90% இந்து சூத்திரர் உரிமை மீட்டது திராவிட இயக்கம்- காங், பாஜக நாராயணன்களுக்கு ஆ.ராசா பதிலடி
சென்னை: 90% இந்து சூத்திரர்களின் உரிமைகளை மீட்டுக் கொடுத்த திராவிட இயக்கமா இந்துக்களின் எதிரி என்று திமுக மூத்த தலைவரும் லோக்சபா எம்.பி.யுமான ஆ.ராசா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை பெரியார் திடலில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆ.ராசா பங்கேற்றார். அதில் பேசிய ஆ.ராசா, நீ பார்சியாக இல்லை என்றால் நீ இந்துவாகத்தான் இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சொல்கிறது. இப்படிப்பட்ட கொடுமை வேறு எந்த நாட்டிலாவது உண்டா?

ஆ.ராசா பேச்சு
இந்துவாக இருக்கின்ற வரை நீ சூத்திரன்; சூத்திரனாக இருக்கின்ற வரை நீ விபச்சாரியின் மகன்; இந்துவாக இருக்கின்ற வரை நீ பஞ்சமன்; இந்துவாக இருக்கின்ற வரை நீ தீண்டத்தகாதவன். எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்? எத்தனை பேர் தீண்டத்தகாதவர்களாக இருக்க விரும்புகின்றீர்கள்? என்கிற கேள்வியை உரக்க சொன்னால்தான் அது சனாதனத்தை முறியடிக்கிற அடிநாதமாக அமையும் என்பதை விடுதலையும் முரசொலியும் திமுகவும் திகவும் எடுக்க வேண்டிய காலம் வந்துவிட்டது என பேசியிருந்தார்.

காங். நாராயணன்
ஆ.ராசாவின் இந்த பேச்சுக்கு பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சி வலசதுசாரிகள் இடைவிடாமல் கொந்தளிப்பை காட்டி வருகின்றனர். திராவிடர் இயக்கம் தோன்றிய காலந்தொட்டு பேசிவருகிற பேச்சுதான் இது என்றாலும், இந்துக்களுக்கு எதிராக ஆ.ராசா பேசிவிட்டதாக குமுறி வருகின்றனர். காங்கிரஸின் அமெரிக்கை நாராயணன், இந்துக்களை, இழிவாகப் பேசும் மாற்று மதத்தை சேர்ந்த @dmk_raja போன்றோரின், பிரிவினைவாத பேச்சை @INCTamilNadu தலைவர்கள் @KS_Alagiri, உரத்த குரலில் கண்டிக்காமல் இருப்பது தான் @INCIndia வீழ்ச்சிக்கு முக்கிய காரணம். மதத்தின் பெயரால் ராசாவை @CMOTamilnadu கைது செய்ய வேண்டுகிறேன் என கொந்தளித்தார்.

பாஜக நாராயணன்
தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் தமது ட்விட்டர் பக்கத்தில், மு க ஸ்டாலின் அவர்களுக்கு நம் ஒரே கேள்வி - ஆ.ராசாவின் கேள்விகள் பொதுமக்களுக்கானது என்றால், மத நம்பிக்கைகளை புண்படுத்தும் வகையில் பேசிய அவர் மீது மத துவேஷத்தை யார் செய்தாலும் இரும்பு கரம் கொண்டு நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதி கூறிய தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், ஆ.ராசாவை கைது செய்து சிறையிலடைக்க உரிய நடவடிக்கை எடுத்து தான் சொன்னதை, தன் கடமையை செய்வாரா? என்றெல்லாம் கேள்வி எழுப்பபினார்.

ஆ.ராசா மீண்டும் பாய்ச்சல்
ஆனால் ஆ.ராசாவோ இதற்கும் ஒரு பதிலடி கொடுத்துள்ளார். இன்று தமது ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பாக பதிவிட்டுள்ள ஆ.ராசா, சூத்திரர்கள் யார்? அவர்கள் இந்துக்கள் இல்லையா? மனுஸ்மிருதி உள்ளிட்ட நூல்களில் ஏன் இழிவுபடுத்தப்பட்டு, கல்வி-வேலைவாய்ப்பு-கோவில் நுழைவு மறுக்கப்பட்டது. அரசியல் அதிகாரத்தாலும் - பரப்புரையாலும் 90% இந்து மக்களின் இவ்வுரிமைகளை மீட்ட திராவிட இயக்கம் எப்படி இந்துக்களுக்கு எதிரியாகும் என எதிர்கேள்வி எழுப்பி உள்ளார். இது சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

விடாத நாராயணன்..
ஆ.ராசாவின் இந்த விளக்கத்தைத் தொடர்ந்து பாஜக நாராயணன் அளித்த பதில்: மனு ஸ்ம்ரிதி என்பதே நூலே அல்ல. ஸ்ம்ரிதி என்றால் உபதேசம். நீங்கள் குறிப்பிடும் நூல் சர்.வில்லியம் ஜோன்ஸ் என்ற ஆங்கிலேயனால் திரித்து எழுதப்பட்டது. அதை படித்து ஹிந்துக்கள் மத்தியில் குழப்பத்தையும் வெறுப்பையும் வளர்த்த வெள்ளையர்களின் அடிமையான திராவிட இயக்கம் ஹிந்து விரோத கூட்டமே. இவ்வாறு மீண்டும் நாராயணன் எழுதியுள்ளார்.












Click it and Unblock the Notifications