தமிழகத்தில் தான் சாத்தியம்.. சென்னைக்கு பக்கத்துல.. முதல்வர் ஸ்டாலினுக்கே சர்ப்ரைஸ் தந்த நிறுவனம்
சென்னை: சென்னையில் முதலீட்டாளர் மாநாடு முடிந்த பின்னரும் கோடிகளில் குவிந்த முதலீடுகளை கண்டு மகிழ்ந்த தமிழக முதல்வர் ஸ்டாலின், அதனை சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சென்னையில் கடந்த 7 மற்றும் 8-ந்தேதிகளில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. மொத்தம் 631 தொழில் நிறுவனங்கள் மூலம் ரூ.6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாகின.

இந்த மாநாட்டின் மூலம் ரூ.5½ லட்சம் கோடிக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தன. ஆனால், அதையும் தாண்டி ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்து 180 கோடி முதலீடுகள் கூடுதலாக ஈர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
டாடா எலெக்ட்ரானிக்ஸ், பெகட்ரான், டிவிஎஸ் குழுமம், மிட்சுபிஷி, ஏ.பி. மோலார் மெர்ஸ்க், ஹுண்டாய், JSW, அசோக் லேலண்ட் மற்றும் வின்பாஸ்ட் ஆகிய முக்கிய நிறுவனங்களின் திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. சென்னை, கோவையை சுற்றி ஏராளமான நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. இந்த சூழலில், தூத்துக்குடியிலும் கணிசமான நிறுவனங்கள் இந்த முறை முதலீடு செய்துள்ளன.
ஜேஎஸ்டபிள்யூ நிறுவனம் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் திருநெல்வேலி, தூத்துக்குடியில் 12000 கோடி முதலீடு செய்துள்ளது. இதேபோல் டாடா பவர் எனர்ஜி நிறுவனம் 800 கோடி ரூபாய் திருநெல்வேலியில் முதலீடு செய்துள்ளது. லீப் கிரீன் எனர்ஜி நிறுவனம் 5442 கோடி ரூபாயை தூத்துக்குடியில் முதலீடு செய்வதாக கூறியுள்ளது. சிம்ப்கார்ப் நிறுவனம் தூத்துக்குடியில் 36238 கோடி முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது. மேற்கண்ட நிறுவனங்கள் எல்லாம் மின்சக்தி துறையில் தான் முதலீடு செய்துள்ளன.
அதேநேரம் ராமநாதபுரத்தில் டாடா கெமிக்கல் நிறுவனம் 1000 கோடி முதலீடு செய்வதாக கூறியுள்ளத. பின்பாஸ்ட் நிறுவனம் தூத்துக்குடியில் 16000 கோடி முதலீடு (மின்சார வாகனங்கள் துறை) செய்வதாக அறிவித்துள்ளது. ஜிண்டால் டிபன்ஸ் நிறுவனம் 1000 கோடியை திருச்சியில் முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது. உலக முதலீட்டாளர் மாநாடு முடிந்து இரண்டு வாரம் முடிந்துவிட்ட நிலையில் இப்போதும் தமிழகத்தில் முதலீடு செய்ய அதிக ஆர்வம் காட்டுகின்றன.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட பதிவில், "நம் கைகளில் எப்போதும் இருக்கும் செல்போன்களைப் பாதுகாக்கும் கொரில்லா கிளாஸ்களை உற்பத்தி செய்யும் அமெரிக்காவைச் சேர்ந்த கோரிங் இண்டர்நேஷனல் கார்ப்பரேன் (Corning International Corporation) மற்றும் இந்தியாவைச் சேர்ந்த ஆப்டிமஸ் இன்ஃபிராகாம் லிமிடெட் (Optiemus Infracom Limited) ஆகிய நிறுவனங்களின் கூட்டு நிறுவனமான பாரத் இன்னவேட்டிவ் கிளாஸ் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் (Bharat Innovative Glass Technologies Private Limited BIG TECH மற்றும் தமிழக அரசின் இடையே காஞ்சிபுரம் மாவட்டம், சிப்காட்- பிள்ளைப்பாக்கம் தொழிற்பூங்காவில், 1003 கோடி ரூபாய் முதலீட்டில் 840 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் மின்னணு சாதனங்களுக்கான கண்ணாடிப் பொருட்கள் உற்பத்தித் தொழிற்சாலை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இலக்கை நோக்கி விரைவோம்! இளைஞர்கள் துணையோடு உயர்வோம்!" இவ்வாறு கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications