கடந்துவிட்ட நிலையில், தற்போது அக்டோபர் 27ஆம் தேதி மாநாடு நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய். இதனையடுத்து மாநாடு நடத்துவதற்கான ஏற்பாடுகளை அக்கட்சியினர் தீவிரமாக செய்து வருகின்றனர்.
தற்போது மாநாட்டுக்கான முதற்கட்ட ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் கொடியேற்றும் நிகழ்வுகள், சுவர் விளம்பரம், போஸ்டர்கள் என தமிழக வெற்றிக் கழகத்தினர் விளம்பர பணிகளை செய்து வருகின்றனர். மேலும் மாநாட்டுக்கு ஆட்களை அழைத்துச் செல்வதற்காக வாகனங்களை முன்னதாகவே அட்வான்ஸ் கொடுத்து புக் செய்து வருகின்றனர். மேலும் ஒவ்வொரு மாவட்டமாக சென்று புஸ்ஸி ஆன்ந்த் மாநாடு தொடர்பாக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தொடர்ந்து கடந்த 4ஆம் தேதி மாநாட்டுக்கு தொடக்க நிகழ்ச்சியாக மாநாட்டு பந்தலுக்கான பூமி பூஜை நடைபெற்றது. மாநாட்டு பந்தல், பார்க்கிங், சமையல் கூடம், நுழைவாயில் என பல்வேறு பணிகள் நடைபெற இருக்கும் நிலையில் நாளையே அவற்றை அமைப்பதற்கான பணிகள் பூமி பூஜையுடன் தொடங்கியது. வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் ஓத, வேள்வியுடன் கணபதி பூஜை தொடங்கியது. தொடர்ந்து பந்தல் காலுக்கு மஞ்சள் சந்தனம், பட்டுத் துணி அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் விஜய் கலந்து கொள்ளாத நிலையில் ஸ்ட்ரெய்ட்டாக மாநாட்டிற்கு தான் அவர் வருவார் என்கின்றனர் அக்கட்சியினர்.
மாநாட்டுக்கு இன்னும் சிறிது கால இடைவெளியே இருக்கும் நிலையில் மாநாட்டுக்கான மேடை, பந்தல் உள்ளிட்டவை அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் முதல் மாநாடு என்பதால் எந்தவித சிக்கலும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக பல்வேறு முன்னேற்பாடுகளை விஜய் பார்த்து பார்த்து செய்து வருகிறார்.
இந்த நிலையில் மாநாட்டின் ஒருங்கிணைப்பு பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்காக துபாயை சேர்ந்த பிரபல நிறுவனம் ஒன்று ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த நிறுவனத்துடன் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தும் ஆலோசனை மேற்கொண்டு இருக்கிறார்.
மாநாட்டுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், மேடை அலங்காரம், விருந்தினர்களை வரவேற்பது, விஜய்க்கு வரவேற்பு, கூட்ட நெரிசலை சமாளிப்பது, உணவு உள்ளிட்டவற்றை வழங்குவது, பார்க்கிங் ஏற்பாடுகளை கவனிப்பது என மாநாட்டு ஒருங்கிணைப்பு பணிகளை அந்த நிறுவனம் மேற்கொள்ள உள்ளது.
மேலும் மாநாட்டிற்கு வரும் தொண்டர்களுக்கு அவசர மருத்துவ சேவை வழங்குவதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் 7000க்கும் மேற்பட்ட வாலண்டியர்கள், தவெக தொண்டர்கள் மற்றும் தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த பணியாளர்கள் மாநாட்டு பணிகளுக்காக பயன்படுத்தப்பட உள்ளனர். அது மட்டும் அல்லாமல் மாநாடை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 10 கிலோமீட்டர் சுற்றளவில் தண்ணீர் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது என அந்த கட்சியினர் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications