பட்டன் போனில் புது சிம்.. கசிந்த தகவல்.. ராஜேந்திர பாலாஜி இன்றே கைதாக வாய்ப்பு? பெங்களூரில் தனிப்படை
சென்னை: முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்றே கைதாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகின்றன. இவரை பிடிக்க தனிப்படை போலீசார் பெங்களூர் விரைந்துள்ளனர்.
ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் பெற்று பணியும் வழங்காமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் தமிழக பால்வளத்துறை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு உள்ளது. அவர் மட்டுமின்றி என்.பாபுராய், வி.எஸ்.பலராமன், எஸ்.கே.முத்துப்பாண்டியன் ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்து இருந்த முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழ்நாடு போலீஸ் இவரை கைது செய்யும் முனைப்பில் உள்ளது.

பெயில்
பெயில் கிடைக்கவில்லை என்றதும் கடந்த வெள்ளிக்கிழமை ராஜேந்திர பாலாஜி தலைமறைவானார். விருதுநகரில் அதிமுக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர் அப்படியே தலைமறைவாகி தப்பித்தார். இதையடுத்து இவரை பிடிப்பதற்காக குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கணேஷ் தாஸ் தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

விசாரணை
தென் மாவட்டங்கள், வடமாவட்டங்கள், சென்னை என்று தனி தனியாக இந்த படை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறது. ராஜேந்திர பாலாஜியின் வீடு, உறவினர்கள் வீடு, நண்பர்கள் வீடுகளில் அவரை போலீசார் தேடினர். பின்னர் அவருக்கு நெருக்கமானவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

கண்காணிப்பு
இவரின் செல்போன்கள் பல தற்போது போலீசின் கண்காணிப்பில் உள்ளது. ராஜேந்திர பாலாஜியுடன் போனில் பேசிய 600 நபர்களின் நம்பர்களை போலீசார் சோதனை செய்து வருகிறார்கள். இவர்களுக்கு ராஜேந்திர பாலாஜி மீண்டும் போன் செய்கிறாரா என்று பார்த்து வருகிறார்கள். ராஜேந்திர பாலாஜியுடன் பேசினால் அதை வைத்து அவரின் இருப்பிடத்தை கண்டுபிடிக்கும் வகையில் போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

பழைய போன்
அதன்படி பழைய மாடல் பட்டன் போன் ஒன்றில் ராஜேந்திர பாலாஜி புது சிம் போட்டு பயன்படுத்தி வருவதை போலீசார் கண்டுபிடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த போன் மற்றும் அதற்கு சென்ற போன் கால்கள் அடிப்படையில் அவரின் இருப்பிடத்தை போலீஸ் கண்டுபிடித்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி ராஜேந்திர பாலாஜி பெங்களூரில் இருக்க அதிகம் வாய்ப்பு உள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

பெங்களூர்
அதோடு உளவுத்துறையும் இவர் பெங்களூரில் இருக்கலாம் என்று உறுதி செய்துள்ளதாம். இதனால் இவரை பிடிக்க தனிப்படை போலீசார் பெங்களூர் விரைந்துள்ளனர். விமானம் மூலம் ஒரு தனிப்படை பெங்களூரில் களமிறங்கி உள்ளது. எனவே ராஜேந்திர பாலாஜி இன்றே கைதாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகின்றன.












Click it and Unblock the Notifications