சென்னை நுங்கம்பாக்கம் போலீஸ் எடுத்த மனிதநேய முடிவு.. நெகிழும் கனகவள்ளி குடும்பம்
சென்னை: சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் காவலாளியாக இருந்த பாலகிருஷ்ணன் மது போதையில் அடிக்க வந்த நிலையில், மனைவி தள்ளிவிட்டார். இதில் அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இந்த விவகாரத்தில் சரண் அடைந்த மனைவியை விடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
சென்னை நுங்கம்பாக்கம், வைகுண்டபுரம், 2-வது தெருவைச் சேர்ந்த பாலகிருஷ்ணனுக்கு 44 வயது ஆகிறது. இவர் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி கனகவள்ளிக்கு 34 வயது ஆகிறது. இவர் நுங்கம்பாக்கம் பகுதியில் வீட்டு வேலை செய்து வருகிறார். பாலகிருஷ்ணன், கனகவள்ளி தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் 10-ம் வகுப்பும், 2-வது மகன் 7-ம் வகுப்பும் தியாகராய நகரில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார்கள்..

பாலகிருஷ்ணனின் குடிப்பழக்கம் அவர்களின் குடும்பத்தையே அழித்திருக்கிறது. காவலாளியான பாலகிருஷ்ணன் குடிப்பழக்கத்திற்கு அதிக அளவில் அடிமையாகி உள்ளார். தினமும் குடிக்கமால் வீட்டுக்கு வரமாட்டாராம். தினமும் வேலைக்கு போய்விட்டு மது போதையில்தான் பாலகிருஷ்ணன் வீட்டுக்கு வருவாராம். அப்படி வீட்டிற்குள் பாலகிருஷ்ணன் வரும் போதே மனைவி கனகவள்ளியுடன் சண்டை போட்டு அடிப்பாராம். தினமும் ஏதாவது பிரச்சனையை கிளப்பி சண்டை போடுவதை பாலகிருஷ்ணன் வாடிக்கையாக வைத்திருக்கிறார்.
கடந்த ஜனவரி 4ம் தேதி இரவு வழக்கம் போல் முழுபோதையில் வந்த பாலகிருஷ்ணன், வழக்கம்போல மனைவி கனகவள்ளியிடம் சண்டை போட்டு, அவரை அடித்து உதைத்திருக்கிறார். ஒரு கட்டத்தில் அடி தாங்க முடியாத கனகவள்ளி, பாலகிருஷ்ணனை தள்ளி விட்டுள்ளார். அதில் பாலகிருஷ்ணனின் தலை சுவரில் பட்டு, காயம் அடைந்து கீழே விழுந்து உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த நுங்கம்பாக்கம் போலீசார் பாலகிருஷ்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
எதிர்பாராமல் நடந்த இந்த சம்பவத்தால் பாலகிருஷ்ணன் மனைவி கனகவள்ளி சிறைக்கு செல்லும் நிலை ஏற்பட்டது. அவர் போலீசில் சரண் அடைந்த நிலையில், போலீசார் விசாரித்து வந்தனர். அவர்களுடைய இரண்டு குழந்தைகளும் இப்போது ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்படும் நிலை ஏற்பட்டிருந்தது. கணவனின் குடிப்பழக்கம் மொத்த குடும்பத்தையும் சிதைத்த நிலையில், போலீசார் என்ன செய்வது என்று யோசித்தனர். மது போதையில் அடித்த போது, வலி தாங்காமல் தள்ளிவிட்டதில் தான் எதிர்பாராதவிதமாக கணவர் உயிரிழந்ததார் என்பதால் தற்காப்பு என்ற அடிப்படையில் கனகவள்ளியை விடுவிக்க நுங்கம்பாக்கம் போலீசார் முடிவு செய்துள்ளனர். விரைவில் கனகவள்ளி விடுதலை ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications