"கேட்கல.. சத்தமா".. சேப்பாக்கத்தில் ஒலித்த "டிவிகே".. குஷியான விஜய் ரசிகர்களால் களைகட்டிய மைதானம்
சென்னை: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா இங்கிலாந்து இடையேயான இரண்டாவது டி-20 போட்டி நேற்று நடைபெற்ற நிலையில், திடீரென விஜய் ரசிகர்கள் டிவிகே.. டிவிகே.. டிவிகே.. என முழக்கம் எழுப்பத் தொடங்கியதால் மைதானம் விசில் சப்தத்துடன் களைகட்டியது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறது. இங்கு டி20 மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகின்றனர். முதல் டி20 போட்டியில் இந்திய அணி அதிரடியாக களமாடி வெற்றியைக் கைப்பற்றியது. இந்நிலையில், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

இந்தப் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக பில் சால்ட் மற்றும் பென் டக்கெட் களமிறங்கினர். அப்போது, பில் சால்ட் 4 ரன்களிலும், பென் டக்கெட் 3 ரன்களிலும் ஆட்டத்தை இழந்தனர். அதைத்தொடர்ந்து, கேப்டன் ஜோஸ் பட்லர் மற்றும் ஹாரி ப்ரூக் களத்தில் இறங்கினர். கேப்டன் ஜோஸ் பட்லர் பவுண்டரிகளை விளாசி அசத்தினார்.
இங்கிலாந்து அணி 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்தது. அதைத்தொடர்ந்து, 20 ஓவர்களில் 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. சஞ்சு சாம்சன் மற்றும் அபிசேக் சர்மா இருவரும் குறைந்த ரன்னிலேயே ஆட்டத்தை இழந்தனர். அவர்களுக்குப் பின்னால் வந்தவர்களும் குறைந்த ரன்னிலேயே ஆட்டத்தை இழந்து சோகத்தை ஏற்படுத்தினர்.
இந்திய அணியின் நட்சத்திர வீரர் திலக் வர்மா 55 பால்களில் 5 சிக்ஸர், 4 பவுண்டரி என அடித்தாடி 72 ரன்களைக் குவித்தார். இறுதியில் 19.2 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் குவித்து இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியடைந்தது. டி20 தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
சென்னையில் கிரிக்கெட் என்றாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். அதுவும் நீண்டநாட்களுக்குப் பிறகு நடக்கும் சர்வதேச போட்டி என்பதால் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானமே களைகட்டியிருந்தது. இந்தியா இங்கிலாந்து இடையேயான இந்தப் போட்டியைக் காண்பதற்காக சிறுவர்கள், இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைத்து தரப்பினருமே மைதானத்தில் கூடியிருந்தனர்.
கிரிக்கெட் போட்டி என்றாலே அந்த மைதானத்தில் சில ஹைலைட் சம்பவங்கள் நடப்பது வழக்கம்தான். பொதுவாக சமூக வலைதளங்கள் மட்டுமல்லாமல் கிரிக்கெட் மைதானத்திலும் விஜய் அஜித் ரசிகர்கள் சம்பவம் செய்வது வழக்கம் தான். இதே சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் கடந்த முறை இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயின் அலியிடம் அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலானது.
அதேபோல, அஜித் ரசிகர்கள் கடவுளே அஜீத்தே என்றே கோஷங்களை எழுப்பினர். இந்நிலையில், நேற்று நடைபெற்ற கிரிக்கெட் பேட்டியின்போது விஜய் ரசிகர்கள் திடீரென டிவிகே.. டிவிகே.. டிவிகே.. என்று கோஷம் எழுப்ப தொடங்கினர். இதைக் கேட்டு குஷியான விஜய் ரசிகர்கள் பலரும் டிவிகே என்று கோஷம் எழுப்பினர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications