பல்லாவரம் ஜிஎஸ்டி சாலை ஸ்தம்பித்தது.. என்ன காரணம்.. தாம்பரம் போலீசாருக்கு பறந்த கோரிக்கை
சென்னை: சென்னை ஜி.எஸ்.டி சாலையின் முக்கிய பகுதியான பல்லாவரம், குரோம்பேட்டை இணையும் பகுதிகளில் இன்று காலை ஒரு பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இன்று மட்டுமல்ல எப்போதுமே இங்கு கடுமையான நெரிசல் ஏற்படுகிறது.. அலுவலக நேர நெரிசல் என்பதைத் தாண்டி, கடுமையான நெரிசல் அங்கு ஏற்படுவதற்கு சாலையை ஆக்கிரமித்து நிற்கும் வாகனங்களே முதன்மைக் காரணம் ஆகும். அங்கு வாகனங்களை நிறுத்த போலீசார் நிரந்த தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
பல்லாவரம் பேருந்து நிலையம் முதல் பல்லாவரம் மேம்பாலம் வரையிலும், குரோம்பேட்டையில் பேருந்த நிலையம் வரையிலும் வாகனங்கள் கடுமையான நெரிசலில் சிக்கி திணறின. அங்குள்ள கடைகள் மற்றும் பெரிய வணிக நிறுவனங்களுக்கு வரும் வாகனங்கள், எவ்வித அச்சமுமின்றி பிரதான சாலையிலேயே வரிசையாக நிறுத்தப்படுவதால், பேருந்துகளும் மற்ற வாகனங்களும் செல்ல வேண்டிய வழித்தடம் பாதியாகக் குறைந்து, ஒட்டுமொத்தப் போக்குவரத்தும் முடங்கி வருகிறது.

பல்லாவரம் ஜி.எஸ்.டி சாலையோரம் இருக்கும் பல கடைகள் மற்றும் உணவகங்களுக்குச் சொந்தமான பார்க்கிங் வசதி கிடையாது. அங்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்கள் கார்களையும், இருசக்கர வாகனங்களையும் சாலையிலேயே நிறுத்திவிட்டுச் செல்வது தொடர்கிறது. ஆனால் போலீஸார் அந்தப் பக்கமாக வரும்போது மட்டும் "வண்டியை எடுங்கள்" என்று சொல்லிவிட்டுப் போகிறார்கள். ஆனால், அவர்கள் சென்ற அடுத்த நிமிடம் மீண்டும் அங்கு வண்டிகள் வந்து நிற்கின்றன.
இது ஒருபுறம் எனில், பல்லாவரம் பேருந்து நிறுத்தம் இருக்கும் இடமும் நெரிசலுக்கு முக்கியமான காரணமாக இருக்கிறது. பேருந்துகள் நிறுத்தத்திற்கு வரும்போது, ஏற்கனவே ஆக்கிரமிக்கப்பட்டுள்ள சாலையோர இடத்தால், அவை சாலையின் நடுவிலேயே நிற்க வேண்டியதிருக்கிறது. இதனால் ஒரு பேருந்து நின்றாலே பின்னால் வரும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் தேங்கி விடுகின்றன.
திருநீர்மலை சாலை மற்றும் குன்றத்தூர் சாலை சந்திப்பு பல்லாவரம் சந்திப்பில் ஜி.எஸ்.டி சாலையுடன் இணைகிறது. இதனால் திருநீர்மலை ரோடு வழியாக வரும் வாகனங்கள், பிரதான சாலையில் நுழையும்போது ஒரு பெரிய முட்டுக்கட்டையாகிறது. இங்கே சிக்னல் நேரத்தை முறைப்படுத்துவதை விட, சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றினால் மட்டுமே வாகனங்கள் தடையின்றி நகர முடியும் என்கிறார்கள் பொதுமைக்கள். ஆனால் போலீஸார் ஆக்கிரமிப்பாளர்கள் மீது போதிய நடவடிக்கை எடுக்காமல் உள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளது
நடைபாதைகளை கடைகளும், தள்ளுவண்டிகளும் ஆக்கிரமித்துள்ளன. இதனால் மக்கள் சாலையில் நடக்க வேண்டி உள்ளது என்றும், ஒரு மனிதர் சாலையில் நடந்தால், அவரைத் தள்ளிப் போக ஒரு கார் வேகம் குறைக்க வேண்டும். இது 'ரிப்பிள் எஃபெக்ட்' போல பின்னால் வரும் கிலோமீட்டர் கணக்கிலான வாகனங்களின் வேகத்தைக் குறைத்து செல்கின்றன என்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
இன்று காலை ஏற்பட்ட இந்த நெரிசலால் பள்ளிப் பேருந்துகள், அலுவலக வாகனங்கள் மற்றும் அவசர சிகிச்சைக்குச் சென்ற வாகனங்கள் என அனைத்தும் சிக்கித் தவித்தன. ஆக்கிரமிப்பு வாகனங்களை உடனடியாக 'டோ' (Tow) செய்து அப்புறப்படுத்த வேண்டும் என்றும் ஆக்கிரமிப்புகளைக் கண்டும் காணாமல் இருக்கக்கூடாது என்றும் பல்லாவரம் பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications