சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டெலிகாம் தொழிலில் 10 லட்சம் நஷ்டம்; போர் போட்டு 20 லட்சம் நஷ்டம்! ட்ராகன் மூலம் வென்ற இளம் விவசாயி!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: 20 லட்சம் செலவில் 8 போர்வெல். ஒரு சொட்டு தண்ணீர் இல்லை. அத்தனையும் அம்பேல். நினைத்துப் பார்க்க முடியாத பெரிய நஷ்டம். கொரோனா முடக்கத்தால் செய்துவந்த டெலிகாம் தொழிலை மூட வேண்டிய சூழல். மாற்றி யோசித்தார் கோபி. ட்ராகன் விவசாயம் மூலம் வாழ்க்கையை வென்று காட்டி இருக்கிறார். அவரிடம் பேசினோம்.

 A farmer achieved by planting dragon fruit in Tamil Nadu

மொத்தம் 20 லட்சம் நஷ்டம்

"படித்தது என்னவோ பத்தாம் வகுப்பு வரைக்குத்தான். அதற்கு அப்புறம் அப்பாவுடன் சோடா ஃபேக்ட்ரியில் வேலை பார்த்தேன். கொஞ்ச வருஷம் அந்த வேலை போச்சு. பல வெளிநாட்டு கம்பெனிகள் ஆதிக்கத்தால் அந்தத் தொழிலில் தாக்குப் பிடிக்க முடியவில்லை.
பிறகு டெலிகாம் டீலர்ஷிப் எடுத்து ஒரு கடை நடத்தினேன். 2010 இல் நான் டீலர்ஷிப் எடுத்த கம்பெனியை மூடிவிட்டார்கள். அந்தநேரத்தில் கிட்டத்தட்ட 10 லட்ச ரூபாய் நஷ்டம். வேறு ஏதாவது செய்யலாம் என நினைத்து வேறுசில நிறுவனத்தின் விநியோக உரிமையை எடுத்தேன். அதுவும் கொரோனா ஊரடங்கில் மூட வேண்டியதாகிவிட்டது.

சரி, பூர்வீக தொழிலான விவசாயத்திற்கே போய்விடுவோம் என்று இறங்கினேன். எங்கள் நிலத்துக்குப் பக்கத்தில் இருக்கின்ற நிலங்களில் எல்லாம் தண்ணீர் ஓட்டம் நல்லா இருக்கிறது. ஆனால் எங்கள் நிலத்தில் ஒரு சொட்டு தண்ணீர் இல்லை. கடுமையான வறட்சி. அடுத்தடுத்து 8 போர்வெல் போட்டோம். 20 லட்சம் வரை செலவு ஆனது. ஏழு போர்வெல் சொட்டு தண்ணீர் கிடைக்கவில்லை.

8 போர்வெல் ஒரு சொட்டு நீர் இல்லை

 A farmer achieved by planting dragon fruit in Tamil Nadu

ஒரு ஆழ்துளைக் கிணற்றில் மட்டும் கொஞ்சம் போல ஊற்றுக் கிடைத்தது. அதுவும் ஒரு இஞ்ச் அளவு தண்ணீர் ஊற்று" என்று கூறும் கோபி கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். அங்கு ஓசூர் பக்கம் உள்ள உத்தனப்பள்ளி தான் இவரது கிராமம். அப்பா ஸ்ரீராம நாயுடு ஒரு விவசாயி. அவரது மூத்த மகன்தான் கோபி.

34 வயதில் இவ்வளவு நஷ்டத்தைச் சந்தித்தபோது வாழ்க்கையின் மீது வெறுப்பு வந்ததா? எனக்கேட்டோம். அதற்குக் கோபி, "நாங்கள் எப்போதும் சோர்ந்து போகவில்லை. எப்படியாவது வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற வெறிதான் அதிகரித்தது" என்கிறார்.

 A farmer achieved by planting dragon fruit in Tamil Nadu

"நிலத்தில் சுத்தமா தண்ணீர் இல்லாததால் முதலில் பேரீச்சை பயிரிடலாம் என்றுதான் திட்டமிட்டோம். ஏறக்குறைய ஒரு செடி 4800 ரூபாய். இதைப் பயிரிட்டு முதலீடு எடுக்க 5 வருஷம் வரை காத்திருக்க வேண்டும். முன்பே பல லட்சம் நஷ்டம். இந்த முதலீடு சரிப்பட்டு வராது என விட்டுவிட்டேன்.

அப்போதுதான் ட்ராகன் பழச் செடிகளைப் பற்றித் தெரியவந்தது. இதற்கு அதிக தண்ணீர் தேவையில்லை. ஜூன் முதல் நவம்பர் வரை வரும் மழையே போதும். நாம் தனியாக நீர் விட வேண்டாம். வறண்ட நிலம்தான் ட்ராகன் பயிருக்கு உகந்தது. முதலில் ஒரு ஏக்கர் போட்டேன். அதன் நுட்பங்களை நாம் தெரிந்துகொண்ட பிறகு அதிகரிக்கலாம் என முடிவு செய்தேன்.

முதல் போகம் ஒரு டன் பழங்கள் அறுவடை. இரண்டாம் வருடத்தில் 4 ஏக்கர் முழுக்க பயிரிட்டேன். அதில் பத்து டன் வரை அறுவடை செய்துள்ளோம்" என்கிறார் இந்த இளம் விவசாயி.

" ஒரு ஏக்கருக்கு 2 ஆயிரம் செடிகள் தேவை. மொத்தம் 500 படுக்கை கம்பங்களை அமைக்க வேண்டும். மொத்தம் 4 ஏக்கரில் 8 ஆயிரம் செடிகளை நட்டுள்ளோம். முதலில் தொடங்கிய போது நாங்கள் படுக்கை அமைக்கவில்லை. செடிகளைத் தரையில் விட்டுவிட்டோம். அதனால் பூஞ்சை பாதிப்பு ஆகிவிட்டது. அதன்பிறகுதான் படுக்கை அமைத்து சாகுபடி செய்தோம்" என்று சொல்லும் கோபியிடம் முதன்முதலாகக் கிடைத்த பழத்தைப் பார்த்தபோது எப்படி இருந்தது என்றோம்.

 A farmer achieved by planting dragon fruit in Tamil Nadu

"முதல் பழமே 800 கிராம் எடை இருந்தது. அந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை. செடியில் உள்ள அத்தனை பூக்களையும் அகற்றிவிட்டு ஒரே ஒரு பூவை மட்டும் பராமரித்து வந்தால் சுமார் 2 கிலோவரை பழத்தின் எடையை அதிகரிக்கலாம். பூச்சி மருந்து அடிப்பது போன்ற பராமரிப்பு செலவுகள் மிகமிக குறைவு. ஆட்டு உரம், கோழி உரம் போட்டால் போதும். ட்ராகனில் 150 வகையான செடிகள் உள்ளன. ஒரு செடியின் வாழ்நாள் 25 ஆண்டுகள் வரை நீடிக்கும்.

வாரம் இரண்டு நாள்கள் தண்ணீர் விட்டால் போதும். ஒரு ஏக்கருக்கு மொத்தமாகச் சேர்த்து பத்து நாளைக்கு 70 ஆயிரம் லிட்டர் இருந்தால் போதும். சொட்டுநீர் பாசனம் மூலம் பயிரை வளர்த்துவிடலாம். முதலில் நாங்கள் 5 லட்சம் முதலீடு செய்தோம். அதை எப்போதோ எடுத்துவிட்டோம்" என்கிறார் கோபி.

 A farmer achieved by planting dragon fruit in Tamil Nadu

இந்தச் செடியை வளர்ப்பதற்கான அறிவைப் பெற இவர், குஜராத், ஆந்திரா, தெலங்கானா முக்கியமாகக் கர்நாடகாவில் உள்ள விவசாயிகளிடம் சென்று ஆலோசனைகளைப் பெற்றுள்ளார். இவரது சொந்த ஊர்க்காரர்கள் தோட்டத்தை வந்து பார்த்துவிட்டு ஏதோ கள்ளிச் செடியை நட்டு இருப்பதாகக் கூறியுள்ளனர். பழங்கள் வந்தபிறகுதான் அது கள்ளிச் செடி இல்லை பழச் செடி என ஊர் மக்கள் நம்பி உள்ளனர்.

 A farmer achieved by planting dragon fruit in Tamil Nadu

எந்த மாற்றமும் தொடங்கும்போதுதான் சவால்கள் இருக்கும். ஆனால் கோபியின் வாழ்க்கையே சவால் நிறைந்ததுதான்.

English summary
A farmer achieved by planting dragon fruit in Tamil Nadu. Read his interesting story here.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X