வேலை வாங்கி தருவதாக பண மோசடி- சிறப்பு நீதிமன்றத்தில் இன்று செந்தில் பாலாஜி வழக்கு விசாரணை
சென்னை: தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி, அரசு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த வழக்கு விசாரணை இன்று சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.
முந்தைய அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்தார் செந்தில் பாலாஜி. அப்போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக செந்தில் பாலாஜி பணம் பெற்று மோசடி செய்தார் என்பது வழக்கு.

46 பேர் மீது வழக்கு: இது தொடர்பாக செந்தில்பாலாஜி, நண்பர்கள் பிரபு, சகாயராஜன் உட்பட மொத்தம் 46 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், உட்பட பல பிரிவுகளில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 2015-ம் ஆண்டு வழக்குகளை பதிவு செய்தனர். இந்த வழக்கு சென்னையில் உள்ள எம்.எல்.ஏ, எம்.பி.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
கூடுதல் குற்றப்பத்திரிகை: இவ்வழக்கில் ஏற்கனவே செந்தில் பாலாஜி உள்ளிட்டோரை சென்னை உயர்நீதிமன்றம் விடுவித்திருந்தது. ஆனால் உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை ரத்து செய்தது. அத்துடன் இந்த வழக்கில் செப்டம்பர் 30-ந் தேதிக்குள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தது. இதனடிப்படையில் கூடுதல் குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்திருந்தனர். அதேநேரத்தில் மேலும் சிலரை விசாரிக்க கோரியது போலீஸ்.
சிறையில் செந்தில் பாலாஜி: இதனிடையே இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விளக்கங்களுக்கு பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்திருந்தார். சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெறுகிறது. இந்த பண மோசடி வழக்கில் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் நடைபெற்றதாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் சோதனைகள் நடத்தப்பட்டு தற்போது திமுக அரசில் அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் அவர் இலாகா இல்லாத அமைச்சராக்கப்பட்டார். செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.












Click it and Unblock the Notifications