நீங்காத நினைவுகள்... மனைவியின் மறைவால் மனம் தளரும் ஆ.ராசா... ஆறுதல் கூறும் நண்பர்கள்..!
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரி எம்.பி.யுமான ஆ.ராசா, தனது மனைவியின் மறைவால் அவ்வப்போது மனம் தளர்ந்து விடுவதாக தெரிவிக்கின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள்.
ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பல மாதங்களாக சிகிச்சை எடுத்து வந்த நிலையில் அது பலனின்றி கடந்த மே மாதம் இறுதியில் காலமானார்.
மனைவி பரமேஸ்வரியின் திடீர் மறைவு ஆ.ராசாவுக்கு மனதளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது என்றும் இன்னும் அவர் முழுமையாக அதிலிருந்து மீளவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆ.ராசா
முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக துணை பொதுச்செயலாளருமான ஆ.ராசா அரசியல் தளத்தில் மிகவும் ஆக்டிவாக இயங்கக்கூடியவர். அவரது மேடைப்பேச்சுகள் அனைத்தும், கீழிருந்து கேட்போரை நெஞ்சை நிமிர்த்தி நுனி சீட்டில் அமர்ந்து கவனிக்க வைக்கும். கட்சி நடவடிக்கைகளிலும் சரி, ஸ்டாலினுக்கு ஆலோசனைகள் கூறும் விவகாரத்திலும் சரி ஆ.ராசாவின் பங்களிப்பும் இருக்கும். பொதுவாக சென்னையில் இருந்தால் ஸ்டாலினுடன் ஒரே காரில் ஆ.ராசா பயணிப்பார்.

அண்ணா அறிவாலயம்
ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக ஆ.ராசாவின் மனதில், மனைவியின் பிரிவு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அண்ணா அறிவாலயம் வந்தாலும் கூட பட்டும் படாமலும், மனதில் சோகத்தை தாங்கிக்கொண்டு முகத்தில் மட்டும் சிரிப்பைக் காட்டிவிட்டு புறப்பட்டுவிடுகிறார். 2ஜி வழக்கில் ஆ.ராசா கடும் சோதனைகளை சந்தித்த போதெல்லாம், அவருடன் இருந்து ஆறுதலையும், தேறுதலையும் கொடுத்தவர் பரமேஸ்வரி.

அன்பு
இதனிடையே ஆ.ராசாவுக்கு அவரது அண்ணன்களின் குடும்பத்தினரும், நெருங்கிய நண்பர்களும் ஆறுதல் கூறி அவரது சோகத்தை மறக்க வைக்க முயற்சிக்கின்றனர். ஆ.ராசாவின் மனைவி மறைந்த பரமேஸ்வரியை பற்றி குறிப்பிடும் திருச்சியை சேர்ந்த பெண் வழக்கறிஞர் ஒருவர், ''ஆ.ராசா மத்திய அமைச்சராக இருந்தபோது ஒருமுறை டெல்லியில் பரமேஸ்வரியை சந்தித்திருக்கிறேன். அவரது வார்த்தைகளில் அன்பு நிரம்பியிருக்கும். என்ன சாப்பிடுவீங்க எனக் கேட்டு அதை எங்களுக்கு தயார் செய்து கொடுத்தவர். சிறிதும் கர்வம் இல்லாதவர்'' என தனது நினைவை பகிர்ந்துகொண்டார்.
Recommended Video

துணை நிற்கும்
இதனிடையே கடந்த மே மாதம் ஆ.ராசா மனைவி மரணத்தின் போது இரங்கல் தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் குறிப்பில், ஆ.ராசாவுக்கு திமுக தோள் கொடுத்து துணை நிற்கும்' எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications