காங்கிரஸ் கட்சிக்கு 'குட்பை' சொன்ன அலிம் அல் புகாரி.. TVK கூட்டணி முடிவால் விலகல்!
சென்னை: காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அலீம் அல்புஹாரி அறிவித்துள்ளார். தவெக உடனான புதிய அரசியல் கூட்டணி முடிவு கொள்கை அடிப்படையில் எடுக்கப்படவில்லை என்றும், அது அரசியல் சந்தர்ப்பவாதமாகத் தெரிவதாகவும் குற்றம்சாட்டி அவர் தனது ராஜினாமா அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சியை வீழ்த்தி, 108 இடங்கள் வென்று விஜய்யின் தவெக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. தமிழகத்தில் ஆட்சியமைக்க பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை என்ற சூழலில், யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் திமுக கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது தவெக.

தவெக கூட்டணியில் முதல் கட்சியாக காங்கிரஸ் இணைந்தது. காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்டு 5 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் தவெகவுக்கு ஆதரவளித்தது. அடுத்து வரும் உள்ளாட்சி தொடங்கி மக்களவைத் தேர்தல் வரை தவெக உடனான கூட்டணி தொடரும் என்றும் காங்கிரஸ் அறிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் இந்த செயலுக்கு, அக்கட்சியின் நிர்வாகிகள் சிலர் கண்டனம் தெரிவித்தனர். சந்தர்ப்பவாதத்திற்காக தவெக உடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளதாக காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் குற்றம்சாட்டினர்.
இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் அலிம் அல்புகாரி எதிர்ப்பு தெரிவித்தார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "கொள்கைப் பிடிப்பே அரசியல், சந்தர்ப்பவாதம் அல்ல. இதே சந்தர்ப்பவாதத்தை பாஜகவும் அதிமுகவும் செய்து வருகிறது. இப்போது நாம் அதை செய்யக்கூடாது" எனக் கூறியிருந்தார். இதையடுத்து இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர் அலிம் அல்புஹாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அலிம் அல்புஹாரி அறிவித்துள்ளார். அலிம் அல்புஹாரி காங்கிரஸ் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், "இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும், கட்சியுடன் தொடர்புடைய அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.
காங்கிரஸ் கட்சியில் நான் பயணித்த காலம் முழுவதும் நாம் வெறும் அரசியல் போராட்டமாக அல்லாமல், ஒரு கொள்கைப் போராட்டத்தை முன்னெடுத்து வருகிறோம் என்ற தெளிவான நம்பிக்கையோடு செயல்பட்டேன். இதனை தலைவர் அவர்கள் பலமுறை தனது உரைகளில் வலியுறுத்தியுள்ளார். நாட்டின் அரசியல் என்பது வெறும் ஆட்சிப் போட்டி அல்ல: அது சட்டம், மதச்சார்பின்மை சமூக நீதி மற்றும் ஜனநாயகக் கொள்கைகளை காக்கும் சித்தாந்தப் போராட்டம் என்று தொடர்ந்து கூறி வந்தார்.
'தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி வெறும் தேர்தல் கூட்டணி அல்ல. அது ஒரு கொள்கைக் கூட்டணி' என்று ராகுல் காந்தி அவர்கள் ஒவ்வொரு தமிழ்நாடு வருகையிலும் குறிப்பிட்டுள்ளார். அந்த நம்பிக்கையே எனது அரசியல் பயணத்திற்கும் இந்த கூட்டணியின் மீதான நம்பிக்கைக்கும் அடிப்படையாக இருந்தது.
இந்நிலையில் திடீரென தமிழக வெற்றி கழகம் உடனான கூட்டணி அமைக்கப்பட்டிருப்பது எனக்கு மிகப்பெரிய கொள்கைச் சந்தேகத்தை உருவாக்கியுள்ளது உண்மையிலேயே கொள்கை தான் அடிப்படை என்றால், நீண்டகால கொள்கை கூட்டணியான திமுகவை மாற்றி TVK உடன் இணைவதற்கான கொள்கை காரணம் என்ன?
இந்த முடிவு TVK-வின் கொள்கை வலிமையாலா? அரசியல் தியாகங்களாலா? நிர்வாக அனுபவத்தாலா? சிந்தனைத் தெளிவாலா? அல்லது பாஜக- ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்திற்கு எதிரான உறுதியான நிலைப்பாட்டாலா? என்ற கேள்விகள் இயல்பாக எழுகின்றன.
குறிப்பாக, மத வெறி சம்பவங்கள், சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் போன்ற முக்கிய தருணங்களில் கூட தெளிவான அரசியல் நிலைபாடுகள் தேவைப்பட்டபோது, தற்போது கூட்டணி அமைக்கப்பட்டுள்ள தரப்பிலிருந்து அமைதியே நிலவியது. ஆனால் திமுக தொடர்ந்து தனது கொள்கை நிலைப்பாட்டை உறுதியாக வெளிப்படுத்தி வந்தது.
எனவே, இந்த புதிய அரசியல் முடிவு கொள்கை அடிப்படையில் எடுக்கப்பட்டதாக என்னால் ஏற்க முடியவில்லை இது மக்கள் செல்வாக்கையும், தேர்தல் வெற்றிக்கான வாய்ப்பையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்ட அரசியல் சந்தர்ப்பவாதமாகவே தோன்றுகிறது.
அரசியல் என்பது சந்தர்ப்பவாதம் அல்ல; அது கொள்கைப் பிடிப்பாக இருக்க வேண்டும் என்பதையே ராகுல் காந்தி அவர்களிடமிருந்து நான் கற்றுக் கொண்டேன். ஆகையால் மிகுந்த மனவேதனையுடன் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகும் முடிவை எடுத்துள்ளேன். எனது அரசியல் பயணத்தில் என்னுடன் இணைந்து பணியாற்றிய அனைத்து தலைவர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications