கொங்கு மண்டலத்து புள்ளி.. இபிஎஸ்ஸின் ரைட் ஹேண்ட்.. ஓபிஎஸ் பக்கம் தாவுகிறாரா? இது லிஸ்ட்லயே இல்லையே
சென்னை: எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளரும் அவரது வலதுகரமாக இருப்பவருமான கொங்கு மண்டலத்து புள்ளி ஒருவர் ஓபிஎஸ் பக்கம் தாவ போவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கிடைத்துள்ளன.
அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என மாஜி அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் சிலர் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். அந்த ஒற்றைத் தலைமை எடப்பாடி பழனிசாமியாக இருக்க வேண்டும் என கருதுகிறார்கள்.
ஆனால் ஓபிஎஸ்ஸோ கூட்டுத் தலைமையை விரும்புகிறது. இதனால் அதிமுகவில் "அண்ணன் தம்பி" களுக்கிடையே சண்டை நடந்து வருகிறது. எடப்பாடி பழனிசாமி பக்கம் ஒரு சில மாஜிக்களும், முன்னாள் எம்எல்ஏக்களும் இன்னாள் எம்எல்ஏக்களும் இருப்பதால் தனக்கு செல்வாக்கு அதிகம் என எடப்பாடி கருதுவதாகவும் உண்மையில் தொண்டர்கள் ஆதரவு தங்களுக்குத்தான் இருப்பதாகவும் ஓபிஎஸ் தரப்பு தெரிவிக்கிறார்கள்.

அதிமுக
இப்படியாக அதிமுகவை இரு தரப்பினரும் சொந்தம் கொண்டாடி வருகிறார்கள். இதனால் தங்கள் ஆதரவை நிரூபிக்க இரு தரப்பினரும் ஆதரவாளர்களை இழுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்கள். அந்த வகையில்தான் தான் உசிலம்பட்டி எம்எல்ஏ ஐயப்பன் நேற்றைய தினம் ஓ பன்னீர் செல்வத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

கொங்கு மண்டலம்
தற்போது கொங்கு மண்டலத்தின் முக்கிய புள்ளி ஒருவர் எடப்பாடி பக்கத்திலிருந்து ஓபிஎஸ் பக்கம் தாவவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் யார் என கேட்டதற்கு அதெல்லாம் ரகசியம் என சொல்லிவிட்டனர். ஆனால் அவர் எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளர், அவரது வலதுகரம் என்றே சொல்லலாம் என்கிறார்கள்.

ஓபிஎஸ் தரப்பு
இதுகுறித்து ஓபிஎஸ் தரப்பு நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம், அதற்கு அவர்கள் இதுவரை எங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை. அவர் வந்தால் மகிழ்ச்சிதானே. தற்போது அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் எல்லாம் திமுக பக்கம் போய்விட்டார்கள். ஊர் இரண்டு பட்டால் ஒருத்தருக்கு கொண்டாட்டம் என்பார்களே அது போல் அதிமுக இரண்டு பட்டு நிற்பதால் நல்ல பல தலைவர்கள் திமுகவுக்கு அணி மாறுவதை பார்த்து வருகிறோம்.

ஒன்றிணையலாம்
இதற்குத்தான் எங்கள் அண்ணன் ஒன்றிணையலாம் என அழைத்தார். ஆனால் எடப்பாடியோ முரண்டு பிடிக்கிறார். இப்படியே போனால் தொண்டர்களும் திமுக பக்கம் தாவிவிட்டால் என்ன செய்வது என்றார்கள். உடனே நாம், "அண்ணே விஷயத்துக்கு வாங்க, கொங்கு புள்ளி உங்கள் பக்கம் வருகிறாராமே என்றோம். அதற்கு ஓபிஎஸ் தரப்பு நிர்வாகிகள் சிலர், கட்சியே ஓபிஎஸ்தான் என தீர்ப்பு சொல்லிவிட்ட நிலையில் பிறகு எடப்பாடி பக்கம் என்ன இருக்கிறது சொல்லுங்கள், அந்த கொங்கு மண்டலத்து புள்ளி தற்போதைய எம்எல்ஏவாகவும் உள்ளார். அவரது ஹாஸ்டலில் இன்னும் அண்ணன் (ஓபிஎஸ்) படமும் அவரது வலது கரத்தின் படமும் ஒன்றாக இருக்கும். ஓபிஎஸ்ஸை கட்சியை விட்டே நீக்கிவிட்டதாக சொல்லும் நிலையில் எதற்கு அந்த புகைப்படத்தை வைத்திருக்கிறார்.

ஒற்றைத் தலைமை
அதாவது அந்த புள்ளிக்கு ஒற்றை தலைமை மீது விருப்பம் இல்லையாம் . கூட்டு தலைமைதான் வேண்டும் என்கிறாராம். அதனால் அவர் மட்டுமில்லைங்க, எடப்பாடியே வெகுவிரைவில் எங்கள் பக்கம் வந்துவிடுவார் என ஓபிஎஸ் தரப்பினர் தெரிவித்தனர். ஒரு விஷயத்தை நீங்கள் கவனித்தீர்களா, அண்மைக்காலமாக முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி உதயகுமார், ஜெயக்குமார், கே பி முனுசாமி, சி வி சண்முகம் உள்ளிட்டோர்தான் சசிகலாவுக்கும் ஓபிஎஸ்ஸுக்கும் எதிராக பேசி வருகிறார்கள். ஆனால் இந்த கொங்கு புள்ளி சசிகலாவையும ஓபிஎஸ்ஸையும் விமர்சித்தே இல்லை. எனவே அவர் ஓபிஎஸ் பக்கம் தாவ வாய்ப்புகள் இருப்பதிலும் ஒரு லாஜிக் தென்படுகிறது.

எடப்பாடி பழனிசாமி தரப்பு
இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் நாம் பேசுகையில் ஏன்ங்க! அண்ணன் எடப்பாடியாரே ஓபிஎஸ் பக்கம் போறாருனு யாராவது கிளப்பி விடுவாங்க, அதையெல்லாம் நம்புவீங்களா நீங்க!. அதெல்லாம் நீங்கள் சொல்ற கொங்கு புள்ளி எங்கள் அண்ணனை விட்டு போக மாட்டார், எழுதி வச்சிக்கோங்க" னு இபிஎஸ் தரப்பு நிர்வாகிகள் படபடனு பொறிந்து தள்ளிவிட்டார்கள்.

மேல்முறையீட்டு மனு
கூடுதல் தகவல் என்னவென்றால் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு வந்ததும் நிறைய மாற்றங்கள் நடக்கலாம் என்றும் ஓபிஎஸ் மீண்டும வென்றால் அப்போது அவர் சசிகலாவை போய் சந்தித்தால் அதிமுகவில் யாருமே எதிர்பார்க்காத பல மாற்றங்கள் நடக்கும் என்கிறார்கள். ஆனால் கொங்கு மண்டல புள்ளி ஓபிஎஸ் பக்கம் வந்துவிட்டால் எடப்பாடி பழனிசாமிக்கு பேரிடியாக இருக்கும் என்கிறார்கள். இனி என்ன நடக்கும் என்பதை "மேல இருக்கிறவன்" பார்த்துப்பான்!












Click it and Unblock the Notifications