மின்சார கட்டண உயர்வா? புதிய மின்துறை அமைச்சருக்கு சவால்! 200யூனிட் இலவச மின் திட்டத்திற்கு நெருக்கடி
சென்னை: முதல்வர் விஜய் தலைமையிலான ஆட்சி அமைந்துள்ள வேலையில் அடுத்துக்கு முக்கியமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளவர்களுக்கு துறை ஒதுக்கீடு செய்யும் பணியும், ஆலோசனையும் நடந்து வரும்கிறது. இந்த நிலையில் புதிய மின்துறை அமைச்சருக்கு ஒரு முக்கியமான சவால் உள்ளது.
தமிழ்நாட்டில் 2027-ம் ஆண்டு முதல் மின்சார பில் ஒவ்வொரு ஆண்டும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (TNERC) புதிய ஐந்தாண்டு கட்டண முறையை தயாரித்து வருகிறது. இந்தப் புதிய முறை 2027 ஏப்ரல் மாதம் முதல் 2031 வரை அமலில் இருக்கும்.

இந்த கட்டண முறை அமலுக்கு வந்தால் வீடுகள், கடைகள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்து பயனாளிகளுக்கும் மின்சாரத்துக்கு அளிக்கப்படும் யூனிட் கட்டணமும், மாதாந்திர நிலையான கட்டணமும் ஒவ்வொரு வருடமும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
புதிய ஐந்தாண்டு கட்டண முறை என்ன சொல்கிறது?
தற்போது மின்சார கட்டணம் ஒவ்வொரு ஆண்டும் பணவீக்கம் மற்றும் செலவு அதிகரிப்பின் அடிப்படையில் திருத்தப்படுகிறது. 2022-ல் தொடங்கிய தற்போதைய கட்டண சுழற்சி இந்த வருட ஜூலை மாதத்தில் இறுதி திருத்தத்துடன் முடிவடையும். அதற்குப் பிறகு 2027 ஏப்ரல் முதல் புதிய ஐந்தாண்டு சுழற்சி தொடங்கும்.
இந்தப் புதிய முறையின்படி, மின்சார விநியோக நிறுவனம் (TNPDCL) நவம்பர் மாதத்துக்குள் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (TNERC)-க்கு மனு அளிக்க வேண்டும். மனு அளிக்கப்பட்ட பின்பு இத்துறை சேர்ந்த அனைத்து தரப்பினரின் கருத்துகளைப் பெற்ற பிறகு 120 நாட்களுக்குள் புதிய கட்டணம் அமலுக்கு வரும். இந்த மாற்றம் மின்சார கட்டணம் தொடர்ந்து உயர வழிவகுக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அரசு மானியம்
கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு மின்கட்டண உயர்வின் தாக்கத்தை , முழு ஏற்றுக்கொண்டு, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுத்து வந்தது. கட்டண உயர்வின் மூலம் ஏற்படும் தாக்கத்தை அரசு சார்பில் மானியம் வழங்கி இழப்புகளை சரி கட்டி வந்தது.
இதனால் அரசின் மின்சார மானிய செலவு ஏற்கனவே சுமார் 17,000 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. முதலமைச்சர் விஜய் அறிவித்த 200 யூனிட் வரை இலவச மின்சார திட்டத்தால் இந்த மானிய சுமை இன்னும் அதிகரித்து சுமார் 19,000 கோடி ரூபாயாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், புதிய ஐந்தாண்டு கட்டண முறை அமலுக்கு வந்தால் அரசின் நிதி நிலைமைக்கு ஏற்ப மானியம் தொடருமா என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை.
பொதுமக்களே உஷார்
சாமானிய மக்களுக்கு இந்தப் புதிய முறை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். 2027-ம் ஆண்டு முதல் மின்சார கட்டணம் ஒவ்வொரு ஆண்டும் உயரும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். அதிக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள் இந்த உயர்வை அதிகமாக உணரக்கூடும்.
இந்த நிலையை தடுக்க TNPDCL தாமதமாக மனு அளித்தாலும் TNERC தானாகவே கட்டணத்தை உயர்த்தும் அதிகாரம் கொண்டுள்ளதால் புதிய கட்டண முறை கொண்டு வருவதற்கான பணிகள் நடந்து வருகிறது. எனவே, அரசின் நிதி நிலைமைக்கு ஏற்ப மானியம் தொடர்ந்தாலும், முழு பாதுகாப்பு கிடைக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அடுத்த ஆண்டு முதல் மின்கட்டணம் உயரும் நிலை உருவாகியுள்ளது.
விஜய் தலைமையிலான அரசும், TNERC-யும் புதிய கட்டண முறையை அமல்படுத்தும் போது பொதுமக்களின் நிதி சுமையை கருத்தில் கொண்டு முடிவுகளை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் புதிய முறை தமிழகத்தின் மின்சார துறையை நீண்டகால அடிப்படையில் வலுப்படுத்தும் என்றாலும், சாதாரண குடும்பங்களின் அன்றாட செலவை பாதிக்கும்.
ஆனால் மின்சார துறையில் தொடர்ந்து மானியம் மூலம் கடன் சுமையை ஏற்க முடியாது. இதனால் விஜய் தலைமையிலான அரசு மக்கள் நலன் மற்றும் நிதி நிலை மேம்படுத்தும் திட்டத்திற்கு மத்தியிலான சமநிலையை காண வேண்டிய இக்கட்டான நிலைக்கு வந்துள்ளது.















Click it and Unblock the Notifications