அமலாக்க துறை கிடுக்குப் பிடி விசாரணையில் மாஜி பத்திரிகை அதிபர்! உதவ போய் டோஸ் வாங்கிய தமிழக எம்.பி.
சென்னை: தமிழகத்தில் முன்னாள் பத்திரிகைத் தொழிலதிபர் ஒருவரை கடந்த வாரம் நேரில் அழைத்து விசாரித்திருக்கிறது அமலாக்கத் துறை. அவருடன் அவரது வலது கரமாக கணக்கு வழக்குகளை கவனித்துக்கொண்ட ஒரு நபரையும் அழைத்து விசாரித்துள்ளனராம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள்.
தமிழகத்தில் முதுபெரும் அரசியல் தலைவரால் நடத்தப்பட்டது அந்த பத்திரிகை. அவருக்குப் பின்னர் வாரிசுதான் அந்த பத்திரிகை நிர்வாகத்தை பார்த்துக் கொண்டிருந்தார். அந்த தருணத்தில் முன்னணி தொழில் நிறுவனம் ஒன்று அந்த பத்திரிகையை வாங்கியது. அதன்பிறகு மூத்த அரசியல் தலைவரின் வாரிசு வேறு தொழில் பக்கம் தலைவைத்துவிட்டார்.

கை கொடுக்காத அரசியல்
ஒருசில காலம் அவரது பெயரும் அரசியல் கட்சி ஒன்றின் ராஜ்யசபா எம்.பி. பதவிக்கு அடிபட்டது. ஆனால் அப்படி எல்லாம் எதுவும் நடக்கவில்லை. அவரது தந்தை காலத்து அரசியல் தொடர்புகள் எதுவும் அவருக்கு பெரிய அளவில் ஒர்க் அவுட் ஆகவில்லையாம்.

அமலாக்கப் பிரிவு விசாரணை
அந்த வாரிசைத்தான் அண்மையில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் வரவழைத்து கிடுக்குப்பிடி விசாரணை நடத்தி இருக்கின்றனர். பத்திரிகை தொழிலிலிருந்து விடுபட்ட பிறகு அண்டை மாநிலங்களில் சில தொழில் கனவுகளுடன் அவர் நுழைந்திருக்கிறார். கேரள அரசின் உதவியுடன் பெரிய ப்ராஜெக்ட் ஒன்றையும் அந்த வாரிசு தொடங்கினார்.

பண மோசடி
ஆனால் அந்த பிசினஸ் முழுமை பெறவில்லையாம். அதேசமயம், அந்த ப்ராஜெக்டில் சிலபல பண மோசடிகள், அன்னிய செலாவணி விவகாரங்கள் நடந்திருப்பதாக அமலக்காத் துறை மோப்பம் பிடித்திருக்கிறது. இதையடுத்தே முன்னாள் பத்திரிகை அதிபரை வளைத்தனராம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பல கேள்விகளுக்கு பதில் செல்ல முடியவில்லையாம். ஒரு நாள் விசாரணையை முடித்து அனுப்பி வைத்துள்ளனர்.

தமிழக எம்.பிக்கு சிக்கல்
இந்த நிலையில், அமலாக்கத்துறையால் தனக்கு எதிர்காலத்தில் சிக்கல் ஏற்படலாம் என யோசித்து, தமிழக எம்.பி. ஒருவரின் உதவியை கேட்டிருக்கிறார். அந்த எம்.பி.யும் தனக்குள்ள டெல்லி லாபியில் முயற்சித்த போது, 'உங்களுக்கே நிறைய சிக்கல் இருக்கு. அதை முதலில் சரி பண்ணப் பாருங்க; மற்றவர்களுக்கு அப்பறம் உதவலாம்' என அட்வைஸ் செய்திருக்கிறதாம் அந்த டெல்லி லாபி. இதனால் உதவி செய்யப் போய் 'நமக்கு நாமே' குழி வெட்டிக் கொண்டோமா என நொந்து போயிருக்கிறாராம் அந்த எம்.பி. இதனால் அந்த எம்.பி. மீது அவரது குடும்ப சகாக்கள் செம கோபத்தில் இருக்கின்றனராம்.












Click it and Unblock the Notifications