அஸ்வினி தொலைத்த ரூ. 25 ஆயிரம்! கண்களில் பட்டதுமே தூய்மை பணியாளர்கள் செய்த செயல்! சபாஷ்!
சென்னை: சென்னை திருவல்லிக்கேணி கோயில் விழாவின் போது பூக்கடை உரிமையாளரான அஸ்வினி என்பவர் தொலைத்த ரூ 25 ஆயிரம் பணத்தை தூய்மை பணியாளர்கள் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த நெகிழ்ச்சியான சம்பவம் நடந்தது.
சென்னை திருவல்லிகேணியில் கோயில் திருவிழா நடந்தது. இந்த திருவிழாவில் கூட்டம் அலைமோதியது. அங்கு பூக்கடை நடத்தி வந்தவர் அஸ்வினி. இவர் சிறுக சிறுக சேர்த்து வைத்திருந்த ரூ 25 ஆயிரம் பணத்தை எங்கோ தொலைத்துவிட்டு தேடி வந்தார்.

இதைத் தொடர்ந்து அந்த பணம் நேர்மையானவர்களான நீலாவதி, தேவி ஆகிய தூய்மை பணியாளர்களின் கண்களில் பட்டது. உடனே அந்த பணத்தை எடுத்த அவர்கள் அதை அஸ்வினியிடம் ஒப்படைத்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தினர்.
பூவை விற்று சம்பாதித்த ரூ 25 ஆயிரம் பணத்தை கண்களில் பார்த்ததும்தான் அஸ்வினிக்கு உயிரே வந்தது. நீலாவதிக்கும் தேவிக்கும் அஸ்வினி இரு கைகளை கூப்பி நன்றி தெரிவித்தார். இவர்களின் நேர்மையை பாராட்டி சென்னை மாநகராட்சி தங்களது ட்விட்டர் பக்கத்தில் விஷயத்தையும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளது.
அந்த பதிவில் வணக்கம் #சென்னைமக்களே,
திருவல்லிக்கேணியில் கோவில் விழாவின்போது பூக்கடை உரிமையாளரான செல்வி.அஸ்வினி ரூபாய் 25,000 ரொக்க பணத்தை தொலைத்துவிட்டார். அதனை தூய்மை பணியாளர்களான திருமதி.நீலாவதி மற்றும் திருமதி.தேவி ஆகியோர் மீட்ட உரிமையாளரிடம் கொடுத்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எப்போதும் உழைத்த பணம் சோரம் போகாது என்பார்கள். அதை அஸ்வினிக்கு நீலாவதியும் தேவியும் புரிய வைத்துவிட்டனர். இவர்களுக்கு மாநகராட்சி ஏதாவது பரிசை கொடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
பணம் என்றால் பிணமும் வாயை பிளக்கும் என்பார்கள். அது போல் அடித்து கொன்று பணத்தையும் நகையையும் பறித்துச் செல்லும் காலத்தில் கிடைத்த பணத்தை உரியவர்களிடம் ஒப்படைத்த இந்த இரு பெண்களின் நேர்மையை என்னவென சொல்வது?
அவர்கள் செய்யும் பணி மட்டுமா தூய்மை! அவர்களே தூய்மையானவர்கள்தான்! பணம் இருக்கும் இடத்தில் இடத்தில் குணம் இருக்காது, குணம் இருக்கும் இடத்தில் பணம் இருக்காது. பணம் இல்லாவிட்டாலும் நேர்மை, நீதி, நியாயம்தான் பெரிது என்பதை இவர்கள் நிரூபித்து விட்டார்கள். அந்த பணம் ரூ 25 ஆயிரத்தை அவர்களே வைத்துக் கொண்டால் 10 நாளைக்கு சந்தோஷமாக இருப்பார்களா? இல்லை 15 நாட்களுக்கு?
ஆனால் அவர்களுடைய நேர்மை அவர்களின் இறுதி மூச்சு வரை கூடவே இருக்கும் என்பதை இன்றைய தினம் பலர் நன்கு உணர்ந்துள்ளார்கள். பணம், நகையால் நாம் மேன்மை அடைவோம் என்ற நினைப்பை விட பணம், நகையை காணாமல் அதன் உரிமையாளர்கள் எந்தளவுக்கு மன வேதனையில் தேடி பதற்றத்தில் இருப்பார்கள் என்பதை எத்தனையோ ஏழைகள் இன்று தெரிந்து வைத்திருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications