ஹைகோர்ட் அதிரடி.. கோவையில் பாஜக அக்.31-ல் பந்த் நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க பச்சைக்கொடி
சென்னை: கோவை உக்கடம் அருகே கார் சிலிண்டர் வெடித்தது தொடர்பாக பாஜக அழைப்பு விடுத்துள்ள பந்த் திட்டமிட்டபடி நடந்தால் காவல்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக கோவையை சேர்ந்த தொழிலதிபர் வெங்கடேஷ் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், சிலிண்டர் வெடித்த விபத்து தொடர்பாக ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த விவகாரம் தேசிய புலனாய்வு முகமையின் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கோவை மாவட்டத்தில் வரும் திங்கட்கிழமை பாஜக சார்பில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும், பந்த் அன்று தங்களது கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களை அடைத்து வியாபாரிகள் பந்துக்கு ஆதரவு தருமாறு பாஜக நிர்வாகிகள் அழுத்தம் தருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் ஏற்கனவே தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் சிலிண்டர் வெடிப்பு விவகாரத்தில் மாநில அரசை குற்றம்சாட்டி பந்த் நடத்துவது தேவையற்றது என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே வரும் திங்கட்கிழமை பாஜக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள பந்த்-க்கு தடை விதிக்க வேண்டுமென மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென மனுதாரர் தரப்பில் முறையிடப்பட்டது. முறையீட்டை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், பரத சக்கரவர்த்தி அமர்வு இன்று பிற்பகல் 12.30 மணிக்கு விசாரிப்பதாக தெரிவித்தனர்.
பின்னர் நடைபெற்ற விசாரணையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தரப்பில் இந்த பந்த் நடத்த மாநில தலைமை அழைப்பு விடுவிக்கவில்லை என்றும், கட்சியின் மாவட்ட நிர்வாகத்தினரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதவும், பந்த் நடத்துவதா அல்லது வேறு என்ன வகையான போராட்டம் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும், மாவட்ட நிர்வாகிகள் அழைப்பு விடுத்திருக்கலாம் என்றும், அதனை நாங்கள் அங்கீகரிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. அரசு தரப்பில் இடைக்கால உத்தரவு ஏதும் விரும்பவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, திட்டமிட்டபடி போராட்டம் நடந்தால் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கலாம் என காவல்துறைக்கு அறிவுறுத்தி, வழக்கு விசாரணையை நவம்பர் 1ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.












Click it and Unblock the Notifications