அன்பில் பொய்யாமொழியின் அடையாளமே புன்னகை தான்! நண்பன் மறைவு தினத்தில் திமுக தலைவர் பதவி ஏற்ற ஸ்டாலின்
சென்னை: திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று இன்று 5-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில், அவரது உற்ற நண்பரான அன்பில் பொய்யாமொழியின் 23-ம் ஆண்டு நினைவுநாள் அனுசரிக்கப்படுகிறது.
மு.க.ஸ்டாலினை ஆரம்பம் காலம் முதலே தலைவரே.. தலைவரே என அழைத்தவர் அவருடைய நண்பர் அன்பில் பொய்யாமொழி என்பது குறிப்பிடத்தக்கது.
தனது நண்பன் அன்று தன்னை அழைத்ததற்கேற்ப திமுகவின் தலைவராகி 4 ஆண்டு காலத்தை நிறைவு செய்து இன்று 5-ம் ஆண்டு பயணத்தை தொடங்குகிறார் ஸ்டாலின்.

தலைமுறைகள் கடந்து
திமுகவின் மூத்த முன்னோடியான அன்பில் தர்மலிங்கம் குடும்பத்திற்கும் கருணாநிதி குடும்பத்திற்கும் உள்ள நட்பானது தலைமுறைகளை கடந்தது. அந்த வகையில் அன்பில் பொய்யாமொழிக்கும், மு.க.ஸ்டாலினுக்குமான நட்பை திமுகவினர் அனைவரும் அறிவர். குடும்பம், கட்சி, அரசியல், என பலவற்றையும் ஒளிவுமறைவின்றி மனம் விட்டு பேசிக்கொள்ளும் அளவுக்கு அவர்கள் இருவருடைய நட்பு திகழ்ந்தது.

ஒயிட் அண்ட் ஒயிட்
அன்பில் பொய்யாமொழியை பொறுத்தவரை ஒல்லியான தேகத்துடன் ஒயிட் அண்ட் ஒயிட் ஆடையில் காணப்படுவார். திருச்சி கிராப்பட்டியில் உள்ள இல்லத்திற்கு தன்னை சந்திக்க வருபவர்களை சிரித்த முகத்துடன் வரவேற்று, அவர்கள் முன் வைக்கும் கோரிக்கைகளுக்கு அந்த இடத்திலேயே தீர்வு பெற்றுக் கொடுக்க முயல்வார். எம்.எல்.ஏ.வாக இருந்தாலும் சரி அடிமட்ட தொண்டனாக இருந்தாலும் சரி எல்லோரிடமும் ஒரே மாதிரி நடந்துகொள்ளக் கூடியவர் அன்பில் பொய்யாமொழி என்பது அவருடன் நெருங்கிப் பழகியவர்கள் கூறும் தகவலாகும்.

எப்போதும் சிரிப்பு
அன்பில் பொய்யாமொழியிடம் இருந்த சிறப்பு என்னவென்றால், ஏற்றத்தாழ்வு கருதாமல், பணம் - பதவி - சாதியை பார்க்காமல் தன்னை நாடி வருபவர்களிடம் உரிமையுடன் தோளில் கை போட்டு பேசுவார். சிடு சிடு வென்ற அரசியல்வாதிகளுக்கு மத்தியில் எப்போதும் புன்னகை மன்னனாக வலம் வந்தார். குறிப்பாக நூற்றுக்கணக்கான இளைஞர்களை கட்சியிலும் சரி தனிப்பட்ட முறையிலும் சரி கை தூக்கிவிட்டு உதவியவர் எனக் கூறுகிறார்கள் அவரை அறிந்தவர்கள்.

சுற்றுப்பயணம்
திமுகவில் இளைஞரணி தொடங்கப்பட்ட போது அதன் வளர்ச்சிக்காக ஊர் ஊராக மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது அவருடன் அந்தப் பயணங்களில் பங்கெடுத்தவர் அன்பில் பொய்யாமொழி. தந்தை அமைச்சராக இருந்தும், மு.க.ஸ்டாலினுடன் தனக்கு மிக நெருங்கிய நட்பு இருந்தும் என்றும் எளிமை விரும்பியாகவே வாழ்ந்தார். இன்று உயிருடன் இருந்திருந்தால் திமுகவில் பொருளாளராகவோ, பொதுச்செயலாளராகவோ ஆகியிருப்பார்.

தலைவரே என அழைத்த
மு.க.ஸ்டாலினை இன்று எல்லோரும் தலைவர் என அழைத்தாலும் அன்றே அவரை தலைவரே.. தலைவரே என வாய் நிறைய அழைத்தவர் அன்பில் பொய்யாமொழி. அவர் அழைத்தபடி திமுகவின் தலைவர் பதவியை அவரது நினைவு நாளான ஆகஸ்ட் 28-ம் தேதி அன்றே ஸ்டாலினும் பொறுப்பேற்றுக் கொண்டார்.

கே.என்.நேரு மரியாதை
இதனிடையே திருச்சியில் உள்ள அன்பில் பொய்யாமொழியின் இல்லத்துக்கு நேரில் சென்ற அமைச்சரும், திமுக முதன்மைச் செயலாளருமான கே.என்.நேரு, பொய்யாமொழியின் முழு உருவப்படத்துக்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.












Click it and Unblock the Notifications