சென்னை அரசு மருத்துவமனையில் திடீர் தீ விபத்து.. பரபரப்பு.. 47 குழந்தைகள் பத்திரமாக வெளியேற்றம்!
சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் கஸ்தூர்பா அரசு மகப்பேறு மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ. உதயநிதி உதயநிதி ஸ்டாலின் உடனடியாக நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.

தீ விபத்து
சென்னை திருவல்லிக்கேணியில் கஸ்தூர்பா காந்தி அரசு மகப்பேறு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இன்று இரவு இந்த மருத்துவமனையின் இரண்டாவது தளத்தில் மருத்துவர் ஏ.சி.அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கு சிகிச்சை பெற்று வந்த தாய், குழந்தைகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனை தொடர்ந்து அந்த வார்டில் இருந்த 47 குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். மற்ற வார்டுகளில் இருந்தவர்களும் வெளியேற்றப்பட்டனர்.

தீயை அணைத்தனர்
தகவல் அறிந்து தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து சென்றனர். இதனை அடுத்து மருத்துவர் ஏ.சி.அறையில் பற்றி எரிந்த தீயை மருத்துவமனை தீயணைப்பு படையினர், ஊழியர்கள் மற்றும் அங்கு இருந்த பொதுமக்கள் துரிதமாக செயல்பட்டு உடனடியாக அணைத்தனர். ஏ.சி.எந்திரத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தகவல் அறிந்தவுடன் திருவல்லிக்கேணி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

உதயநிதி ஸ்டாலின் விசாரணை
இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் உடனடியாக நேரில் சென்று ஆய்வு நடத்தினார். தீ விபத்து குறித்து மருத்துவமனை ஊழியர்களிடம் கேட்டறிந்தார். அங்கு இருந்து வெளியேற்றப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பது குறித்து உதயநிதி ஸ்டாலின் கேட்டறிந்தார்.

விசாரணைக்கு உத்தரவு
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவும் அங்கு சென்று விசாரணை நடத்தினார். தீ விபத்து நடந்த வார்டில் இருந்து குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும், 2 குழந்தைகள் வென்டிலேட்டர்களில் இருந்த நிலையில் அவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டதாக அவர் கூறினார். இந்த தீ விபத்து உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் கூறினார். நல்லவேளையாக உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.












Click it and Unblock the Notifications